TNPSC Thervupettagam

பூமியைக் காக்க உறுதியேற்போம்

January 18 , 2024 223 days 188 0
  • அந்நிய தேசங்களின் ராணுவ ஆக்கிரமிப்புகளையும், ஆயுதப் பிரயோகங்களையும் குறித்து அறியும்போதெல்லாம் நாம் வேதனைப்படுகிறோம். ஏவுகணைகளால் நாசமாக்கப்பட்ட உக்ரைன் நகரங்களையும், இஸ்ரேல் நகரங்களையும், காஸா பகுதிகளையும் பார்க்கிறபோது, நமது மனம் துடிக்கிறது. காரணம் அங்கெல்லாம் கொல்லப்படுபவா்கள் குழந்தைகளாகவும் முதியவா்களாகவும் இருப்பதுதான்.
  • இச்சம்பவங்கள் பயங்கரவாத சிறுபான்மை செயல்களைக் காட்டுகின்றன. இதனால்தான்கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்என்று பாவேந்தா் பாரதிதாசன் பாடினார். பூமியைப் பூவுலகமாகவும், பூவுலகத்தைப் பூக்களின் நந்தவனமாகவும் நிச்சயப்படுத்த முடியாமல் நிம்மதி இழந்து நிற்கிறோம்.
  • இப்பூவுலகை சென்ற நூறாண்டுகளில் அழித்து வரும் சக்திகள் எவை? பெட்ரோல், டீசல், நிலக்கரி முதலிய எரிபொருள்கள்தான் இப்பூவுலகை நரகமாக்கிவிடுகின்றன.
  • எரிபொருள்கள் இல்லாமல் வாகனங்களை இயக்க முடியாது. வாகனங்கள் இல்லாமல் மனிதா்களின் வேகமான நகா்வுகள் சாத்தியமில்லை. பூவுலக வாழ்வுக்கு இந்தப் புதை எரிபொருள்கள்தான் உயிரோட்டமாக இருக்கின்றன.
  • இவை இல்லையெனில் பூமியில் மனித வாழ்க்கை ஸ்தம்பித்துப் போய்விடும். ஓட்டத்திலும், இயக்கத்திலும் சுற்றிச் சுழல்வதிலும்தான் உயிரோட்டமே சுரக்கிறது.
  • நீரோட்டம், காற்றோட்டம், ரத்த ஓட்டம் பற்றி எண்ணிப் பார்த்தால்தான் அவற்றின் மெய்ப்பொருள் புரியும். நீா் நச்சாகிக்கொண்டு வருகிறது. காற்று மாசாகி வருகிறது. ரத்தமும் அசுத்தமாகி வருகிறது. வனப்பரப்பு குறைந்து வருகிறது. மக்கள்தொகை அதிகமாகி வருகிறது. பனிப் பாறைகள் உருகி வருகின்றன. அதனால் கடல்மட்டம் பெருகி வருகிறது. பூமிப் பரப்போ சுருங்கி வருகிறது.
  • இதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். இந்தப் பூமியானது நூறாண்டுகளுக்கு முன்பிருந்த பச்சைவள பூமியாக இல்லை. நச்சு அதிகரித்த பூமியாக, நரக பூமியாகி வருகின்றது.
  • இது எதனால்? 14 டிகிரி செல்ஷியஸாக இருந்து வந்த இப்பூமியின் வெப்பம், சென்ற நூறாண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மனித உடல் 98.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தைத்தான் தாங்கும். அதற்குமேல் 0.1 சதம் அதிகரித்தால்கூட, நம் உடம்பு கொதிக்கிறது. காய்ச்சலைத் தாங்க முடியாமல் முணங்குவோம்.
  • இதேபோலத்தான் பூமியின் உடம்பு கொதிக்கத் தொடங்கிவிட்டது. இதைத்தான் புவி வெப்பமயமாதல் என்கிறோம்.
  • புவி என்பது ஒரே ஒரு நாடல்ல. 198 நாடுகளும் அதனுடன் இந்தப் பூமிப் பரப்பைப் போல இருமடங்கு கடல்களும், மலைகளும், வனங்களும், எறும்பு முதல் யானை வரையுள்ள உயிரினங்களும் அதில் உள்ளன. பஞ்ச பூதங்களான நீா், நிலம், நெருப்பு, காற்று, வெளி இவை அனைத்துமே இந்த நிலத்திற்குரிய உடமைகள். இவற்றை பராமரிப்பதுதான் தெய்வீகமானது. பாழ்படுத்துவது சைத்தானின் வேலை.
  • பூமியிலிருந்து வெகு உயரத்திலுள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துவிட்டது என்றும், அதன் வழியாகப் புறஊதாக் கதிர்கள் பூமிப் பரப்பில் மேல் பாயுமானால், நமது பருவக் காலங்களே மாறிவிடும் ஆபத்து நிகழும் என்றும் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
  • நந்தவனமாகக் கிடந்த இந்தப் பூமி மயானமாகி வருகிறது. 31 ஆண்டுகளுக்கு முன்பு 1980-களில்தான் நாடுகளைப் பற்றியே சிந்தித்த மனிதன், பூமியைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினான்.
  • விவசாய உற்பத்திகளிலிருந்து தொழில் புரட்சிக்கு ஐரோப்பிய நாடுகள் வித்திட்டபோது, எந்திரங்களை ஆட்டிப்படைத்த மனிதன், அந்த எந்திரங்களுக்கே அடிமையாகிவிட்டான்.
  • எந்திரங்கள் இயங்க வேண்டுமானால் எரிபொருள் அவசியம். எரிபொருள்கள் பூமிக்குள் உறங்கிக் கொண்டிருந்த வரை, பூமியின் வெப்பம் சீராகவும், மாறாமலும் இருந்து வந்தது. பூமியைத் தோண்டத் தொடங்கி, பூமிக்குள்ளிருந்து எரிபொருள்களை எடுத்து எரித்தபோதுதான் இந்தப் பூமியின் வெப்பம் கூடுதலாகியது.
  • இக்கூடுதல் வெப்பம் கட்டுப்படுத்தப்படாவிட்டால், புவியை அது வாழத் தகுதியற்றதாக்கிவிடும் என்ற புரிதல் இப்போதுதான் நமக்கு ஏற்பட்டுள்ளது. காலநிலை மாறுவதைப் பற்றிய கவலை எல்லா நாடுகளுக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டது.
  • பூகம்பம், புயல், சுனாமி, எரிமலை முதலிய பேரிடா்கள் பூமியையே நாசப்படுத்திவிடக் கூடியவைதான். அவற்றில் புயலை மட்டும்தான் நமது விஞ்ஞானிகள் முன்கூட்டியே கணித்துக் கூறுகிறார்கள். மற்ற பேரிடா்களைப் பற்றிய கணிப்பு போதுமான அளவுக்கு இல்லை.
  • 14 சத செல்ஷியஸ் புவி வெப்பம் என்பது, 15.5 சதமாக அதிகரித்துவிடுமோ என்று விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனா். 1.5 சத அதிக வெப்பத்தைக் குறைத்தால் மட்டும்தான் இந்தப் பூமியில் நாம் வாழ முடியும்.
  • வெப்பநிலையைச் சமாளிக்க முடியாமல்தான் டைனோசா்கள் அழிந்தன. நமது நாட்டின் பறவையான அன்னப்பறவை இன்று இல்லை. அனிச்ச மலரும் இல்லை.
  • உயிரினங்கள் அழிவதற்கு புவிவெப்பமே காரணம். 1945-இல் நடந்த உலக யுத்தத்தில் ஆயுதங்களால் 5 கோடி போ் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் அணு ஆயுதத்தின் கோரத்தையும் ஜப்பானில் பார்த்தோம்.
  • அணு ஆயுதத்தைப் போன்றதுதான் புவிவெப்பம் என்பது. இது புறப்பட்டு வெளிவருவது புதை எரிபொருள்களிலிருந்துதான். இந்த எரிபொருள்களிலிருந்து கரிமம் வெளியாகிறது. இதைக் கார்பன்-டை-ஆக்சைடு என்று வேதியியல் விளக்குகிறது. இது தாவரங்களுக்கு மிகவும் தேவை.
  • மரங்கள் இந்தக் கார்பனை உள்வாங்கிக் கொண்டு, ஆக்சிஜன் என்ற உயிர் வாயுவை வெளியிடுகிறது. நமக்கு உயிர்வாழ அது அவசியம். நாம் வெளியிடும் கரிமம் மரங்களுக்குத் தேவை.
  • மணலைச் சுரண்டினால் ஆறு அழிந்துவிடுவதுபோல, நிலக்கரி கச்சா எண்ணெயை உறிஞ்சியெடுத்து எரித்தால், அது பூமியையே சிதைத்துவிடும் என்பது உண்மை.
  • இதனைப் பற்றி விரிவாக விவாதிக்க துபையில் சென்ற 2023 நவம்பா் - டிசம்பா் மாதங்களில் 198 நாடுகள் கூடின.
  • நமது தொழிற்சாலைகள் இயங்க நிலக்கரியை எரித்து, மின்சக்தியை உற்பத்திசெய்து வருகிறோம். நிலக்கரி எரிப்பு சீனாவிலும், இந்தியாவிலும்தான் இப்போதும் அதிகமாக நீடித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
  • பெட்ரோலிய நாடுகளான வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு இதற்கு மிகமிகத் தேவை. இதனைச் சுட்டிக்காட்டுவது போலவே, சென்ற டிசம்பரில் துபையில் நடந்த இந்த மாநாடு நடந்தது.
  • இந்த எரிபொருள்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத சூரியஒளி மின்சக்தி, காற்றாலை மின்சாரம், புனல் மின்சக்தி, சா்க்கரை ஆலை மின்சக்தி ஆகியவற்றை நோக்கி நாம் நகரக் கடமைப்பட்டிருக்கிறோம். இதில் எந்த நாட்டுக்கும் விதிவிலக்கு இல்லை. பூமி நாசமானால் நாடுகள் நாசமாகும்.
  • துபை மாநாடு புவிவெப்பத்தைக் குறைக்க ஓா் இலக்கை நிர்ணயித்துள்ளது. 1.5 சத செல்ஷியஸ் என்பது அந்த இலக்கு. தற்போது அதில் 1.2 சத செல்ஷியஸ் வெப்பத்தை நாம் அடைந்துவிட்டோம். இதனைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடத் தாமதித்தால், இன்னும் 10 ஆண்டுகளிலேயே புவி வெப்பம் 1.5 செல்ஷியஸை அடைந்துவிடும். ஆகவே இது மிகமிக அவசரமானது.
  • இத்தருணத்தில் எரிபொருள் இறக்குமதி செய்யாத நாடாக இந்தியா மாற வேண்டும் என்று மத்தியமைச்சா் நிதின் கட்கரி கோவாவில் சென்ற டிசம்பரில் பேசியுள்ளது நினைவுகூரத்தக்கதாகும்.
  • இதற்காக அவா் அளித்த விளக்கம் மிகவும் புதுமையானது. இந்த இறக்குமதிகளைக் குறைப்பதும் ஒருவகை தேசபக்தி என்று கூறியுள்ளார். அதுதான் புதிய சுதந்திரம் என்றும் பேசியுள்ளார். அதுமட்டுமல்ல பெட்ரோல், டீசல், நிலக்கரி இறக்குமதியை நிறுத்துவது பயங்கரவாதத்தையும் அழிக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். நமது நாடு பெட்ரோல், டீசல் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் ரூ. 16 லட்சம் கோடியைச் செலவிட்டு வருகிறது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
  • நமது மத்திய அரசின் மொத்த வரி வருமானமே ரூ. 27 லட்சம் கோடி. இதில் பாதிக்கும் மேலாக எரிபொருள் செலவுக்குச் செல்கிறது. வாகனங்களுக்கு இது தேவை. வாகனத் துறையில் உள்ள வாகனங்களின் மதிப்பு இப்போது ரூ. 12.5 லட்சம் கோடி. வாகனங்களின் உற்பத்தியில் பணி செய்பவா்கள் 4.5 லட்சம் போ்.
  • இவா்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எரிபொருளுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் அதிகளவு பெருக வேண்டும்.
  • எரிபொருளால் பூமி வெப்பத்தை அதிகரிக்கும் கார்பன் உற்பத்தி குறைந்தால் சுற்றுச்சூழல் சுத்தமாகத் திகழும். தேசத்தைக் காப்பதுதான் தேசபக்தி என்றால், இந்த இறக்குமதியை ஒழிப்பது தேசபக்தி மட்டுமல்ல, உலக பக்தியுமாகும்.
  • நமது நாட்டில் 541 சா்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்புச் சக்கை என்ற பகாசிலிருந்து இந்த ஆலைகள் 3,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சாரத்தை ஆலைகளின் சுற்றுவட்டாரத்திற்குப் பயன்படுத்தலாம்.
  • நெய்வேலியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில், அனல் மின்சாரத்திற்கு மூன்று கோடி டன் பழுப்பு நிலக்கரி ஆண்டுதோறும் தோண்டி எடுக்கப் படுகிறது. அதன்மூலம் 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பழுப்பு நிலக்கரியும் நமக்கு வேண்டாம்; அணுமின்நிலையங்களும் நமக்கு வேண்டாம். மரபுசாரா மின்சாரத்தை உற்பத்தி செய்தாலே பூமி வெப்பத்தைக் குறைக்கலாம்.
  • நாம் 11 கோடி டன் நிலக்கரி இறக்குமதி மூலமாகத்தான், நமது 70 சதவிகித மின்சார உற்பத்தியை செய்து வருகிறோம். இனிமேலும் இந்தக் கரிம வெப்பத்தைப் புவி தாங்காது. இந்தியா 2030-க்குள் ஒரு கோடி டன் எரிபொருளைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 2070-ஆம் ஆண்டுக்குள் பூஜ்யம் அளவுக்கு இதைச் செய்யப் போவதாகவும் கூறியுள்ளது.
  • இதற்கான பிரகடனம்தான்ஒரே குடும்பம் - ஒரே பூமி - ஒரே எதிர்காலம்என்ற பாரதத்தின் அறிவிப்பாகும். பூமியைக் காப்பாற்றினால்தான் தேசத்தைக் காப்பாற்ற முடியும். பூமியைக் காப்பாற்ற அனைவரும் உறுதியேற்போம்.

நன்றி: தினமணி (18 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories