TNPSC Thervupettagam

பூவுலகைச் சூழும் பெருநஞ்சு

October 18 , 2021 1135 days 672 0
  • புராணங்களில் மரணத்தை வென்றவன் மார்க்கண்டேயன் என்று படித்திருப்போம். மனிதர்கள் உருவாக்கிய செயற்கைப் பொருட்களுள் அழிவற்ற ஒன்று ஞெகிழி.
  • இப்படி அது அழியாத்தன்மை பெற்றுள்ளதே, தற்போது பூவுலகமும் மனிதர்களும் எதிர் கொண்டுள்ள பெரும் பிரச்சினைகள் பலவற்றுக்கும் காரணம்.
  • கிட்டத்தட்ட மக்கவே மக்காத ஞெகிழிக் கழிவு, நமது சாக்கடைகள்-வடிகால்கள், ஆறு-வாய்க்கால்கள், தெரு-சாலைகள் எனப் பரவி எங்கெங்கும் வியாபித்திருக்கிறது.
  • தண்ணீர்ப் புட்டிகள், உறிஞ்சிகள், குவளை, தட்டுகள், உணவுப்பொருள்-சிப்பங்கள்-பொதிகளைக் கட்டிவரும் ஞெகிழி என நம் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் ஞெகிழி தன் தடத்தைப் பதித்திருக்கிறது.
  • ஞெகிழியை அழிக்கவோ வேறொன்றாக உருமாற்றவோ முடியாது. தொடர்ந்து சூரிய வெப்பத்திலும் தண்ணீரிலும் அடித்துச் செல்லப்படும் ஞெகிழி சிறுசிறு துகள்களாக உடையுமே ஒழிய, அதன் வேதி வடிவம் முழுமையாக மாறுவது இல்லை.
  • இப்படி உடையும் நுண்ஞெகிழித் துகள்கள் உலகெங்கும் பரவி மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
  • மனிதர்கள் வாழாத துருவப் பகுதியான அண்டார்க்டிகாவின் அடியாழத்தில், நாம் குடிக்கும் தண்ணீரில், சுவாசிக்கும் காற்றில் என எங்கெங்கும் நுண்ஞெகிழித் துகள்கள் கலந்திருக்கின்றன என அறிவியலர்கள் எச்சரித்துவருகிறார்கள்.
  • ஞெகிழி ஏற்கெனவே உயிரின உணவுச் சங்கிலி, மனித உணவுச் சங்கிலிக்குள் புகுந்து பல்லாண்டுகளாகிவிட்டன.
  • கடலில் கொட்டப்படும் ஞெகிழியிலிருந்து உருவாகும் நுண்துகள்களை மீன்கள் உண்கின்றன. பிறகு அந்த மீன்களை நாம் உண்கிறோம்.

தமிழ்நாட்டில் 2 மடங்குக் கழிவு

  • ஞெகிழி உற்பத்தியும் ஞெகிழிக் கழிவும் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மக்கள்தொகையின் எடையைப் போல் 16 மடங்கு ஞெகிழிக் கழிவு பூவுலகைச் சூழ்ந்திருக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.
  • ஓராண்டில் 34 லட்சம் மெட்ரிக் டன் ஞெகிழிக் கழிவை இந்தியா உருவாக்குகிறது.
  • இந்தக் கழிவில் 66%-க்கு ஏழு மாநிலங்கள் மட்டும் காரணம். தலா 12%-த்துடன் தமிழ்நாடும் மஹாராஷ்டிரமும் முதலிடத்தில் உள்ளன. நாட்டின் மொத்த ஞெகிழிக் கழிவில் கால் பங்கு இந்த இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டும் உருவாகிறது.
  • குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. எஞ்சிய 22 மாநிலங்கள் வெறும் 33% ஞெகிழிக் கழிவையே உருவாக்குகின்றன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2019-2020-ம் ஆண்டு அறிக்கை தரும் தகவல் இது.
  • தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்களுக்கு எதிரான தடை அறிவிக்கை 2018 ஜூன் 25 அன்று நிறைவேற்றப்பட்டு, 2019 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தடை நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • ஒருமுறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்களை வைத்திருப்பதைத் தடுப்பது, கைப்பற்றுவது, தடைசெய்வது என்கிற நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
  • ஆனால், நிதர்சனம் அப்படி இல்லை. தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 15 கிராம் ஞெகிழிக் கழிவை உருவாக்குகிறார். அதே நேரம், தேசிய சராசரியோ 8 கிராம் மட்டுமே.

வெற்று அறிவிப்புகள்

  • ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்கள் 2022 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் முற்றிலும் தடை செய்யப்படும் என இந்தியா காலக்கெடு நிர்ணயித்திருக்கிறது.
  • இந்த அறிவிப்பைப் பிரதமர் மோடி மூன்று ஆண்டுகளுக்கு முன் கோலாகலமாக வெளியிட்டார். அந்தக் காலக்கெடு முடிய ஓராண்டு உள்ள நிலையில், ‘ஞெகிழிக் கழிவு மேலாண்மை திருத்த விதி’களைக் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • ஆனால், இதற்குப் பயணிக்க வேண்டிய தொலைவு, நடைமுறைப் பிரச்சினைகள்-தடைகளோ ஏராளம்.
  • ஞெகிழிக் கழிவில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துபவை ‘கேரி பேக்’ எனப்படும் மென்ஞெகிழிப் பைகள்.
  • ஒருசில நிமிடங்கள், அதிகபட்சம் சில மணி நேரம் மட்டுமே பயன்பாட்டைக் கொண்டவை இவை. இந்தப் பைகளில் 50 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள ஞெகிழிப் பைகளை பெரும்பாலான மாநிலங்கள் சட்டபூர்வமாகத் தடைசெய்துள்ளன.
  • 2021 அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 75 மைக்ரானுக்குக் கீழ் உள்ள ஞெகிழிப் பைகளுக்குத் தடை விதித்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
  • ஆனால், நடைமுறை அனுபவமோ வேறு. ஏற்கெனவே இருக்கும் சட்டங்கள் சொல்வது போல் ஒரு முறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்கள் 22 மாநிலங்களில் தடை செய்யப்பட்டிருந்தால், ஞெகிழிக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருக்க வேண்டும்.
  • ஆனால், ஞெகிழிப் பொருட்கள் எங்கெங்கும் சர்வசாதாரணமாகப் புழங்கிக் கொண்டிருக்கின்றன. தெருவோரக் கடைகள், பழக் கடைகள், பூக்கடைகள், சிறு பெட்டிக் கடைகள் என எல்லா இடங்களிலும் ஆபத்தான மென்ஞெகிழிப் பைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
  • ஞெகிழிப் பைகளின் பயன்பாடு குறைந்ததாகவோ, 75 மைக்ரானுக்குக் கீழ் பயன்பாட்டில் உள்ள ஞெகிழிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவோ எந்தச் செய்தியும் இதுவரை பதிவாகவில்லை.

எங்கே இருக்கிறது தீர்வு?

  • உலகில் உற்பத்தி செய்யப்படும் ஞெகிழியில் 79% குப்பைமேடுகளிலோ சுற்றுப் பகுதிகளிலோ கழிவாகக் கொட்டப்படுகிறது – பெருமளவு கடலிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் மிதக்கிறது.
  • உலகின் மிகப் பெரிய பெருங்கடலான பசிபிக்கில் ‘கிரேட் பசிபிக் கார்பேஜ் டம்ப்’ என்கிற செயற்கை ஞெகிழித் தீவு உருவாகியிருப்பது மனித குலத்துக்கு அவமானம். 10%-க்கும் குறைவான ஞெகிழியே மறுசுழற்சி செய்யப்படுகிறது. 12% ஞெகிழி எரிக்கப்படுகிறது.
  • ஞெகிழியை எரிப்பதால் வெளியேறும் டையாக்சின் எனும் நச்சு வாயு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது. அத்துடன் உலகப் புதைபடிவ எரிபொருள் உற்பத்தியில் 6% ஞெகிழித் தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்படுவதால், பருவநிலை மாற்றத்துக்கும் ஞெகிழி பங்களிக்கிறது.
  • இந்தப் பின்னணியில் ஞெகிழிப் பயன்பாட்டைத் தடைசெய்வதில் தீவிரம் காட்டாமல், முறைப்படுத்தாமல் ஞெகிழிக் கழிவுக்கும் தீர்வு காண்பது என்பது காற்றில் கோட்டை கட்டும் முயற்சியே.
  • சட்டரீதியில் தடைசெய்யப்பட்ட ஞெகிழியை நடைமுறைப் பயன்பாட்டில் கட்டுப்படுத்துவது, மாற்றுப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதுதான் ஞெகிழிக் கழிவு உருவாவதைத் தடுக்கும் வழி.
  • ஞெகிழிப் புட்டிகளையும் ஞெகிழிப் பைகளையும் சட்டபூர்வமாகத் தடைசெய்வதற்கான கட்டுப்பாடுகளும் அரசியல் உறுதியும் மத்திய, அனைத்து மாநில அரசுகளிடமும் தேவை.
  • அப்படிப்பட்ட தீவிரம் காட்டப்படாதவரை, ஒரு முறை பயன்படுத்தப்படும் ஞெகிழி 2022-ல் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாகத் தடைசெய்யப்படும் என்கிற அறிவிப்பும் வெறும் அறிவிப்பாகவே தேங்கிவிடும் சாத்தியமே அதிகம்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories