TNPSC Thervupettagam

பெண் வாழ்வுதனைப் பேசிய படைப்பாளி

November 5 , 2024 63 days 84 0

பெண் வாழ்வுதனைப் பேசிய படைப்பாளி

  • இருபதாம் நூற்றாண்டின் முற்பகு​தியில் தமிழக பிராமணக் குடும்​பங்​களில் ஆசாரம் என்ற பெயரில் நிறைய பழைமைவாதங்கள் கடைப்​பிடிக்​கப்​பட்டன. கையெழுத்துப் போடும் அளவுக்கு மேல், பள்ளி செல்லவும் உரிமை​யில்லை. அத்தகையதொரு குடும்பத்தில் முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்.
  • புகுந்த வீடும் மிகப்​பெரிய கூட்டுக் குடும்பம். சலிப்​பூட்டும் தொடர்ச்​சியான வீட்டுப் பணிகளுக்கு இடையில் ஒரே ஆசுவாசம் வீடு தேடிவரும் பல்வேறுபட்ட பத்திரி​கைகள். புதிய சிந்தனைகள் அவருக்குள் உருப்பெற வாசிப்பு அனுபவம் பேருதவியாக இருந்தது. தனது சிந்தனை எழுச்​சியில் எழுந்த பெண் வாழ்வுதனைப் படிப்​படியாக எழுதவும் தொடங்​கினார். நூற்றாண்டு காணும் பெண்ணியப் படைப்​பாளியாக உயர்ந்​தார்!

கள ஆய்வும் எழுத்தும்:

  • சிறுகதைகள் மூலமே அவரின் எழுத்துப் பயணம் தொடர்ந்தது. பின்னால் நாவல் எழுத்தாக மாறியது. புனைவு, அபுனைவு என இரு வகைகளிலும் தன் குரலை அழுத்​த​மாகப் பதிவுசெய்​தவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், ‘மித்ரா’ என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள், சிறுவர்​களுக்கான படைப்புகள் என்று அனைத்துத் தளங்களிலும் காத்திரமாக இயங்கியவர்.
  • அவரின் பெரும்​பாலான படைப்புகள் மைய நீரோட்​டத்தில் இருந்து விலக்​கப்​பட்​ட​வர்​களாகவும் விலகிய​வர்​களாகவும் உள்ள எளிய மக்களின் வாழ்க்கையை வெளிச்​சத்​துக்குக் கொண்டு​வந்​ததுடன், அவர்களின் அவல வாழ்க்கை​யையும் பேசின. கள ஆய்வு முறையிலான எழுத்து வடிவத்தைத் தமிழில் தொடங்கி வெற்றி பெற்ற எழுத்​தாளர் ராஜம் கிருஷ்ணன்.
  • ஆனால், இம்முறையை அப்போதைய எழுத்​தாளர்கள் பலரும் கடும் விமர்​சனத்​துக்கு உள்படுத்​தினார்கள். அடித்​தட்டு மக்கள் குறித்த ஓர் ஆழ்ந்த பார்வை அவரிடம் இருந்தது. இதற்கான தேடலாகவே அவரது எழுத்துப் பயணமும் இருந்​துள்ளது.
  • நீலகிரி மலைப்​பகு​தியில் வாழும் படுகர் இன மக்களின் வாழ்க்கை முறை குறித்து நீண்ட ஆய்வுக்குப் பின் எழுதப்பட்ட நாவல் ‘குறிஞ்​சித்தேன்’. இருபதாம் நூற்றாண்டின் தொடக்​கத்​திலிருந்து ஐந்து குறிஞ்சிப் பருவங்​களில் - அதாவது 60 ஆண்டு​களில் - நவீன வாழ்க்கை முறை தரும் நெருக்​கடிகளால் உந்தப்​பட்டுப் பாரம்பரிய விவசாய முறையைக் கைவிட்டுத் தங்கள் சிறு நிலங்​களில் தேயிலை பயிரிட நேர்ந்த அவலத்​தையும் பொருளாதார வாழ்க்கை முறையுடன் அது அவர்களின் பண்பாட்டு வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்கு​வதையும் 1960களின் தொடக்​கத்​திலேயே பதிவுசெய்​துள்ளார்.

உண்மையை வெளிக்​கொணர்ந்த படைப்புகள்:

  • தூத்துக்குடி மீனவர்கள் - குறிப்​பாகப் பெண்களின் வாழ்க்கையை உப்பளத் தொழிலின் பின்னணியில் ‘கரிப்பு மணிகள்’ என்ற நாவலாக எழுதி​யவர் இவர். இடிந்​தகரை, மணப்பாடு அவற்றைச் சுற்றி​யுள்ள பகுதி​களும் அரியவகை சுறா மீன்களை அதிகம் கொண்டவை. சுறாவின் துடுப்பும் வாலும் தூவி என அழைக்​கப்​படும்; இவை மிகவும் விலை உயர்ந்தவை; அப்பகு​தியில் வாழ்ந்த மீனவர்​களின் வறுமை நிலையைப் பயன்படுத்​திக்​கொண்டு, கழிவுப்​பொருள் என்ற பெயரில் தூவியைப் பெற்று தேவால​யங்கள் ஏற்றுமதி செய்து பணமாக்​கிக்​கொண்டதால் மீனவர்கள் எவ்வாறு ஏமாற்​றப்​படு​கிறார்கள் என்பதையும் 1970களிலேயே ‘அலைவாய்க் கரையில்’ நாவலில் பட்டவர்த்​தன​மாகப் போட்டுடைத்​தவர்.
  • மீனவ மக்களுக்கும் தேவால​யங்​களுக்கும் இடையே ஏற்படும் தூவிப் பங்கு தொடர்பான பிரச்​சினையை முன்னிட்டு ஆர்.எஸ்​.எஸ். அங்கு நுழைந்து, மீனவ மக்களிடையே கலவரம் ஏற்படுத்த முயல்வது குறித்தும் பேசும் இந்த நாவல், 1960களில் அப்பகு​தியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்​படை​யாகக் கொண்டது.
  • தன் கணவரின் பணியிட நிமித்​த​மாக​வும், நாவல்​களுக்கான களங்களையும் தேடிய அவரது பயணங்கள் அவரது அரசியல் பார்வையை விரிவுபடுத்​தி​யதோடு அவர் மீது தாக்கம்​செலுத்​தவும் செய்தன. குறிப்பாக, கோவா விடுதலைப் போராட்டம் குறித்து அறிவதற்கான தேடலில் ஈடுபட்​டபோது (‘வளைக்​கரம்’ நாவல்) அகிம்சைத் தத்து​வத்​தால்தான் நாடு விடுதலை பெற்றது என்ற கூற்று அவருக்கு முழுமை​யாகப் படவில்லை.
  • நாட்டு விடுதலையில் ஆயுதங்​களுக்கும் வன்முறைக்கும் பங்கிருந்​ததையும் உணர்ந்தார். உண்மையான சத்தி​யாக்​கிரகம், காந்தி​யடிகள் கூறிய அகிம்சை வழி கைகூடாத கனவா என்ற சிந்தனை​வசப்​பட்டு அவர் மேற்கொண்ட சுய ஆய்வே ‘வேருக்கு நீர்’ நாவலாக வெளிப்​பட்டது. இந்நாவல் ராஜம் கிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுத் தந்தது.
  • அடித்​தட்டுப் பெண்கள் மட்டுமல்​லாமல், தன்னைப் போன்று எழுத்து, ஆய்வுப்புலம் என்றிருக்கும் ஒரு பெண்ணைக் கதாநாயகி​யாக்கி அவர் படைத்த நூல் ‘தோட்​டக்​காரி’. மூச்சு முட்டும் வீட்டுப் பணிகள், அடுப்​பங்​கரையைத் தாண்டி வந்துதான் தன் எழுத்தைப் பற்றிப் பெண்கள் சிந்திக்கவே முடியும்.
  • இல்லத்​தரசியான எழுத்​தாளப் பெண் சொந்தக் குடும்பத்​தின​ராலும் சக உறவுகளாலும் சமூகத்​தாலும் எவ்வாறு பார்க்​கப்​படு​கிறாள்? அவள் எழுத்து அங்கு எவ்வாறு மதிக்​கப்​படு​கிறது? இத்தனை தடைகளையும் மீறி அவள் எவ்வாறு தன் எழுத்​தின்வழி புகழ் பெறுகிறாள் என்பதையும் மிக நுட்பமாக எழுதிய நாவலே ‘தோட்​டக்​காரி’. பிற நாவல்கள் அளவுக்கு இந்நூல் பிரபல​மாக​வில்லை என்பதும் பேசப்​பட​வில்லை என்பதும் துயரம்!

மணியம்மாள் சரிதம்:

  • ராஜம் கிருஷ்ணனைப் பற்றி அடிக்கடி நலம் விசாரிப்பவர் மூத்த பத்திரி​கை​யாளர் சின்னக்​குத்​தூசி. நான் அவரைச் சென்று சந்திக்​கும்​போதெல்லாம் மறக்காமல் ராஜம் கிருஷ்ணன் குறித்தும் விசாரிப்​பார். அதேபோல ராஜம் கிருஷ்ணனிடம் பேசும்போது அவர் தவறாமல் சின்னக்​குத்தூசி பற்றி விசாரிப்​பார். சின்னக்​குத்​தூசியைக் ‘குத்​தூஸ்’ என்றே அழைப்​பார்.
  • ‘பாதையில் பதிந்த அடிகள்’ நாவலில் மணலூர் மணியம்மாள் பற்றி எழுது​வதற்கு குத்தூசிதான் ஏராளமான தகவல்கள் அளித்து உதவினார் என்பார். மணலூர் மணியம்​மாளிடம் சின்னக்​குத்தூசி உதவியாளராகப் பணியாற்றியவர். மணலூர் மணியம்மாள் பற்றிய தகவல்​களைக் கேட்டு, ராஜம் கிருஷ்ணன் சின்னக்​குத்​தூசியைச் சந்திக்க வந்தது பற்றி சுவாரசியமாக விவரிப்​பார்.
  • மணலூர் மணியம்மாள் இடதுசாரி இயக்கத்தில் தீவிர​மாகச் செயல்​பட்​டதுடன் கீழத்​தஞ்சைப் பகுதியில் நிலப்​பிரபுத்துவக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி மக்கள் மனங்களில் நீங்காது வாழ்ந்த​போதும் அவர் குறித்த ஒரு ஒளிப்படமோ தகவல்களோ கிடையாது. அவர் உருவம் எப்படி இருக்கும் என்பது குறித்​தெல்லாம் சின்னக்​குத்​தூசி​யாரைச் சந்திக்கும் வரை ஒரு தெளிவில்லாத சித்திரமே இருந்தது.
  • மணியம்​மாளின் உருவம், நடை, உடை, பாவனைகள் குறித்து சின்னக்​குத்தூசி அளித்த தகவல்​களுடன் மணியம்​மாளின் வாழ்க்கையைப் பற்றி - அவர் வாழ்ந்த கீழத்​தஞ்சை பகுதி​களில் அலைந்து திரிந்து அவர் யாருக்​காகத் தன் வாழ்க்கையை அர்ப்​பணித்​துக்​கொண்டு வாழ்ந்தாரோ அதே மக்களைச் சந்தித்துத் தகவல்கள் திரட்டி - ‘பாதையில் பதிந்த அடிகள்’ என எழுதி, மணியம்மாளை உயிருடன் உலவவிட்டவர் ராஜம் கிருஷ்ணன் என்றால் மிகையா​காது.

பெண்ணுரிமைக் குரல்:

  • பெண்ணை அடிமைப்​படுத்தக் காலந்​தோறும் ஏராளமான கட்டுக்​கதைகள் புனையப்​படு​கின்றன. புதிய காலத்தில் பழைய விலங்​குகள் அகற்றப்​பட்டால் மீண்டும் புதிய விலங்​குகளை ஆண் சமூகம் வலிந்து அதனினும் வலுவாகப் பூட்டு​கிறது. பெண்ணை அடிமைப்​படுத்தி வைத்திருக்கும் கட்டுக்​கதைகள், மூடநம்​பிக்கைகள், பழக்கவழக்கம் என்கிற பெயரில் பின்பற்​றப்​படும் பத்தாம்​பசலித்​தனமான நம்பிக்கைகள் ஆகியவற்றை உடைத்​தழிக்க வேண்டிய அவசியம் குறித்துக் ‘காலந்​தோறும் பெண்’, ‘காலந்​தோறும் பெண்மை’ ஆகிய நூல்களில் எழுதினார்.
  • நவீன மருத்துவ அறிவியல் உலகம் பெண் உடல் மீது செலுத்திய மிகக் கொடூரமான வன்முறை கருத்தடை முறை. கருத்​தடைச் சாதனத்தை ஆண்கள் பயன்படுத்து​வதுதான் எளிதானது. ஆனால், விதம்​விதமான கருத்​தடைச் சாதனங்கள், கருத்தடை முறைகள் பெண்ணைக் குறிவைத்து அவள் உடலில் வலிந்து திணிக்​கப்​படு​கின்றன. சமூகமும் கருத்​தடையைப் பெண்களுக்கே நிர்ப்​பந்​தப்​படுத்து​கிறது. கருத்தடை குறித்த புரிதலுடன் எதிர்த்துப் போராட​வும், விழிப்பு​ணர்​வூட்​டவும் கூடிய நூல் அவர் எழுதிய ‘உயிர் விளையும் நிலங்​கள்’.
  • இடதுசாரிப் பெண்கள் அமைப்பான இந்திய மாதர் தேசிய சம்மேளனத் (National Federation of Indian Women NFIW) தலைவராகவும் செயல்​பட்டவர் ராஜம் கிருஷ்ணன். அவர் தீவிரமான படைப்​பாளராக இருந்த காலத்​தில், பொதுவாக எழுத்​தாளர்கள் சந்திக்க நேரும் வறுமை நிலை போன்ற எந்த அவலத்​தையும் அவர் சந்திக்க​வில்லை. அதற்கு அவரது கணவர் கிருஷ்ணனின் ஆதரவும் பங்களிப்பும் முக்கியக் காரணங்கள்.
  • தன் ஒவ்வொரு படைப்​பையும் திட்ட​மிட்டு உருவாக்​கினார். தன் வாழ்க்கையின் பெரும் பகுதியில் கள ஆய்வுகள், பெண் உரிமைக்கான மாநாடுகள், பேரணிகள், ஆய்வுக் கட்டுரைகள், பயணங்கள் எனப் பரபரப்பாக இயங்கியவர், தரவுகளைத் தொகுப்​ப​தற்கான உதவியும் ஆங்காங்​கிருந்த இடதுசா​ரிகள், முற்போக்​காளர்​களிட​மிருந்து அவருக்குக் கிடைத்தன. இறுதி ஆண்டு​களைத் தனிமை​யில்தான் கழித்​தார்.
  • தானே முதியோர் இல்லத்தில் சேர்ந்தது, போரூர் மருத்​துவ​மனை​யிலேயே தங்கி​யிருந்தது என வாழ்வின் போக்குகளை அவர் யதார்த்தமாக எடுத்​துக்​கொண்​ட​போதும், தன்னைக் கட்டுப்​படுத்த முடியாமல் அவர் அழுது கதறிய தருணங்​களும் இருந்தன. இறுதிக் காலத்தில் அவர் சந்தித்த தனிமையும் துயரமும் வேதனை நிரம்​பியவை... எவருக்கும் வாய்க்கக் கூடாதவை!
  • 5-11-2024 ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு தொடக்கம்

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories