- 2010ஆம் ஆண்டு தொடங்கி பூமியின் உள்கருமையத்தில் உள்ள திடநிலை உள்-உள்ளகச் சுழற்சி வேகம் குறைந்துவருகிறது எனவும், தற்போது பூமியின் மேலோட்டுச் சுழற்சி வேகத்தைவிடவும் குறைவாக உள்ளதால், உள் உள்ளக அடுக்கு பின்னோக்கிச் செல்வது போன்ற தோற்ற மயக்கம் ஏற்படுகிறது எனவும் புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- யுஎஸ்சி டோர்ன்சிஃப் காலேஜ் ஆஃப் லெட்டர்ஸ், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் புவி அறிவியல் பேராசிரியராக உள்ள ஜான் விடேல் உடன் சீன அறிவியல் அகாடமியின் வெய் வாங் இணைந்து இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, மரபான ஊடகங்கள் உள்பட பற்பல சமூக ஊடகங்களில் ‘பூமியின் உட்புறம் எதிர்த்திசையில் சுழல்கிறது’ என்ற தவறான செய்தியைப் பரப்புகின்றனர். இதுதான் இன்னும் சிக்கல்.
முன்னால் பின்னால்:
- நீண்ட நெடிய நெடுஞ்சாலையில் உங்கள் கார் மித வேகத்தில் செல்கிறது என வைத்துக்கொள்வோம். உங்களுக்கு முன்னே வேறொரு கார் சென்றுகொண்டிருக்கிறது. அந்த காரின் வேகம் உங்களைவிட அதிகம் என்றால், அந்தக் கணத்தில் உங்களுக்கு முன்னே செல்வது போன்ற உணர்வு ஏற்படும். உங்கள் வேகத்தைவிடக் குறைவாக அந்த கார் ஓட்டுநர் வேகத்தைக் குறைத்துவிட்டால், அந்த கார் உங்களை நோக்கி வருவது போன்ற தோற்றம் ஏற்படும்.
- வேகமாகச் செல்லும் நீங்கள் சற்று நேரத்தில் அந்த காரை எட்டிப் பிடித்து முந்திவிடுவீர்கள். முந்திச் சென்ற பிறகு அந்த கார் பின்னோக்கிச் செல்வது போன்ற தோற்றம் ஏற்படும். உங்கள் காரின் வேகத்தைவிட மெதுவாகச் செல்வதால் ஒவ்வொரு நொடியும் இரண்டு கார்களின் இடையே இடைவெளி கூடும்; எனவே, அந்த கார் உங்களை விட்டுப் பின்புறமாகச் செல்வது போன்ற தோற்றம் ஏற்படும்.
- இதுதான் பூமியின் உள்ளேயும் நடைபெறுகிறது. பூமியின் மேலோடும் உள் உள்ளகமும் மேற்கிலிருந்து கிழக்காகத்தான் சுழல்கின்றன. ஆனால், மேலோட்டுச் சுழல் வேகத்துடன் ஒப்பிடும்போது, உள் உள்ளகச் சுழற்சி வேகம் குறைவு; எனவே, பின்புறமாகச் சுழல்வது போன்ற தோற்ற மயக்கம் ஏற்படும்.
பூமியின் அமைப்பு:
- வெங்காயம் போல அடுக்கு அடுக்கான அமைப்பைக் கொண்டது பூமி. இதன் மேல் அடுக்கு மேலோடு எனப்படுகிறது. இதில்தான் எல்லாக் கண்டங்களும் கடல்களும் உள்ளன. இதன் அடியில் மூடகம் எனும் அடுக்கும், அதன் உள்ளே மேல் உள்ளகம், உள் உள்ளகம் என்கிற இரண்டு அடுக்குகளும் உள்ளன.
- இரும்பு, நிக்கல் போன்ற உலோகச் செறிவு கொண்ட உள் உள்ளகம் சற்றேறக்குறைய திட நிலையில் பூமியின் மையத்தில் உள்ளது எனவும், வெளி உள்ளகம் திரவ நிலையில் உள்ளது எனவும் மூடகத்தின் மேற்பகுதி குழம்பு நிலையில் உள்ளது எனவும் நிலவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
உள் உள்ளகம்:
- இருபத்து நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது; இது உள்ளபடியே மேலோட்டுச் சுழற்சி வேகம் மட்டுமே. அடியில் உள்ள அடுக்குகள் வெவ்வேறு வேகத்தில் சுழல்கின்றன எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, உள் உள்ளகச் சுழற்சியை நாம் நிலநடுக்க அலை பரவும் பாங்கிலிருந்து மதிப்பிடலாம்.
- சற்றேறக்குறைய நிலவின் அளவைவிட உள் உள்ளகம் பெரிது. தட்டிப்பார்த்து ஒலிக்கும் ஒலியை வைத்துத் தேங்காயின் தன்மையை அறிவதுபோல நிலநடுக்க அலைகள் உள் உள்ளகம் வழியே கடந்து சென்று பூமியின் மறுபுறம் சென்று சேரும் பாங்கை வைத்து உள் உள்ளகத்தின் தன்மையை அனுமானிக்கலாம்.
- ஆண்டுக்குச் சுமார் ஐந்து என்கிற வீதத்தில் அண்டார்க்டிகாவில் உள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளில் 1991 முதல் 2023 வரை திரும்பத் திரும்ப 121 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றின் வீச்சளவு சற்றேறக்குறையச் சமமாக இருந்தது. இந்த நிலநடுக்க அலைகள் பூமியின் ஊடே பரவி, மறுமுனையில் உள்ள அலாஸ்காவில் உள்ள நிலநடுக்க அளவைமானிகளில் பதிவானது.
- அலைகளின் பாங்கில் சில ஒற்றுமைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் இனம் கண்டனர். எடுத்துக்காட்டாக 2003 மார்ச் 5; 2009 மே 2; 2020 பிப்ரவரி 14 ஆகிய நாள்களில் உருவான நிலநடுக்க அலைகளின் அமைப்பு அச்சு அசலாக ஒன்றுபோல இருந்தன. அதேபோல 2002 ஜூலை 18, 2009 மே 5, 2022 செப்டம்பர் 10 ஆகிய மூன்று நாள்களும் ஒரே அலை பாங்கைக் கொண்டிருந்தன.
- பூமியின் மேலோட்டின் மேலே மலை, மடு என ஏற்ற இறக்கம் உள்ளதுபோலத் திட நிலையில் உள் உள்ளகத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அவைதான் இந்த அலையின் பாங்கைத் தீர்மானம் செய்கின்றன என்பதைக் கண்டனர். குறிப்பிட்ட பாங்கைக் கொண்ட அலை உருவாகிறது என்றால், அப்போது குறிப்பிட்ட உள் உள்ளகப் பகுதி சாண்ட்விச் தீவுகளை நோக்கியிருந்தது என்று பொருள்.
- இது போன்ற தடயங்களைக் கொண்டு உள் உள்ளகத்தின் சுழலும் வேகத்தைக் கணக்கிட்டனர். கடந்த 40 ஆண்டுகளாக மேலோட்டைவிடச் சற்று வேகமாகச் சென்றுகொண்டிருந்த உள் உள்ளகம் தற்போது வேகம் குறைந்து சுழல்கிறது என இதில் தெரியவந்துள்ளது.
விளைவு என்ன?
- உள்ளகம் சுழல்வதனால்தான் பூமிக்குக் காந்தப்புலம் ஏற்படுகிறது; எனவே, சற்றே மெதுவான சுழற்சியின் காரணமாகக் காந்தப்புல வீச்சு சற்றே குறையலாம். மேலும், சற்றே மெதுவாகச் சுழலும் உள் உள்ளகம் அதன் மேலே உள்ள அடுக்குகளின் சுழற்சி வேகத்தைச் சற்றே மட்டுப்படுத்தும்.
- எனவே, பூமியின் சுழலும் வேகம் இதனால் சற்றே குறைந்து, அது தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் வேகம் ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒரு பகுதி என்கிற மிக நுணுக்கமாக அளவுக்கு அதிகரிக்கலாம். ஆனால், கடல் - வளிமண்டல உராய்வு காரணமாக பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாறுபாட்டில் இது மிகமிக நுணுக்கமானது என்பதால் பொருட்படுத்தத் தேவையில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 07 – 2024)