- குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி சுனிதா அகர்வால் நியமிக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகள் நியமனத்தில் பாலின சமத்துவத்தையும் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக சுனிதா அகர்வாலின் நியமனத்தைக் கருதலாம்.
- தெலங்கானா, ஒடிஷா, கேரளம், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகளைக் கடந்த வாரம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்தார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றிவந்த சுனிதா அகர்வால், குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜூலை 5 அன்று பரிந்துரைத்திருந்தது.
- சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 1991இல் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நீதிபதி லீலா சேத். அதன் பிறகும் பெண்கள் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார்கள் என்றாலும் சுனிதா அகர்வாலின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது எந்த இந்திய உயர் நீதிமன்றத்திலும் பெண் நீதிபதி தலைமை வகிக்கவில்லை.
- இந்நிலையில், சுனிதா அகர்வாலை குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பது நீதிமன்றங்களின் உயர் அடுக்குகளில் பாலின சமத்துவத்தை அடைவதற்கான முக்கிய நகர்வாக இருக்கும் என்று அந்தப் பரிந்துரையில் கூறப்பட்டிருந்தது.
- கொலீஜியத்தின் இந்தக் கூற்று நீதிபதிகள் நியமனத்தில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் விவகாரத்தில் இந்திய நீதிமன்ற அமைப்பு பயணிக்க வேண்டிய தொலைவையும் நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதிலும் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.
- 2018இலிருந்து தற்போதுவரை உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 454 பேர் (75%) பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேகவால் கடந்த வாரம் மக்களவையில் தெரிவித்தார்.
- உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 72 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த 18 பேர், பட்டியல் பழங்குடிகள் 9 பேர், சிறுபான்மையினர் 34 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர். மேகவாலுக்கு முன் சட்ட அமைச்சராக கிரண் ரிஜிஜு இருந்தபோதும் நீதிபதிகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாததைச் சுட்டிக்காட்டி கொலீஜியம் அமைப்பை விமர்சித்துவந்தார்.
- ஆனால், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையையும் பல்வேறு சாதிகள், மதங்கள், பிராந்தியங்கள் - பெண்களின் பிரதிநிதித் துவத்தையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் அண்மைக்கால செயல்பாடுகளைக் கவனித்துவரும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
- நீதிபதிகள் நியமனத்தில் தகுதி, தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு கவனம் செலுத்திவருவது வரவேற்புக்குரியது. அதே நேரம், இதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப் பட வேண்டும், தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் பன்மைத்துவம் இந்திய உயர் நீதிமன்றங்களிலும் முழுமையாகப் பிரதிபலிக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 07 – 2023)