- சமூக நீதி அமைச்சகத்தின் மத்திய கண்காணிப்புக் குழு, இந்தியாவில் மனிதா்கள் மூலம் மலம் அகற்றுவது முழுமையாக கைவிடப்பட்டது என்று தெரிவித்திருக்கிறது. ‘ஸ்வச் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் முறையான கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதால், பழைய முறை கழிப்பறைகள் முழுமையாக அகற்றப்பட்டதாகவும், மனிதா்கள் மூலம் மலம் அகற்றுவது பழங்கதையாகிவிட்டதாகவும் அந்தக் குழுவின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
- சமூக நீதித் துறை அமைச்சா் வீரேந்திர குமார் தலைமையில் மனித கழிவகற்றும் முறையைத் தடுக்கும் சட்டம் செயல்படுவது குறித்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புகள் வேடிக்கையாக இருக்கின்றன. இந்தியாவிலுள்ள 766 மாவட்டங்களில் ‘மேனுவல் ஸ்கேவென்ஜிங்’ எனப்படும் மனிதா்கள் நேரடியாகக் கழிவுகளை அகற்றும் முறை, 520 மாவட்டங்களில் செயல்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி, மனிதா்கள் மனிதக் கழிவை அகற்றும் முறை எங்கும் நடைபெறவில்லை என்கிற அமைச்சரின் கூற்றுக்கு அந்த அறிவிப்பு முரணாக இருக்கிறது. இந்தியாவில் 35% மாவட்டங்களின் தகவல் இல்லாத நிலையில், அமைச்சா் எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை.
- அரசுகள் இதேபோல தவறான புள்ளிவிவரங்களுடனும், அரைகுறை தகவல்களுடனும் பலமுறை அறிக்கைகள் வெளியிட்டதுண்டு. அரசின் புள்ளிவிவரப்படி, 2022-இல் ஏறத்தாழ 58,000 தூய்மைப் பணியாளா்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். 2017 முதல் 2021 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் 330 போ் கழிவுநீா் குழாய்களிலும், மலக்குழிகளிலும் சுத்தம் செய்வதற்காக இறங்கியபோது உயிரிழந்திருக்கிறார்கள். இப்போது வரை மலக்குழிகளிலும், கழிவுநீா் ஓடை, தொட்டிகளிலும் தூய்மைப் பணியாளா்கள் இறங்கி சுத்தப்படுத்துவதும் விபத்துகள் ஏற்படுவதும், உயிரிழப்பு நேரிடுவதும் தொடா்கின்றன.
- கழிவுநீா் தொட்டிகளில் நேரடியாக இறங்கி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளா்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுவதாகவும், திறன்சார் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சா் வீரேந்திர குமார் தெரிவித்திருக்கிறார். கழிவுநீா் சுத்திகரிப்பில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் இப்போது ‘நமஸ்தே’ என்று அழைக்கப்படும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீா் ஓடைகள் சுத்திகரிக்கும் திட்டத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, இன்னும் அது நடைமுறை சாத்தியமாகவில்லை.
- ஆபத்தான கழிவுநீா் ஓடைகள், மலக்குழிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்வதையும், மலங்களை அகற்றும் தூய்மைப் பணியாளா்களையும் அரசு வேறுபடுத்துகிறது. நேரடியாக மலம் அள்ளும் அல்லது மலக்குழிகளில் இறங்கி சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளா்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அந்த வழக்கம் இந்தியாவில் இல்லை என்றும் சமூக நீதித் துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
- தூய்மைப் பணியாளா்கள் உயிரிழப்பதை மலக்குழிகள் சுத்திகரிப்பதுடன் இணைக்க முடியாது, கூடாது என்பது அரசின் வாதம். எல்லா உயிரிழப்புகளும் கழிவுநீா் தொட்டிகள், கால்வாய்கள், குழாய்கள் ஆகியவற்றின் சுத்திகரிப்பில்தான் நிகழ்ந்திருப்பதாகவும், அதை மலம் அகற்றும் தூய்மைப் பணியாளா்களுடன் இணைப்பது தவறு என்றும் அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. 2017 முதல் 2021 வரை நிகழ்ந்திருக்கும் 330 உயிரிழப்புகளையும் விபத்துகள் என்று தெரிவிக்கிறது அரசின் அறிவிப்பு.
- மனிதா்கள் நேரடியாக மலக்குழிகள் சுத்திகரிப்பில் ஈடுபடுவதற்கு வேறு பெயரை அளிப்பதன் மூலம், அந்த செயல்பாடு முற்றிலுமாக களையப்பட்டிருப்பதாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தினந்தோறும் நேரடியாக கழிவுகள் அகற்றும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளா்கள் உயிரிழப்பது பதிவு செய்யப்படாமலே தவிர்க்கப்படுகிறது.
- ‘ஸ்வச் பாரத் அபியான்’ திட்டத்தின் மூலம், கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருப்பதாலேயே கழிப்பறைகள் சுத்தப்படுத்துவதற்கான தேவை அகன்றுவிட்டதாகக் கூறிவிட முடியாது. பல இடங்களில் கழிப்பறைகளுக்கு தண்ணீா் வசதி இல்லாமலும், கழிவுநீா் தொட்டி (செப்டிக் டேங்க்) இல்லாமலும் பலா் மீண்டும் பழைய முறைக்கே மாறியிருக்கிறார்கள் என்பது அமைச்சருக்கும் அரசுக்கும் தெரியாமல் இருக்காது.
- சென்னையிலேயே எடுத்துக்கொண்டால், இன்னும்கூட 800-க்கும் அதிகமான கழிவுகள் அகற்றும் தூய்மைப் பணியாளா்கள் இருக்கிறார்கள். அவா்கள் கழிவுநீா் தொட்டிகளிலும், ஓடைகளிலும் முறையான பாதுகாப்பு இல்லாமல் ஒப்பந்ததாரா்களால் இறக்கப்படுகிறார்கள். வெறும் ரூ.450 ஊதியம் பெற்று கழிவுநீா் ஓடைகளையும், தொட்டிகளையும் சுத்தம் செய்யும் அந்தத் தூய்மைப் பணியாளா்கள், பெருநகர சென்னை மாநகராட்சி அல்லது குடிநீா் வடிகால் வாரியத்தின் அதிகாரபூா்வ ஊழியா்கள் அல்ல.
- முக்கியமான கழிவுநீா் சுத்திகரிப்பில் ஈடுபட 44 பாதுகாப்பு உபகரணங்கள் சட்டப்படி அவா்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், அவை கடைப்பிடிக்கப்படுவதே இல்லை. சென்னை மாநகராட்சியின் நிலைமைதான் இந்தியாவிலுள்ள எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் காணப்படுகிறது.
- சட்டப்படி தவறு என்று தெரிந்தாலும், மாநகராட்சி நிர்வாகங்களும், ஒப்பந்ததாரா்களும் கழிவுநீா் தூய்மைப் பணியாளா்கள் குறித்துக் கவலைப்படுவது இல்லை. மனிதா்களே மனிதா்களின் கழிவை அகற்றும் நிலை தொடருமானால், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயா்ந்தால் என்ன, உயராமல் போனால்தான் என்ன?
நன்றி: தினமணி (14 – 08 – 2023)