TNPSC Thervupettagam

பெண் சங்கடங்களின் ஊற்றுக்கண்

June 25 , 2023 375 days 373 0
  • சமூக அமைப்பு, அரசியல் நிலை, ஆட்சிமுறை, திணை அமைப்பு, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, நம்பிக்கைகள், சடங்குகள், வீரம், உணவு உற்பத்தி, வணிகம், அறவுணர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லாவற்றிலும் சங்க காலத் தமிழ்ச் சமூகம் மேம்பட்டிருந்தது. அக்காலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்களும் செவ்வியல்தன்மை கொண்டவை. ஏற்றத்தாழ்வுகளும் சமூக முரண்களும் இல்லாத சமூகமாகச் சங்க காலச் சமூகம் இருந்தது; எனவேதான் சங்க காலத்தைப் பொற்காலம் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர். அமைப்பியல், உளவியல், இருத்தலியல், பெண்ணியம், தலித்தியம் போன்ற நவீனக் கோட்பாடுகளை உள்வாங்கி எழுதப்படும் சங்க இலக்கியம் குறித்த ஆய்வு நூல்களெல்லாம் சங்க காலச் சமூகத்தின் உன்னதங்களுடன் அதன் போதாமைகளையும் சுட்டிக்காட்டுகின்றன.
  • சங்கப் பெண்பாற் புலவர்கள் குறித்து ஆராய்ந்த ஔவை நடராசன், ‘ஆணுக்குயர்பும் பெண்ணுக்கிழிபும் காட்டும் பிற்றைநிலை அற்றைநாள் இல்லை’ (புலமைச் செல்வியர், பக். 21) என்று எழுதியிருக்கிறார். சங்க இலக்கியங்களை ஆதாரமாகக்கொண்டு அக்காலச் சமூகத்தை மதிப்பிடும்போது சங்க காலச் சமூகம் பெண்களை எவ்வளவு மோசமாக நடத்தியிருக்கிறது என்பதை அறியலாம். தலைவியை இழந்து தலைவன் வருந்துவதைத் தபுதார நிலையென்றும், தலைவனை இழந்து தலைவி வருந்துவதைத் தாபதநிலை என்றும் இலக்கணம் கூறுகிறது. எனவே, கைம்மை நோன்பு இருவருக்குமே உண்டு; அதனால் பொற்காலத்தில் பெண்களைப் போன்று ஆண்களும் வருந்தியிருக்கிறார்கள் என்று பழம்பெருமை பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலையும் தபுதாரநிலைக்கு இலக்கணம் கூறியிருக்கின்றன. ஆனால், தலைவி இறந்த பிறகு தலைவன் வருந்தியதாகச் சங்க இலக்கியத்தில் ஒரு பாடலும் இல்லை; தாபத நிலையைத் துறையாகக் கொண்ட மூன்று பாடல்கள் புறநானூற்றில் (248, 249, 250) உள்ளன. இவற்றில் இரண்டு பாடல்கள் பெண்களால் (148, 250) பாடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாள்முருகனின் பொன்னா

  • கைம்மை நோன்பின் துயரத்தை அவ்வளவு அணுக்கமாக இப்பெண்கள் பாடியுள்ளனர். கணவனை இழந்த பெண்கள் தங்கள் தலையை மழித்துக்கொண்டனர்; வளையல்களைக் கழற்றியுள்ளனர்; அல்லியிடத்து உண்டான புல்லரிசியை உண்டுள்ளனர். முறம் அளவுள்ள இடத்தைத் தன் கண்ணீரால் மெழுகி கணவனுக்குப் படையல் போட்டு அதனை உண்டுள்ளனர். இதனால்தான் பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவனுடனேயே உடன்கட்டை ஏறி கைம்மை நோன்பிலிருந்து தப்பித்துக்கொண்டாள்; இல்லையெனில், அரசியான அவளையும் பழைய சோற்றையும் வேளைக்கீரையும் உண்ணவைத்து சங்கச் சமூகம் அழகு பார்த்திருக்கும்! கணவன் இறந்த உடனே மனைவியும் இறந்துபோவதை ‘மூதானந்தம்’ என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.
  • பன்னிரண்டு வருடங்களாகக் குழந்தை இல்லாத பொன்னாவை இச்சமூகம் எவ்வளவு மோசமாக நடத்துகிறது என்பதைப் பெருமாள்முருகன் தனது ‘மாதொருபாகன்’ (2010) நாவலில் காத்திரமாக எழுதியிருப்பார். ‘‘ஆண்டவனே, இந்த மாசமாச்சும் என் வவுத்த அடச்சிரு... கேக்கற நாய்களுக்குப் பதில் சொல்லி முடியல’’ என்று ஆற்றாமை கொள்கிறாள். பொன்னாவை ‘வறடி’ என்று அழைக்கின்றனர். ‘‘நீ அந்தப் பக்கம் தள்ளியிரு’’ என ஒவ்வொரு சடங்கிலும் அவளை அவமானப்படுத்துகின்றனர். குழந்தை இல்லாத பெண்கள் நாள்தோறும் கடும் மனநெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர். ‘குழந்தை’ என்ற உயிரின்மீது உருவாக்கப்பட்டுள்ள தொன்ம மதிப்பீடுகள் அதிக அளவில் செயற்கைக் கருவுறுதல் மையங்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. குழந்தை இல்லாத பெண்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதற்கு நியாயமான ஒரு காரணத்தையும் கூற முடியாது.

அக இலக்கணம் என்ன சொல்கிறது?

  • சங்க காலச் சமூகத்தில் தலைவிக்குக் குழந்தை இல்லாதபோது தலைவன் மறுமணம் செய்திருக்கிறான். அந்தப் பெண்ணுக்குப் ‘பின்முறை வதுவை’ என்று பெயர். அவரை வாசலில் நின்று வரவேற்க வேண்டும் எனத் தலைவிக்கு ஆணை பிறப்பித்திருக்கிறது அக இலக்கணம். குழந்தை இல்லாத பெண்கள் திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்த சங்கச் சமூகம் அனுமதி மறுத்திருக்கிறது.
  • நற்காரியங்களில் இவர்கள் ஈடுபடக் கூடாது என்ற மூடநம்பிக்கை எப்போது உருவாகியிருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. அகநானூற்றில் 86, 136 ஆகிய இரண்டு பாடல்களும் சங்க காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கின்றன. திருமண வீட்டின் அலங்காரம் முதல் மறுநாள் நடைபெறும் சாந்தி முகூர்த்தம் வரையான நிகழ்வுகளை இரண்டு பாடல்களும் துல்லியமாகப் பதிவுசெய்திருக்கின்றன.
  • இந்தப் பாடல்களில் இடம்பெற்றுள்ள இரண்டு தகவல்கள் முக்கியமானவை. ஒன்று, தாலி கட்டிக்கொள்ளும் வழக்கம் அன்று இல்லை. இரண்டு, நான்கு பெண்கள்தாம் முன்னின்று திருமணத்தை நடத்திவைத்திருக்கின்றனர். புரோகிதரும் தாலியும் அன்றைய திருமணத்தில் இல்லை. மனமொத்துத் தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ்ந்தனர்; பாராட்டத்தக்கது. அதே நேரத்தில், திருமணம் நடத்திவைத்த அந்த நான்கு பெண்களும் பிள்ளை பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதனை, ‘புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று/வால் இழை மகளிர் நால்வர் கூடிக்/கற்பினின் வழாஅ நற்பல உதவிப்/பெற்றோற் பெட்கும் பிணையை யாகென’ (அகம். 86) என்ற நல்லாவூர்க்கிழார் பாடலால் அறியலாம்.
  • பிள்ளை பெற்ற மகளிர் நால்வர் கூடிச் செய்வதுதான் மரபு என்று பழைய உரை குறிப்பிடுகிறது. பிற்காலத்தில் இப்பாடலுக்கு உரை எழுதியவர்கள் ‘புதல்வர்’ என்ற சொல்லுக்கு ‘ஆண் குழந்தை’ என்றே பொருள் எழுதியிருக்கின்றனர். திருமணத்தை நடத்தி வைக்கும் பெண்கள் ஆண் மக்களை ஈன்றிருக்க வேண்டும்; கணவனுடன் இருக்க வேண்டும். இவர்கள்தாம் பொற்காலத்தில் திருமணம் செய்துவைக்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றனர். மற்றொரு பாடலில் ‘மண்ணிய மகளிர்’ (அகம்.136) திருமணத்தை நடத்தி வைத்தனர் என்று பாடியுள்ளார் விற்றூற்று மூதெயினனார். இவர்களுக்கும் அவ்விரு தகுதிகளும் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
  • சங்க காலத்தில் நற்றாய்க்கு (தலைவியின் தாய்) முலைக்கூலி கொடுத்துத் தலைவியைத் திருமணம் செய்துள்ளனர். நற்றாய், கூலியை நிர்ணயித்திருக்கிறாள். இது மட்டும் இன்று தொடரவில்லை. களவுக் காலத்தில் தலைவியரை இற்செறிப்பு செய்திருக்கின்றனர். பருவம் எய்திய பெண்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கழிபெருங் காதலாயினும் தலைவி தன் விருப்பத்தைத் தலைவனிடம் கூற முடியாது. ஆண் குழந்தைகளைப் பெற்ற பெண்களைச் சங்கச் சமூகம் மரியாதையுடன் நடத்தியுள்ளது. இவ்வளவு பிரச்சினைகளைச் சங்க காலத்தில் பெண்கள் எதிர்கொண்டுள்ளனர். தற்காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குரிய வேர் சங்க காலத்திலேயே இருந்திருக்கிறது. அது இன்றும் அறுபடவில்லை. சங்க காலம் பொற்காலம்தான்; யாருக்கு என்பதுதான் கேள்வி.
  • பொற்காலத்தில் பெண்களைப் போன்று ஆண்களும் வருந்தியிருக்கிறார்கள் என்று பழம்பெருமை பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தலைவி இறந்த பிறகு தலைவன் வருந்தியதாகச் சங்க இலக்கியத்தில் ஒரு பாடலும் இல்லை;

ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணுக்குச் சுதந்திரம் உண்டா?

  • பெண்களின் அறிவுத்திறனை, சிந்தனை சக்தியை எந்தெந்த வகையில் எல்லாம் முடக்கினால் இங்கு அவர்கள் தங்களைத் தாங்களே ஒடுக்கிக்கொண்டு மிகவும் மேலோட்டமான விஷயங்களில் மட்டுமே தங்கள் கவனத்தைத் திருப்பிக்கொண்டு திருப்திபட்டுக்கொள்வார்களோ அவற்றை எல்லாம் செய்தாகிவிட்டது. ஒரு பெண்ணின் சிந்தனைக்கு நம் சமூகத்தில் எத்தனை விதமான மறைமுகத் தடைகள்!
  • பெண்ணுக்கு நீண்ட முடிதான் அழகு. அவள் வாழ்நாளில் எவ்வளவு நேரத்தைத் தன் முடியைப் பராமரிப்பதில் செலவிடுகிறாள்!
  • ஆடை: புடவை, தாவணி, துப்பட்டா - இந்த ஆடைகளில் ஏதாவது செளகரியம் உண்டா? எப்போதும் இவை விலகாமல் பார்த்துக்கொள்வதிலே கவனம் செலுத்தியாக வேண்டும். இல்லையெனில் அவள் ஆண்களைத் தூண்டுகிறாள் என்று சொல்லிவிடுவார்கள். அப்படித் தூண்டப்பட்டால் தவறு அந்த ஆண் மேல் இல்லை, கவனக்குறைவாக இருக்கும் பெண்மேல்தான்.
  • தனக்கான ஆணைத் தேர்வுசெய்வது பெண்ணின் கையில் இருந்த காலத்தில் எப்படி ஓர் ஆண் உடலாலும் அறிவாலும் வல்லவனாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தானோ, அதேபோல் தனக்கான பெண்ணைத் தேர்வுசெய்வது ஆணின் கையில் வந்துவிட்ட காரணத்தால், ஆணைக் கவர்வதற்கான ஆயுதம் ஒன்று தேவைப்பட்டது. அறிவை ஒதுக்கிவிட்ட பிறகு, அவளிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அவளது உருவம், வெளித்தோற்றம் என்றானது. அதனால், அவள் தன்னை அழகுபடுத்திக்கொள்வதற்காக அலங்காரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.
  • பெண்களுக்குப் புறத்தோற்றம் முக்கியமாகிப் போனதால், எப்போதும் தான் மற்றவர் கண்களுக்கு அழகாகத் தெரிய வேண்டிய அழுத்தம் கூடுகிறது. அதோடு, மற்ற பெண்களுடன் தன் அழகை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதும், தன்னைவிட இன்னொரு பெண் அழகாகத் தெரியும்பட்சத்தில், தாழ்வு மனப்பான்மையும், தான் அழகாக இருக்கிறோம் என்று தோன்றும் பட்சத்தில் அதையே பெரிய சாதனையாகவும் நினைக்கத் தலைப்பட்டாள். தன்னை மேலும் மேலும் அழகுபடுத்திக்கொள்வதிலே அவளது கவனம் அதிகமானது.
  • இதில் பெற்றோரின் பங்கும் உண்டு. பெண் குழந்தையை ஆண் குழந்தைபோல் சாதாரணமாக உடை உடுத்தி வளர்க்காமல், அவர்களை அலங்காரப் பொம்மைகளாக வளர்ப்பதில் பல பெற்றோருக்குப் பெருமை. அப்படி வளர்க்கப்படும் பலர் உடையிலும் அலங்காரத்திலுமே நாட்டம் கொண்டு வளர்கிறார்கள். தன் மீதான நம்பிக்கையை வளர்க்காமல் அலங்காரத்தின் மீதான நம்பிக்கைதான் வளர்க்கப்படுகிறது.
  • ஒரு பெண்ணிற்கு இயற்கையாகக் கை, கால்களில் முடி இருந்தால் என்ன? அதை மழித்துப் பளபளவென ஆக்கிக்கொள்ள வேண்டிய அவசியமென்ன? அதேபோல் ஆணுக்கு உடலில் முடி இருப்பது ஆண்மை என இலக்கணம் வகுத்தது யார்? முடி இல்லாத ஆண்கள் மனிதர்கள் இல்லையா? இப்படிப் பொதுவாக எல்லாவற்றுக்கும் இலக்கணம் வகுத்து அதில் இயற்கையாக விழாதவர்கள் ஒருவிதமான தாழ்வுமனப்பான்மையிலும், தான் போதாமையோடு இருப்பதாகவும் நினைத்தே தன்னம்பிக்கையைத் தொலைத்து வாழ்கிறார்கள்.
  • இயற்கை பெண்ணுக்கு அளித்திருக்கும் பிள்ளை பெறும் பொறுப்பால் பதின்ம வயதில் அவள் உடல் மாற்றங்கள் அடைகிறது. அதனால் ஏற்படும் மாதவிடாயை இயல்பாகப் பார்க்காமல், ஏதோ அது அவளின் சாபமாக, அவள் செய்த பாவத்தின் பலன்போல் அருவருப்பாகப் பார்ப்பதும் நடக்கிறது. மாதவிடாய் காலத்தில் அவளின் உதிரப்போக்கு அவமானச் சின்னமாக ஆகிவிட்டது. கடைக்குச் சென்று நாப்கின் வாங்கினால் அதை ரகசியமாகக் கடைக்காரரிடம் கேட்க வேண்டும். அவரும் அதை ரகசியமாக ஒரு கறுப்புப் பையிலோ, செய்தித்தாளிலோ சுற்றித் தருவார். அதை வாங்குவதற்குள் யாரையோ கொலை செய்ததுபோல் அவள் கூனிக் குறுக வேண்டும்.
  • அவள் மார்பகம் பருவத்துக்கு ஏற்றாற்போல் வளரும்போது அதுவும் அவளுக்கொரு அவமானச் சின்னமாகச் சொல்லப்படுகிறது. அது வளர்வதற்கும் அவள் கூனிக் குறுக வேண்டும், வளராவிட்டாலும் அதை அவமானமாகக் கருதி அதற்கும் கூனிக்குறுக வேண்டும். பெண் என்றால் மார்பகம் என்பது இருக்கும்தான். அது அவள் உடல்வளர்ச்சிக்கு ஏற்றாற்போல்தான் இருக்கும் என்கிற இயல்பைச் சாதாரணமாக கடக்க இயலாத ஆறறிவு கொண்ட மனிதர்கள்தாம் நாம்.
  • திருமணம் முடிந்த பெண்ணாக இருந் தால் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் தாண்டி, அவள் கவனம் முழுவதும் அவளுடைய கணவனின் தேவை, கணவனின் பெற்றோர், உடன் பிறந்தோர் தேவை, பிள்ளைகள் பிறந்துவிட்டால் அவர்களின் தேவை என்றே சுழல வேண்டும்.
  • பெண்ணை மேலே தூக்கி வைப்பதுபோல் மறைமுகமாக அவளது உணர்வுகள், கனவுகள், ஆசைகள் அத்தனையையும் முடக்கப்பட்டுவிடும். அவள் பொறுமையின் சின்னம், தியாகச் சொரூபி, இதையெல்லாம் தாண்டி கற்புக்கரசி என்று பெயர் வாங்க வேண்டும். அப்போதுதான் அவள் திருமணம் செய்த வீடும் அவளை மதிக்கும், அவள் பிறந்த வீடும் அவளை மதிக்கும்.
  • இவையும் இன்னும் பலவும் அவளை நெருக்குகையில் அவள் திறமையானவளாகவே இருந்தாலும், படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்றவளாக இருந்தாலும், எதாவது கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருந்தாலும், வேலைக்குச் சென்று பணம் ஈட்டுபவளாக இருந்தாலும் அவளால் அவற்றில் முன்னேறுவது என்பது அவ்வளவு சுலபத்தில் நடந்துவிடுவதில்லை.
  • ஆணுக்கு அடிபணிந்து நடப்பதுதான் பெண்ணின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்; மற்றதெல்லாம் அவன் பார்த்துக்கொள்வான். இவ்வளவில்தான் குறுக்கப்பட்டிருக்கிறது அவள் வாழ்வு. இதை ஒவ்வொரு தாயும் தன் மகளுக்குக் கடத்துவதில்தான் வெற்றி பெற்றிருக்கிறது நம் ஆணாதிக்கச் சமூகம். பெண் சமநிலை அடைய கடக்க வேண்டிய தொலைவு மிக நீண்டது. அதனாலேயே இங்கு ஆணுக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியுமா? அதையும் பேசுவோம்.

நன்றி: தி இந்து (25 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories