- பூச்சிகள் என்றதும் நம் மனதில் தோன்றுவது விவசாயப் பயிர்களுக்கும் உணவுப் பொருள்களுக்கும் அவை இழைக்கும் தீங்குகளே. இருப்பினும், வேளாண் பயிர்களுக்குத் தீங்கு இழைக்கும், அதாவது Pest என்ற வரையறையின் கீழ் வரும் பூச்சிகளின் வகைகள் மிகக் குறைவு. நன்மைசெய்யும் பூச்சிகள் இருந்தால் மட்டுமே வேளாண் உற்பத்தியும் காடுகளின் பரப்பளவும் அதிகரிக்கும். தாவரம், பூச்சிகளுக்கு இடையிலான சார்புநிலையைச் சூழலியல், பரிணாம வளர்ச்சியின் கண்ணோட்டத்துடன் பார்த்தால் நமக்குப் பூச்சிகளைப் பற்றிய வேறு ஒரு புதிய புரிதல் கிடைக்கும்.
- தாவரங்களுக்கும் பூச்சிகளுக்கும் இடையிலான உறவு என்பது 40 கோடி ஆண்டுகள் பழமையானது. மகரந்தச் சேர்க்கைக்காகப் பூச்சிகளைக் கவர்ந்து இழுப்பதற்குப் பல வேதிப்பொருள்களைத் தாவரங்கள் உற்பத்தி செய்கின்றன. அதே நேரத்தில் இலை, பூ, பழம், விதை, வேர் போன்ற பாகங்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் தாவரங்கள் பல்வேறு வகையான வேதிப்பொருள்களை உற்பத்தி செய்கின்றன.
- இந்த இரண்டு வகை வேதிப்பொருள்களும் வளர்சிதை மாற்றப் பொருள் (metabolites/phytochemicals) என்றே அழைக்கப்படுகின்றன. வளரும் நாடுகளில் உள்ள 70 முதல் 95 சதவீத மக்கள் இன்றளவும் பாரம்பரியத் தாவர மருந்துகளையே நோய் நிவாரணியாகப் பெரிதும் நம்பி உள்ளனர்.தாவர மருந்து என்பது பெரும்பாலும் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து தாவரம் தன்னைக் காத்துக்கொள்ள உற்பத்தி செய்யும் வளர்சிதை மாற்றப் பொருள்களே.
அழியும் பூச்சிகள்:
- பூமியில் பூச்சி இனங்கள் தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. பூமியில் நிகழ்ந்த கடைசி இரண்டு இயற்கைப் பேரழிவுகளிலும் தப்பிப் பிழைத்த ஓர் இனமாகப் பூச்சிகள் உள்ளன. டைனசோர் காலத்தில் வாழ்ந்த பல பூச்சிகள் (தும்பி, சிலந்தி, ராமபாணப் பூச்சி -Silver Fish) இன்றும் நம்முடன் பூமியில் வாழ்கின்றன. இதுவரை பூமியில் 10 லட்சம் பூச்சி இனங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன. இருப்பினும், 1.5 லட்சம் பூச்சி இனங்கள் மட்டுமே இதுவரை அறிவியல் பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட இனங்களில் 40 சதவீதம் வண்டு இனங்களே.
- 1930க்கு பிறகு உலகம் முழுவதும் பூச்சி இனங்கள் அதிவேகமாகக் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உலகம் முழுவதும் அறியப்பட்ட பூச்சி இனங்களில் 40% அழிவின் விளிம்பில் உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
பூச்சி இல்லாத உலகு:
- உலகில் உள்ள 75% விவசாயத் தாவரங்களும் 90% காட்டுத் தாவரங்களும் மகரந்தச் சேர்க்கைக்காக பூச்சி இனங்களையே நம்பியுள்ளன. பூச்சிகள் வெகுவாக அழியும் பட்சத்தில் விவசாய உற்பத்தியானது பெரும் இழப்பைச் சந்திக்கும்; மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதன் வளர்ச்சியும் (GDP) ஈடுகட்ட முடியாத சரிவுகளைச் சந்திக்கும்; இதன் தொடர்ச்சியாக உணவுப் பொருள்களின் விலை உச்சம் தொடும். மகரந்தச் சேர்க்கையாளர்கள் (pollinators) என்று சொல்லப்படும் பூச்சி இனங்கள் இல்லை எனில், இந்த உலகமானது மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தில் சிக்கிக் கொள்ளும்.
- அது போலவே பல்வேறு தாவர இனங்களின் இருப்பு என்பது நிச்சயமற்றதாகிவிடும். மரங்களின் இழப்பு என்பது சூழலியல் தொகுதிகளிலும் பருவநிலை சுழற்சியிலும் எதிர்மறை விளைவுகளைப் பெரிய அளவில் உருவாக்கும். இது தவிர இயற்கை உணவு சங்கிலிகளில் பூச்சிகளின் முக்கியத்துவம் மிகவும் வலுவானது. இந்த இனம் அழியும் பட்சத்தில் சூழலியல் மண்டலங்களின் உறுதிப்பாடு சிதைந்துவிடும். இவை அனைத்திற்கும் மேலாகப் பல வழிகளில் மனிதக் குலம் சிறக்கப் பூச்சிகள் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
விவசாயத்தில் பூச்சிகளின் பங்களிப்பு:
- 2022இல் அமெரிக்கா, லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களின் கூட்டு ஆய்வானது மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சி இனங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் பழங்கள், காய்கறிகளின் உற்பத்தி உலக அளவில் குறையும் என்று தெரிவிக்கிறது.
- இதன் காரணமாக உலகின் பெரும்பாலான இடங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடும், அதனால் ஏற்படும் நோய்கள் சம்பந்தப்பட்ட மரணங்களும் அதிக அளவு நிகழும் சாத்தியக்கூறுகள் உள்ளன. தோராயமாக 4,27,000 மரணங்கள் இந்த வகையில் நிகழலாம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
- தற்சார்பு, நிலைத்த விவசாயம் பற்றிப் பேசும் நாம் இன்றளவும் அதற்குப் பெரிதும் உதவும் பூச்சிகளின் முக்கியத்துவம் பற்றி அறியாமல் இருப்பதும், அவற்றைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும் வேதனைக்குரிய விஷயமே.
மருந்து வகைகள்:
- உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் இன்றளவும் பல நோய்களுக்கு நிவாரணமாகப் பூச்சிகளையே நம்பி உள்ளனர். பூச்சிகளின் உடம்பில் உள்ள பல வேதிப் பொருள்கள் மருத்துவ குணம் நிரம்பியதாக உள்ளன. இது தொடர்பாக மருந்தியல் சார்ந்த பூச்சியியல் (pharmaceutical entomology) என்று ஒரு தனித் துறையே செயல்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட வேதிப்பொருள்களைப் பூச்சிகளின் உடலிலிருந்து பிரித்து எடுத்து, அதன் மருத்துவப் பயனை ஆராய்ந்து வருகிறார்கள்.
பூச்சிகளைப் பாதுகாக்க...
- பல நன்மை பயக்கும் பூச்சிகள் இவ்வுலகில் உள்ளன. அவை பல்வேறு வழிகளில் மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் சூழலியல் மண்டலங்களுக்கும் பெரும் நன்மைகளைச் செய்துவருகின்றன. ஆனால், நம்முடைய தவறான வேளாண் கொள்கைகள் (வேதி உரம், பூச்சிக் கொல்லிகளை இடுதல்), காடுகளை அழித்தல், நகரமயமாதல், ஒளி மாசு, நீர்நிலைகளில் ஏற்படும் மாசு, காலநிலை மாற்றம் போன்றவை பூச்சி இனங்களுக்குப் பெரும் பாதிப்புகளை உருவாக்கி வருகின்றன.
- கொள்கை ரீதியாகப் பல முடிவுகளை எடுக்கவேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து அழியும் நிலையில் உள்ள பூச்சிகள் பற்றிய பட்டியலைத் தயாரித்து வெளியிட வேண்டும். பூச்சிகளுக்கு நேரடியாகத் தீங்கிழைக்கும் வேதிப் பூச்சிக் கொல்லிகள், நீர்நிலை மாசு போன்ற பிரச்சினைகளுக்குத் தகுந்த அறிவியல்பூர்வமான தீர்வு காணப்பட வேண்டும். ஆதார உயிரினங்களான சிங்கம், புலி, யானை போன்றவற்றைப் பாதுகாக்கக் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தைப் பூச்சிகளைப் பாதுகாப்பதற்கும் கொடுக்கப் பட வேண்டும்.
- அரசு மட்டுமின்றி மக்களாகிய நாமும் சில முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். குறிப்பாக, நமது வீடுகளைச் சுற்றி அதிகம் வண்ணப் பூக்கள் பூக்கும் செடிகளை வளர்ப்பதன் மூலமும் அதிக ஒளி உமிழும் விளக்குகளை வெளிப்பகுதிகளில் தவிர்ப்பதன் மூலமாகவும் பல பூச்சி இனங்களைப் பாதுகாக்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 08 – 2023)