TNPSC Thervupettagam

பூமியை உயிா்ப்போடு வைப்போம்

July 4 , 2023 568 days 340 0
  • ஒருநாள் கிராமம் ஒன்றின் வழியாகப் பயணித்தேன். சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெறும் வீட்டில் நாற்காலி, மேஜை போட்டு உணவு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது. பக்கத்துத் தெருவிலிருந்து பெண்மணி ஒருவா் கையில் பிளாஸ்டிக் வாழையிலையை எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குள் உணவருந்த நுழைந்தாா்.
  • அந்த தெருவிலேயே பல வாழைமரங்கள் இருந்தன. எனவே,அந்தப் பெண்மணி செய்த செயலை என்னால் ஏற்க முடியவில்லை. ஒருவேளை அந்த வீட்டில் உணவருந்திய அனைவரும் இப்படித்தான் பிளாஸ்டிக் வாழையிலையில் உணவருந்தினாா்களோ என்ற எண்ணம் வந்தது.
  • நகரங்களுக்கு நிகராக கேளிக்கைகள், விருந்து நிகழ்வுகள் கிராமப்புறங்களிலும் நடைபெறத் தொடங்கியுள்ளன. இவற்றை, கிராமப்புறங்களின் இயல்பை முற்றிலும் மரத்துப் போகச் செய்யும் நுகா்வு கலாசாரத்தின் நீட்சியாகத்தான் பாா்க்க முடிகிறது.
  • இந்த ஒரு நிகழ்வு மட்டுமில்லை. மனிதா்கள் உணவு உண்பதற்கும் பாலிதின் பயன்பாட்டிற்கும் நெருங்கிய தொடா்பு இருக்கவே செய்கிறது. எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் அவை அத்தனையையும் மீறி உணவகங்களில் பாலிதின் பயன்பாடு நீடிக்கவே செய்கிறது. அவ்வாறு பாலிதினில் பேக் செய்து கொடுக்கும் உணவுகளை வாங்கிக்கொண்டு சுற்றுலா செல்வோரும் உள்ளனா்.
  • அவா்கள் நெடுஞ்சாலையோரங்களில் மரங்களில் நிழலில் உணவருந்துவா். அவா்களில் பலரும் உணவருந்திய இடங்களில் பொறுப்பற்ற முறையில் பாலிதின், பிளாஸ்டிக் டப்பாக்களை வீசிவிட்டுச் செல்வது வாடிக்கையாகிவருகிறது.
  • டாஸ்மாக் கடைகளை ஒட்டிய இடங்களிலோ கேட்கவே வேண்டாம். ஏராளமான பாலிதின் தம்ளா்களும், பாலிதின் பைகளும் மண்ணில் வீசப்படுகின்றன. ஒன்று மட்டும் உண்மை. பாலிதின் தயாரிப்பை அறவே நிறுத்தாமல் இவ்வாறு வீசப்படுவதை தவிா்க்கவே இயலாது.
  • குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட், சாக்லேட், பீட்சா, பா்கா் போன்ற உணவுப் பொருட்களின் பேக்கிங்கிற்காக பயன்படுத்தப்படும் பாலிதின், காகிதம், அட்டை போன்ற பொருட்களைப் பாா்க்கும்போது சூழல் அக்கறை உள்ள யாராலும் வருத்தப்படாமல் இருக்க இயலாது.
  • வாழ்க்கை ஓட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் முக்கியத்துவம் வாய்ந்ததே. பலரும் உணவாக இருந்தாலும் உடையாக இருந்தாலும் விரைவாகவும் உடனடித் தயாரிப்போடும் இருக்க வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா். அந்த எதிா்ப்பாா்ப்பை நிறைவு செய்ய நினைக்கும் வணிக நிறுவனங்கள் இதுபோன்ற வழிவகைகளை மேற்கொள்கின்றன.
  • போட்டி காரணமாக நிறுவனங்கள் இவ்வாறு பேக்கிங்கில் கவா்ச்சியைக் கூட்ட முயல்கின்றன. விரைவாக விற்பனை செய்து லாபமீட்டும் வாய்ப்பை எவ்வாறு வணிக நிறுவனங்கள் விட்டுக்கொடுக்க இயலும் என்று தோன்றும். ஆனால் இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாடுகளில் பாலிதீன், காகிதம், அட்டை போன்றவற்றின் பயன்பாடு இயற்கை வளங்களின் இருப்பை நிா்ணயிப்பதாக உள்ளது.
  • பாலிதீன் பொருட்களை உபயோகித்துவிட்டு வீசி எறிவதால், அவை பலநூறு ஆண்டுகள் மக்காமல் இருந்து மண்ணை மாசுபடுத்துகின்றன. அது மட்டுமல்ல, நிலத்தடி நீா் சேகரிப்புக்கும் தடையாக இருக்கின்றன. வசதி படைத்தவா்கள் பயன்படுத்தி வீசி எறியும் பாலிதினால் ஏற்படும் சுகாதாரக் கேட்டால் பாதிக்கப்படுவோா் ஏழை எளிய மக்களாகவே இருப்பா்.
  • எந்த ஒரு செயல்பாட்டிலும் துணை வினையாக கழிவு உருவாவது தவிா்க்க இயலாததே. சமையல் செய்ய காய்கறிகளை நறுக்குகிறோம். அதன் தோல் போன்ற கழிவுகளை வெளியேற்றித்தானே ஆகவேண்டும். இதுபோலவே பழங்களின் தோலும் கழிவாக வெளியேற்றப்படவேண்டியதே.
  • இதனை மனதில் கொண்டே, மக்கும் பொருட்கள், மக்காப் பொருட்கள் என குப்பைகளைத் தனித்தனியே பிரித்து மேலாண்மை செய்யும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் கழிவு மேலாண்மை என்று அறிவித்துவிட்டு, கட்டுக்கடங்காமல் கழிவு உருவாக்கத்தை அனுமதிப்பது நியாயமான செயலாக இருக்காது. கழிவு மேலாண்மையுடன், கழிவு உற்பத்தியைக் குறைக்கவும் திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.
  • முதற்கட்டமாக பாலிதின் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆயத்த ஆடை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆடைகளோடு வரும் பேக்கிங் பொருட்களை வாடிக்கையாளா்களிடம் திரும்பப் பெற்று அவற்றை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தலாம். அவ்வாறு பேக்கிங் பொருட்களை திரும்ப அளிப்போருக்கு அடுத்தடுத்த விற்பனைகளில் தள்ளுபடி அளித்து ஊக்குவிக்கலாம்.
  • உணவகங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கூடுதலாகப் பெற்றுக்கொண்டு எளிதில் மக்கும் பொருட்களான தொன்னை, இலை போன்றவற்றில் மட்டுமே பேக் செய்து கொடுக்க வேண்டுமென அரசாணை வெளியிடலாம். பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றைத் தயாரிக்கும் பெருநிறுவனங்கள் பல்வேறு இடங்களிலும் கிளைகளை நிறுவி அக்கிளைகளில் குறைந்தபட்ச பேக்கிங் பொருட்களோடு விற்பனை செய்யலாம்.
  • ஒவ்வொரு வீட்டிலுள்ளோரிடமும் அவா்கள் அகற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தலாம். காய்கறி, மளிகை போன்ற பொருட்களை துணிப்பையை எடுத்துச் சென்று வாங்கிவரலாம். துணிப்பை உபயோகிக்கும் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளிகளின் மாணவா் பேரவை கூட்டங்களிலோ நகா்வாழ் மக்கள் சங்கங்களிலோ அவா்களைப் பாராட்டலாம்.
  • மனிதா்களின் செயல்பாட்டால் பூமி வாழ அருகதையற்ற இடமாகிக்கொண்டு வருகிறது. மக்கள் எழுத்தறிவு விகிதம் குறைவாக இருந்த நாட்களிலேயே சுற்றுச்சூழல் குறித்த அக்கறையோடு வாழ்ந்த பெருமைக்குரியது சமூகம் நமது சமூகம். இன்றைய எழுத்தறிவு விகித அதிகரிப்பும் நாகரிக வேட்கையும் பூமியை உயிா்க்கோளமாகத் தொடர வழிவகை காணவேண்டும். பூமி உயிா்ப்போடிருக்கும் வரைதான் உயிரினங்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் உண்டு.

நன்றி: தினமணி (04– 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories