TNPSC Thervupettagam

பெண் எழுத்து: எளிய மக்களின் வாழ்க்கையை வரைந்தவர்

October 20 , 2024 6 hrs 0 min 23 0

பெண் எழுத்து: எளிய மக்களின் வாழ்க்கையை வரைந்தவர்

  • தமிழிலக்கியத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் பெண் படைப்பாளுமைகளின் இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தன் படைப்புச் செயல் பாடுகளின்வழி தனித்த ஆளுமையாக அடையாளம் காணப்படுகிறார். பெண்களின் வாழ்க்கை கடுமையான நெருக்கடிகளோடு இருந்த காலக் கட்டத்தில் 1925ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன்.
  • இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதாரப் பின்புலங்களை மிக நுட்பமாக உணர்ந்து தன் படைப்புகளில் பதிவுசெய்தவர். பெண்கள், குடும்பச் சிக்கல்களை மட்டுமே மையமாக வைத்து எழுதுவார்கள் என்கிற பொதுப் புத்தியைத் தன் படைப்புகளால் தகர்த்தவர் இவர்.

பெண் கல்வி

  • கல்வியும் அதிகாரமும் பெண்ணுக் குச் சாத்தியமில்லாத சமூகச் சூழலில் தனக்குக் கிடைத்த அரிய கல்வியின் மூலம் பெண்களின் உலகை அதன் வலியோடு படைத்துக் காட்டினார். பொதுச் சமூகத்தில் பெண்களின் இடம் மிகக் குறைவாக இருப்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டியவர் இவர். எந்தெந்த வழிகளில் எல்லாம் பெண்களின் வாழ்க்கையை அறிவார்ந்த நிலைக்கு மேம்படுத்த முடியும் என்பதைத் தன்னுடைய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களில் பதிவுசெய்த சிறப்புக்குரிய ஆளுமை இவர்.
  • பாலின வேறுபாடு நம் சமூகத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைத் தெளிவாகவும் எளிமை யாகவும் தன் படைப்புகளின் மூலம் புலப்படுத்தினார். 40க்கும் மேற்பட்ட நாவல்கள், 150க்கும் மேற்பட்ட சிறு கதைகள், ஏராளமான கட்டுரைகள் என இவரது இலக்கியப் பயணம் மிக நீண்டது.

களப்பணி

  • இவர் அறைக்குள் அமர்ந்து கற்பனை யாகத் தன் படைப்புகளை இயற்றவில்லை. ஒவ்வொரு படைப்புக்கும் இவர் அளித்த உழைப்பு அபரிமிதமானது. படைப்புக்கான கருவை முடிவு செய்தவுடன் அந்தச் சூழலுக்கே சென்று தங்கி, தரவு களைத் திரட்டித் தன் ஆக்கங்களைப் படைத்த பெருமை இவருக்கே உரியது.
  • இவரது மிகச் சிறந்த படைப்பான ‘குறிஞ்சித்தேன்’, நீலகிரியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை அம்மக்களின் வலியோடு பதிவு செய்தபெருமைக்குரியது. நீலகிரி மலைப்பகுதி யில் உள்ள மக்களோடு உரையாடி, தரவு களைச் சேகரித்து இவர் உருவாக்கிய இந்தப் படைப்பு இன்றும் பேசப்படுகிறது.
  • உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க் கையை ரத்தமும் சதையுமாக ‘கரிப்பு மணிகள்’ என்கிற நாவலாக்கிய சிறப்பு எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கே உரியது. அதேபோல் விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டங்களை ‘சேற்றில் மனிதர்கள்’ என்கிற நாவலாக எழுதினார்.
  • ‘இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக்குக் கொறிக்கும் சிறு தீனியாகி விடக்கூடாது. அது மக்களின் வாழ்வுக்கு இன்றி யமையாத ஆரோக்கியமான சத்துணவைப் போல் சமுதாய உணர்வை, மனிதாபிமானத்தை மக்களிடையே ஊட்டுவதாக இருக்க வேண்டும் என்கிற நோக்கமே என்னைப் புதிது புதிதான களங்களுக்கு இட்டுச்செல்கிறது’ என்று குறிப்பிடு கிறார் ராஜம் கிருஷ்ணன்.
  • தொடர்ந்து இவர் மேற் கொண்ட பயணங்களும் தேடித் திரட்டிய தரவுகளும் இவரது ஒவ்வொரு படைப்பையும் தனித்துவமானதாக மிளிரச் செய்தன. எந்தச் சூழலிலும் அச்சம் தவிர்த்துத் தன் கருத்துகளை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கப் படைப்பாளி இவர். சமுதாயச் சிக்கல்களை எவ்விதப் பூச்சு மின்றி உள்ளது உள்ளபடி பதிவுசெய்த எழுத்துப் போராளி இவர்.

படைப்பின் தனித்துவம்

  • விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட முற்போக்குச் சிந்தனையாளர் மணலூர் மணியம்மையாரின் வாழ்க் கையை ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்கிற புனைவாகத்தமிழ்ச் சமூகத்துக்கு இவர் வழங்கினார். பெண் சார்ந்து இன்றைக்கும் சமூகம் சிந்திக்க மறுக்கும் விடுதலை யைத் தன் வாழ்க்கையில் சாத்தியமாக்கிக் காட்டிய மணலூர் மணியம்மையாரை அடுத்த தலைமுறையும் அறியச் செய்த பெருமை இவருக்குண்டு. தூத்துக்குடி பகுதி மீனவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை விதைத்தது இவரது ‘அலைவாய்க் கரையில்’ நாவல். இந்தப் படைப்பு அந்த மக்களிடையே அவர்களது உழைப்பு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
  • தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணியாற்றும் குழந்தைத் தொழிலாளர் களின் வாழ்க்கை அவலங்களை ‘கூட்டுக் குஞ்சுகள்’ என்கிற படைப்பின்மூலம் பதிவுசெய்தார். காந்தியக் கொள் கைகளை இன்றைய சமூகம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை அரசியல் பின்புலத்தோடு இவர் பதிவுசெய்த படைப்பு ‘வேருக்கு நீர்’. இந்த நாவல் 1973ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. தமிழ்ப் பெண்படைப்பாளிகளில் சாகித்ய அகாடமிவிருதைப் பெற்ற முதல் படைப்பாளியும் இவரே.
  • “புற வாழ்வில் ஏற்படும் மாற்றங் களால் எனது மன அரங்கில் ஏற்படும் கருத்துகளும் கிளர்ச்சிகளும் இலக்கியப் படைப்புகளுக்கு உந்துதல்களாக இருந்து வருகின்றன. நாவல் என்கிற இலக்கிய உருவை நான் எனது கருத்து வெளியீட்டு மொழியாகக் கொண்டிருக்கிறேன்” என்று தன் படைப்பு குறித்து ராஜம் கிருஷ்ணன் பதிவுசெய்துள்ளார்.
  • படைப்புச் செயல்பாட்டைச் சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகக் கைக்கொண்டவர் ராஜம் கிருஷ்ணன். படைப்பு சார்ந்து இவர் மேற்கொண்ட பயணங்கள், அவற்றில் இவர் பெற்ற அனுபவங்கள், அந்த அனுபவங்கள்வழி இவர் படைத்த படைப்புகள் சமூகத்தின் அசல் முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டின. உழைக்கும் மக்கள் மீதான அக்கறையோடு செயல்பட்ட இவர் அந்த மக்களின் சமூக, பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் நுட்பமாகச் சிந்தித்தவர்.

பாலினச் சமத்துவம்

  • மனித குலத்தின் சரிபாதியாக விளங்கும் பெண்களின் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராகக் காத்திரமாகக் குரல் கொடுத்தவர் ராஜம் கிருஷ்ணன். தன்னுடைய புனைவுகள், கட்டுரைகள், களச் செயல்பாடுகள் என்று எல்லா நிலைகளிலும் பெண்ணடிமைத்தனக் கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கூர்மையாகத் தன் கருத்துகளை முன்வைத்துப் போராடியவர் இவர்.
  • “இன்றைய குடும்பங்களில் சக்திஆணிடமே குவிக்கப்பட்டு, அவனைஆதிக்கம் மிகுந்தவனாக நெறிப்படுத்தியிருக்கிறார்கள். பெண், கல்வி இல்லாத அடிமை உழைப்பாளியாக அடுக்களையோடு இருந்த நாள்களை விடத் தற்போது மறுமலர்ச்சி பெற்ற தன் ஆற்றல், திறமை அனைத்தையும் ஓர் ஆணுக்கு உரிமையாக்கி, அவன் சக்தியைப் பெருக்கியிருக்கிறாள். இதன் காரணமாக இரட்டைச் சுமை யைச் சுமக்கிறாள். குவிந்து கிடக்கும், குவிக்கப்பெற்றிருக்கும் சக்தியைச் சமமாக்குவதுதான் இதற்கு மாற்றாக இருக்க முடியும். ஆண், பெண் உறவு களின் ஆதிக்கமற்ற, ஒருவரை மற்றவர் மதித்து அன்பு செலுத்தும் பாங்கை அப்போதுதான் காண முடியும்” என்னும் இவரது கூற்று இன்றைய சமூகத்துக்கானது.
  • குழந்தைகள், பெண்கள், உழைக்கும் எளிய மனிதர்கள் என்று தொடர்ந்து இவர்களின் மேம்பாட்டை மையமிட்டுத் தன் வாழ்நாள் முழுவதும் பயணித்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். தொழில், பாலினம், பொருளாதாரம் என்று எதன் பொருட்டும் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வை அனுமதிக்க மறுக்கும் இவரது படைப்புச் செயல்பாட்டை அவரது நூற்றாண்டு நெருங்கும் இவ்வேளையில் தமிழ்ச் சமூகம் எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளது.
  • (அக்டோபர் 20: ராஜம் கிருஷ்ணன் பத்தாம் நினைவுநாள்)

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories