TNPSC Thervupettagam

பெண் சிசுக்கொலைக்கு முற்றுப்புள்ளி எப்போது

August 8 , 2023 480 days 314 0
  • திருச்சி துறையூரைச் சேர்ந்த பிரியா என்பவர், போலி மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்துகொண்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பிரியாவுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கருவில் இருக்கும் மூன்றாவது குழந்தையும் பெண்தான் என்று தெரிந்துகொண்டு, இத்தகைய ஆபத்தான கருக்கலைப்பை நாடி, தன் உயிரையே இழந்துவிட்டார். பெண் சிசுக்கொலை வெவ்வேறு வகைகளில் இன்னும் தொடர்வதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
  • தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 1980-90களில் பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பதும், மீறிப் பிறந்துவிட்டால் சிசுக்கொலை செய்வதும் அதிக அளவில் இருந்தது. அதைத் தடுக்கும் நோக்கில், ‘தொட்டில் குழந்தைத் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1992இல் அறிமுகப்படுத்தினார்.
  • இப்போது தொட்டில் குழந்தைத் திட்டம் நடைமுறையில் இல்லை என்றும் அது மீண்டும் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே பச்சிளம் குழந்தைகள் கைவிடப்படுவதைத் தடுக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும்.
  • பெண் கருக்கொலையைத் தடுப்பதற்காகவே, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்வது தடை செய்யப்பட்டது. இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தமிழகத்தில் உள்ள அனைத்து ஸ்கேன் பரிசோதனை மையங்களும் முறைப்படி பதிவுசெய்யப்பட வேண்டும் என அப்போதைய திமுக அரசு 2000இல் அறிவித்தது.
  • கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்வதைத் தடைசெய்யும் சட்டம் 1994இல் இயற்றப்பட்டாலும் 2003இல்தான் அது நடைமுறைக்குவந்தது. ஆனாலும் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் பெண்ஆண் குழந்தை பிறப்பு விகிதம் 943:1,000 என்கிற அளவில் அச்சமூட்டுவதாகவே இருந்தது.
  • தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (1-4) தகவல்களும் தமிழகத்தில் நடைபெற்றுவரும் பெண் சிசுக்கொலை தொடர்வதைப் பிரதிபலிக்கின்றன. 1997-2017க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் பெண் குழந்தைகள் இப்படிக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
  • அதேபோல் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொன்னது, அது தொடர்பான குற்றங்கள் மட்டும் ஆறு லட்சத்தைத் தாண்டும். பிறப்பதற்கு முன்போ பிறந்த சில நாள்களிலோ பெண் குழந்தைகள் இப்படிக் கொல்லப்படுவது, பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது தொடர்பான சட்டங்கள், கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
  • பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என 2021 தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்து இருந்தது. இதற்கெனத் தனிக் குழு அமைக்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதுபோன்ற வாக்குறுதிகள் என்னவாயின என்கிற கேள்வியையும் பிரியாவின் மரணம் எழுப்புகிறது.
  • ஆண் என்றால் வரவு, பெண் என்றால் செலவு என்கிற எண்ணம் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மக்கள் மனதில் வேரோடிப் போயிருப்பதும் பெண் குழந்தைகள் மீதான வெறுப்புக்கு முக்கியக் காரணம். இந்த எண்ணத்தை மாற்றுவதற்கான செயல்பாடுகளில் அரசு உடனடியாக ஈடுபட வேண்டும். பெண் குழந்தை பிறப்பு, பெண் கல்விக்கு உதவி போன்ற சிறந்த திட்டங்களோடு பெண் கருக்கொலை சிசுக்கொலையைத் தடுப்பதற்கான திட்டங்களையும் அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories