TNPSC Thervupettagam

பெண்களின் ஓட்டு யாருக்கு?

April 14 , 2024 272 days 245 0
  • ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியத் தேர்தல் வரலாற்றின் மிக நீண்ட தேர்தலாக இருக்கப்போகிறது. 1951-52 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்க்க வேண்டும் என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள இயலாத நிலையில்தான் பெரும்பாலான பெண்கள் இருந்தனர். அந்த நிலையில் இருந்து இன்று நாட்டை ஆள்வோரின் வெற்றி யைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பெண்கள் உயர்ந்துள்ளனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலும் அதைத்தான் உணர்த்தியது. அந்தத் தேர்தலில் ஆண்களைவிடப் (67.01%) பெண்களே (67.18%) அதிக அளவில் வாக்களித்திருந்தனர். தமிழ்நாட்டில் 72.3 சதவீதப் பெண்கள் வாக்களித்திருந்தனர்.
  • 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 96.9 கோடி வாக்காளர்களில் பெண்களின் எண்ணிக்கை 47.1 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலைவிடத் தற்போது 4 கோடி அதிகரித்துள்ளது. முதல் முறை வாக்களிக்கப் போவோரில் ஆண்களைவிடப் (1.22 கோடி) பெண்களே (1.41 கோடி) அதிகம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆளும் அதிகாரத்தில் யார் அமர வேண்டும் என்பதைப் பெண்கள்தான் தீர்மானிக்கப்போகிறார்கள் என்பதைத்தான் இந்த எண்ணிக்கை உணர்த்துகிறது.

பெண்கள் எங்கே?

  • வாக்களிப்பது மட்டுமே அரசியலுக்கும் பெண் களுக்குமான தொடர்பு எனப் பெரும்பாலான பெண்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். உண்மை யில் அரசின் திட்டங்களாலும் கொள்கைகளாலும் பலனடையும் அல்லது பாதிக்கப்படும் பெண்கள் அனைவருமே ஒருவிதத்தில் அரசியல் பங்கேற்பாளர்களே. இது உள்ளாட்சித் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ அல்ல; நம் தினசரி வாழ்க்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தைச் செலுத்தும் கொள்கைகளை உருவாக்குவோரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். அதனால், பெண்களின் முன்னேற்றம் சார்ந்த விஷயங்கள் இந்நேரத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.
  • 30 ஆண்டு காலத் தொடர் போராட்டத்தின் விளைவாக நாடாளுமன்றத்தில் பெண்களுக் கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா சில மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகே அது அமல்படுத்தப்படும் என்றாலும் முன்னணிக் கட்சிகள்கூட இட ஒதுக்கீட்டை முன்கூட்டியே செயல்படுத்துவதில் முனைப்பு காட்டவில்லை. பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஏமாற்றம் தரும் வகையில் இருப்பதாலும் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றிருக்கும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்து நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். அதேபோல், முத்தலாக் தடை சட்டம் போன்றவை எந்தளவுக்கு பெண்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உழைப்புக்கு அங்கீகாரம்

  • வீட்டு வேலைகளில் பெண்கள் செலவிடுகிற உடலுழைப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. பெரும்பாலான பெண்கள் பல மணி நேரத்தை வீட்டு வேலைகளுக்கே செலவிடுவதால் அவர்களால் வெளிவேலைக்குச் சென்று சமூகப் பொருளாதாரத்தில் நேரடியாகப் பங்களிக்க இயலவில்லை. பெண்களின் ஊதியமற்ற, அங்கீகாரமற்ற உழைப்பைக் கணக்கில் கொள்ளும் வகையிலான திட்டங்களை அறிவிப்போருக்கு முன்னுரிமை கொடுக்கலாம். வீட்டு வேலைகளைச் சமாளித்துக்கொண்டு வெளிவேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 2018-19ஆம் ஆண்டுகளோடு (18.6%) ஒப்பிடுகையில் 2020-21ஆம் ஆண்டுகளில் 25.1%ஆக அதிகரித்திருக்கிறது.
  • ஆனால், வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது, ஊதியம் ஆகிய இரண்டிலும் பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிறது பாலினப் பாகுபாடு குறித்த ஆக்ஸ்ஃபாம் ஆய்வு 2022. இந்த ஆய்வின்படி 2020இல் முறைசாராத் தொழிலில் ஈடுபடும் ஓர் இந்திய ஆணின் சராசரி ஊதியத்தைவிடப் (ரூ.9,017) பெண்ணின் ஊதியம் (ரூ.5,709) 58% குறைவு. நிறுவனங்களில் வேலைசெய்யும் ஆண்களின் சராசரி ஊதியம் (ரூ.19,799), பெண்களின் ஊதியத்தைவிட (ரூ.15,578) 27% அதிகம். ஒரே விதமான வேலைக்குப் பாலின அடிப்படையில் காட்டப்படும் இந்தப் பாகுபாட்டைக் களையும்விதமாகப் பெண்களின் ஊதிய வரையறைக்கும் வேலை வாய்ப்பில் சமத்துவத்துக்கும் இடமளிக்கும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

வேலையிலும் ஊதியத்திலும் சமத்துவம்

  • விவசாயப் பணிகளில் ஆண்களைவிடப் பெண்கள் அதிக உடலுழைப்பைச் செலுத்தினாலும் அவர்களுக்கு ‘விவசாயி’ என்கிற அங்கீகாரம் கிடைப்பதில்லை. முறைசாராப் பணிகள் தொடங்கிப் பெருநிறுவனங்கள் வரை அங்கீகார மறுப்பும் ஊதியப் பாகுபாடும் நிலவுவதைக் கணக்கில் கொண்டு, அதற்கேற்ப திட்டங்களை யார் அறிவித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது அல்லது தகுதிக்குக் குறைவான வேலைகளைக் கொடுப்பது போன்றவற்றால் பெண்களின் தொழில்ரீதியான பங்களிப்பு குறைவதாகத் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (2019 – 21) தெரிவிக்கிறது.
  • மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் ஆண்களைவிடப் (74.8%) பெண்களின் (25.2%) எண்ணிக்கை மிகக் குறைவு. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் தகவல்படி 2022இல் வேலையில்லாமல் வாடும் இந்தியர்களில் 82.9 சதவீதத்தினர் இளைஞர்கள். உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் இந்நாளில் படித்துவிட்டு வரும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு இல்லாத அல்லது வேலைக்குச் செல்ல முடியாத சூழலையே இது சுட்டிக்காட்டுகிறது. அரசு உயர் பதவிகளிலும் பெண்களின் எண்ணிக்கை போதுமான அளவுக்கு இல்லை. இந்திய உயர் நீதிமன்றங்களில் இருக்கும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 10%க்கும் குறைவு என்பதை வைத்தே பிற துறைகளின் நிலையை முடிவுசெய்துகொள்ளலாம். அரசு – தனி யார் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக் கீட்டுக்கான திட்டங்கள் தேர்தல் அறிக்கை களில் இடம்பெற்றிருக்கின்றனவா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு முக்கியம்

  • அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) உள்ளிட்ட துறைகளில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வர மறுபக்கம் பெண்களின் பொதுவெளிப் பாதுகாப்பு கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2022இல் பெண்கள் மீதான வன்முறை 4% அதிகரித்துள்ளதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4,45,256.
  • தொழில்நுட்பம் புதிய உயரத்தைத் தொட்டிருக்கும் இந்நாளில் பெண்கள் மீதான இணையவழித் தாக்குதலும் (டீப் ஃபேக், சைபர் குற்றங்கள்) அதிகரித்துள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்வதும் கல்வி பயில வெளியூர்களுக்குச் செல்வதும் பெண்களின் பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடையவை. பெண்களின் பணியிடப் பாதுகாப்புக்கான திட்டங்களோடு பெண்களுக்கான தங்கும் விடுதிகள், பணிபுரியும் மகளிருக்கான பேறுகால நிதி, பேறுகால விடுப்பு போன்றவை குறித்தும் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.
  • மருத்துவக் கட்டமைப்பின் மேம்பாட்டாலும் மருத்துவத் துறையின் வளர்ச்சியாலும் பேறுகால மரணங்கள் குறைந்திருக்கின்றன. பெரும்பாலான கொள்ளை நோய்கள் இன்றைக்குக் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட பெண்களைத் தாக்குகிற அதிதீவிர நோய்களுக் கான சிகிச்சையும் விழிப்புணர்வும் இன்னும் பரவலாக்கப்படவில்லை. ரத்த சோகையும் சத்துக் குறைபாடும் இந்தியப் பதின்பருவப் பெண்க ளிடையே அதிகம். அதனால், பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

கற்போம் கற்பிப்போம்

  • பெண்களின் முன்னேற்றத்துக்கு ஆதாரமாக இருப்பது கல்விதான். ஆனால், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் பிறப்பு முதலே தொடங்கும் பாலினப் பாகுபாடு பெண்களின் வளர்ச்சியில் பெரும் தடையாக இருக்கிறது. பாலின இடைவெளி குறித்த உலகளாவிய அறிக்கை 2023இன்படி பாலினப் பாகுபாட்டைக் கடைப்பிடிக்கும் 146 நாடுகளில் இந்தியா 127ஆவது இடத்தில் இருக்கிறது. 126 நாடுகள் நம்மைவிட மேம்பட்ட பாலினச் சமத்துவக் கொள்கையைச் செயல்படுத்திவருகின்றன. பண்பாட்டு ரீதியாகப் பெண்களைக் கொண்டாடும் நம் சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு உள்ளிட்ட பலவற்றில் பெண்கள் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுவது இன்றைக்கும் தொடர்கிறது. அதனால், அடிப்படைக் கல்வியி லேயே பாலினச் சமத்துவம் குறித்த விழிப்புணர்வை இருபாலாரிடமும் ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒரு பக்கம் பெண் கல்விக்கான நலத் திட்டங்களோடு மறுபக்கம் பாலினப் பாகுபாட்டைக் களைவதற்கான தொலைநோக்குத் திட்டங்களும் காலத்தின் தேவை.
  • வீட்டு உறுப்பினர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கோ வீட்டினர் பரிந்துரைக்கும் கட்சிக்கோ பெண்கள் வாக்களிக்கும் நிலை இன்று மாறிவருகிறது. சுயமாகச் சிந்தித்து வாக்களிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற தேர்தலில் பெண்களின் வாக்குதான் வெற்றியை முடிவுசெய்தது. பெண்கள் நினைத்தால் மாற்றம் சாத்தியமே என்பதற்கு துருக்கிப் பெண்களே உதாரணம். அதனால், இந்தத் தேர்தலில் பெண்கள் அனைவரும் வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும்தான்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories