TNPSC Thervupettagam

பெண் கல்வியில் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றம்

May 31 , 2024 225 days 297 0
  • தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களால் உயர் கல்வியில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது எனவும் பெண்களின் உயர் கல்விச் சேர்க்கை விகிதம் 34% உயர்ந்திருக்கிறது எனவும் மாநில அரசு தெரிவித்திருப்பது, இளம் தலைமுறையினரின் முன்னேற்றம் குறித்த நம்பிக்கையை அளிக்கிறது.
  • அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவியரின் உயர் கல்விச் சேர்க்கை விகிதம் குறைந்தது, உயர் கல்வி பயில இயலாத மாணவியர் திருமணம் செய்விக்கப்பட்டது போன்ற அவலங்களுக்கு முடிவுகட்டும் வகையில், ஒரு புதிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு 2022இல் அறிவித்தது.
  • அதுவரை பெண்களின் திருமணத்துக்காகச் செயல்படுத்தப்பட்டுவந்த நிதியுதவித் திட்டத்தை, ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்ட’மாக (புதுமைப் பெண் திட்டம்) மாற்றி அறிவித்தது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற பெண்களின் உயர் கல்விக்காக மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தும் திட்டத்தை செப்டம்பர் 2022 முதல் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. அந்தத் திட்டத்தின்கீழ் 2.73 லட்சம் மாணவியர் பயன்பெற்றுவருவதாக அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.
  • மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும் போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்கு அவர்களைத் தயார்செய்யும் வகையிலும் ‘நான் முதல்வன்’ என்னும் வழிகாட்டித் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.
  • இந்தத் திட்டத்தின்கீழ் 27 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதோடு, தொழில் வழிகாட்டி மூலம் 1.9 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகக் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
  • இளம் தலைமுறையினரின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பெண்களின் உயர் கல்விக்காகவும் தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களால் உயர் கல்வியில் சேரும் மாணவர் விகிதம் 49% ஆக உயர்ந்திருக்கிறது.
  • இது நாட்டின் தேசிய சராசரி சேர்க்கை விகிதத்தைப் போல் இரண்டு மடங்கு. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் எனக் கல்வித் துறையில் தமிழ்நாடு தனியிடம் வகிக்க இதுபோன்ற திட்டங்கள் முக்கியக் காரணம்.
  • பெண்களின் உயர் கல்வி விகிதம் அதிகரித்திருப்பதால் பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரித்து, அவர்களின் சமூகப் பொருளாதாரப் பங்களிப்பும் உயரும். ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் உயர் கல்வி பெறும்போது கல்வித் துறையில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்கான சாத்தியத்தை அது ஏற்படுத்தும்.
  • ‘புதுமைப் பெண்’ திட்டத்தால் வீட்டில் உள்ள அனைத்துப் பெண் குழந்தைகளும் பயன்பெறலாம் என்பதும் பிற கல்வி ஊக்கத் தொகைத் திட்டங்களைப் பெற இது தடையாக இருக்காது என்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள். அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாகத் திட்டம் பரவலாக்கப்படும்போது, அது ஏற்படுத்தும் மாற்றமாகத்தான் பெண்களின் உயர் கல்விச் சேர்க்கை விகிதத்தைப் பார்க்க வேண்டும்.
  • முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத் திட்டங்கள் சிலவற்றில் இடைநிறுத்தம், பயனைப் பெறுவதில் குளறுபடி, பயனாளிகள் விடுபடல் போன்றவை பலரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
  • மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றிச் செயல்படுத்தப்படும்போதுதான் அவை தொடங்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும். ‘புதுமைப் பெண்’, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களில் அந்த நம்பிக்கையை இளம் தலைமுறையினருக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories