- ஏதோவொரு கணத்தில் நம் வாழ்வில் எதிர்ப்படுகிற நிகழ்வோ சொல்லோ மனிதரோ அதுவரை நாம் நினைத்துக் கூடப் பார்க்காத திசையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லக்கூடும். அப்படியொரு தருணம் முத்துலட்சுமியின் வாழ்க்கையிலும் வாய்த்தது.
- கணவனை இழந்த பிராமணக் கைம்பெண்களுக் காகச் சகோதரி சுப்பலட்சுமி நடத்திவந்த இல்லத்தில் பிராமணர் அல்லாத பெண்களைச் சேர்ப்பதற்கு அந்த இல்லத்துக்கு நிதியுதவி அளித்துவந்தவர்கள் மறுத்தது முத்துலட்சுமியை மிகவும் பாதித்தது. எவ்விதப் பேதமும் இன்றி அனைத்து சாதிப் பெண்களும் தங்கும் வகையில் ஓர் இல்லத்தையும் படிக்கும் வகையில் ஒரு பள்ளியையும் அமைக்க வேண்டும் என்கிற எண்ணம் முத்துலட்சுமியின் மனதில் தீப்பொறியாக விழுந்தது. அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் நாளும் வந்தது.
அனைவருக்குமான இல்லம்
- 1930களில் ஒரு நாள் மூன்று பெண்கள் முத்துலட்சுமியைத் தேடி வந்தனர். ‘பொட்டுக்கட்டுதல்’ என்னும் கொடுமை நிறைந்த சடங்கிலிருந்து தப்பித்து அந்தப் பெண்கள் சென்னை வந்திருந்தனர். அவர்களைத் தங்க வைப்பதற்காகப் பெண்கள் இல்லங்களை நாடினார் முத்துலட்சுமி. அப்போதைய மதராஸில் பிராமணப் பெண்களுக்கு ஒன்று, பிராமணர் அல்லாத பெண்களுக்கு ஒன்று என இரண்டு இல்லங்கள் மட்டுமே இருந்தன. ஒன்றில் பிராமணர் அல்லாத பெண்களுக்கு இடமில்லை; மற்றொன்றில் சாதியப் படிநிலையில் கீழ்மட்டத்தில் இருந்த பெண்களிடம் பாகுபாடு காட்டப்பட்டது. ‘தேவதாசி’ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களை அந்த இல்லங்கள் இருகரம் நீட்டி வரவேற்றிருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இவ்வளவுக்கும் அந்த இரண்டு இல்லங்களிலும் மருத்துவ ஆலோசகராக முத்துலட்சுமி பணியாற்றிவந்தார். பெண்கள் இல்லத்துக்கு அனுப்பப்பட்ட அந்தப் பெண்கள் மோசமான வசைச்சொல்லுக்கும் அவமானத்துக்கும் ஆளாக்கப்பட்டு, முத்துலட்சுமியிடமே தஞ்சம் புகுந்தனர்.
- அந்த மூவரைத் தொடர்ந்து மேலும் சில பெண்களும் அடைக்கலம் கேட்டு முத்துலட்சுமியைத் தேடி வர உருவானதுதான் ‘அவ்வை இல்லம்’. ஆதரவும் கல்வியும் வேண்டிவரும் பெண்களுக்கு அவ்வை இல்லத்தின் கதவுகள் திறந்தே இருந்தன. பத்துப் பெண்களோடு தொடங்கப்பட்ட அந்த இல்லம், பின்னாளில் கல்வி கற்பிக்கும் பள்ளியாகவும் உயர்ந்தது. அன்றைக்கு முத்துலட்சுமியின் வீட்டுக் கதவைத் தட்டிய மூன்று பெண்களும் படித்துத் தேறினர். அவர்களில் ஒருவர் மருத்துவர், ஒருவர் செவிலி, ஒருவர் ஆசிரியர் என உயர்ந்தனர். அன்றைக்கு அவர் ஏற்றிவைத்த தீபம் பெண் கல்வி மீதான நம்பிக்கையைப் பரப்பியபடி இன்றைக்கும் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது.
வீடு மட்டுமே அடையாளம் அல்ல
- திருமணம், வீட்டு வேலைகள் மட்டுமே நம் கடமை எனப் பெண்கள் முடங்கிவிடக் கூடாது என்பதில் முத்துலட்சுமி உறுதியாக இருந்ததோடு தன் வாழ்க்கையிலும் அதைச் செயல்படுத்தினார். மதராஸ் மாகாண சட்டமன்ற நியமன உறுப்பினராகவும் பின்னாளில் சட்டமன்ற துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முத்துலட்சுமி. உலக அளவில் சட்டமன்ற துணைத் தலைவர் பதவியை வகித்த முதல் பெண்ணும் இவர்தான். சட்டமன்றப் பொறுப்பில் இருந்த காலத்தில் தேவதாசி முறை ஒழிப்பு குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதிலும் அதன் மீதான விவாதம் நடத்துவதிலும் தீவிரமாகச் செயலாற்றினார். தமிழகத்தில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதில் இவருக்கும் பங்கு உண்டு.
- தேசிய அரசியலிலும் நாட்டமுடையவராக அவர் விளங்கினார். பெண்களுக்காகவும் குழந்தைகளுக் காகவும் தொடர்ந்து குரல்கொடுத்துவந்தார். அதுவே அவரை ‘தியசாபிகல் சொசைட்டி’யோடு இணைந்து செயலாற்ற வைத்தது. இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் கல்வி பெறவும் ‘இந்தியப் பெண்கள் சங்கம்’ (WIA) தியசாபிகல் சொசைட்டி மூலம் உருவாக்கப்பட்டது. அதன் முதல் இந்திய உறுப்பினராக முத்துலட்சுமி நியமிக்கப்பட்டார். இந்தியப் பெண்கள் சங்கம் அந்நாளில் நடத்திவந்த ‘ஸ்திரி தர்மா’ என்கிற இதழின் ஆசிரியராகவும் முத்துலட்சுமி விளங்கினார். ‘பெண்ணியம்’ என்பதே புதிய சொல்லாக இருந்த சமூகத்தில் பெண்ணுரிமை குறித்தும் பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்தும் ‘ஸ்திரி தர்மா’ இதழில் எழுதினார். அடக்க ஒடுக்கமாக இருப்பதே பெண்களின் ‘தர்மம்’ என்று கற்பிக்கப்பட்டுவந்த நிலையில் பெண்கள் தனித்த அடையாளத்தோடு விளங்குவதுதான் உண்மையான ‘தர்மம்’ எனப் புதிய பாதையை உருவாக்கினார்.
புற்றுநோய்க்கு எதிரான பயணம்
- தன் வாழ்க்கையின் தனிப்பட்ட துயரங்களிலும் புறக் கணிப்புகளிலும் மூழ்கிவிடாமல் அந்த அனுபவங்களை அடித்தளமாகக் கொண்டே சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் முத்துலட்சுமி செயல்பட்டார். அவருடைய தங்கை சுந்தராம்பாள் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகித் தன் கண் எதிரிலேயே தாளாத வலியோடு மரணமடைந்தது முத்துலட்சுமியை வெகுவாகப் பாதித்தது. புற்றுநோயால் பலர் உயிரிழிக்கக் காரணம், தாமதமான நோய் கண்டறிதல்தான் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.
- லண்டன் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பார்வையிட்டுத் திரும்பியவர், இங்கேயும் அப்படி ஒரு மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்று விரும்பினார். அனைத்துத் தரப்பு மக்களுக்குமான மருத்துவமனையாக அது அமைய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மருத்துவமனைக்காக இடம் வேண்டி அப்போதைய தமிழக அமைச்சரவையை அணுகினார். ‘இறக்கப்போகிறவர்களுக்கு எதற்கு மருத்துவ மனையும் சிகிச்சையும்?’ என்பதாக அமைச்சர் ஒருவரது பதில் அமைந்தது. அதற்குப் பிறகு அமைந்த அமைச்சரவையிலும் முத்துலட்சுமியின் கோரிக்கைக் குப் பலன் இல்லை. அதிகப் பொருள் செலவும் உழைப்பும் தேவைப்படுகிற மருத்துவமனையைத் தன் சொற்ப வருமானத்தில் அவரால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. பிறகு அந்தக் கனவு எப்படி மெய்ப்பட்டது? அடுத்த வாரம் பார்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2023)