- பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் கருவுற்ற 17 வயது சிறுமியின் ஏழு மாதக் கருவைக் கலைப்பதற்கு அனுமதி கோரிய வழக்கு ஒன்றில் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இந்திய அரசு நியாயமான காரணங்களுக்காகக் கருகலைப்பைச் சட்டப்படி அனுமதிக்கிறது. ஆனால், 24 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் அனுமதி தேவை.
- இதன் காரணமாகத்தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் கருவுற்ற சிறுமியின் ஏழு மாதக் கருவைக் கலைப்பதற்குச் சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றத்தின் அனுமதியை நாடினார். இந்த வழக்கின் மீதான விசாரணை யின்போதுதான் ‘அந்தக் காலத்தில் 14 அல்லது 15 வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். 17 வயதில் குழந்தை பிறப்பது இயல்பு’ என நீதிபதி தெரிவித்திருந்தார்.
- அந்தந்தக் காலத்து நியாயங்கள் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமாக இருப்பதில்லை. 18 வயதுக்குக் குறைவான சிறுமியர் கருவுறுதல் பெண்களின் உடல்நல, உளநலப் பிரச்சினை மட்டுமல்ல; அவர்களின் கல்வி, பொருளாதாரத் தற்சார்பு, பொதுவெளிப் பங்கேற்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் உள்ளடக்கியது. மேலும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் தடையாக இருப்பது.
- குழந்தைப் பருவத்தில் கருவுறுதலைத் தடுக்கவும் குழந்தைத் திருமணத்தை ஒழிக்கவும், பெண் கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்தவும் ஐ.நா. சபையும் உலக சுகாதார நிறுவனமும் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளும் பல்வேறு வகைகளில் முயன்றுவரும் சூழலில் நீதிபதியின் கருத்து, இது குறித்து நாம் பொதுவெளியில் விவாதிப்பதை அவசியமாக்கியுள்ளது.
இள வயது ஆபத்து
- இளம் வயதில் கருவுறுதல் பெண்களின் இனப்பெருக்க நலனின் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு வாழ்ந்நாள் முழுவதும் அவர்களின் உடல் நலனைப் பாதிக்கும் காரணியாக உள்ளது. இந்தியாவில் 15 -19 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 59.1% ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இவர்கள் கருவுறுவது நல்லதல்ல. 20-24 வயதில் குழந்தை பெறும் பெண்களைக் காட்டிலும் 10-19 வயதுக்குள் குழந்தை பெறும் பெண்கள் மிக ஆபத்தான குளிர் காய்ச்சல் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு ஆளாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
- இவை மட்டுமன்றி குழந்தைப் பிறப்பின்போது அதிக ரத்தப்போக்கு, தாய்-சேய் இறப்பு, எடை குறைந்த குழந்தை பிறப்பது, தாய்க்குச் சத்துக் குறைபாடு, குழந்தைக்குப் பாலூட்ட இயலாத நிலை, குழந்தைக்கு எளிதில் நோய் தொற்றும் அபாயம் போன்ற ஆபத்துகளும் உள்ளன. 20 வயதுக்குக் குறைவான தாய்மார்களின் பிரசவத்தின்போது குழந்தைகள் இறப்பது 1000க்கு 55ஆக உள்ளது.
இளம் தாய்மார்களின் பிரச்சினை
- இந்தியாவில் 20-24 வயதுக்கு உள்பட்ட வர்களில் 27% 18 வயதுக்கு முன்பே திருமணமானவர்கள். மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்குச் சட்டப்படியான திருமண வயதுக்கு முன்பே திருமணம் நடக்கிறது. 15 முதல் 19 வயதுடையவர்களில் 7.9% ஏற்கெனவே தாய்மார்களாக உள்ளனர் என 2019-2020 ஆண்டுக்கான தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கரோனா பெருந் தொற்றுக்காலத்தில் குடும்பங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, உயிர் இழப்புகள், அரசின் கண்காணிப்பிற்கான சாத்தியமின்மை போன்ற காரணங்களால் குழந்தைத் திருமணங்கள் அதிகமாகவே நடைபெற்றன.
- பள்ளிப் பருவத்தில் திருமணம் செய்வதால் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவதும் பெண்கள் உயர் கல்விக்குச் செல்ல இயலாத நிலையும் ஏற்படுகிறது. கல்வியின்மை, தொழில்நுட்ப அறிவும் திறனும் இன்மை, குடும்பத்தை, குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு போன்ற காரணங்களால் பெண்கள் பொருளாதாரத்திற்காகப் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய சூழலை உருவாக்குகிறது. இச்சார்பு நிலை சுரண்டல், வன்முறை, கட்டாயக் கருவுறுதல், கட்டாயக் கருகலைப்பு போன்றவற்றுக்குப் பெண்களை இலக்காக்குகிறது.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் கருவுறும் பெண்களின் அவலநிலை சொல்லி மாளாதது. ஏற்கெனவே உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட இவர்கள் அச்சம், அவமானம், குற்ற உணர்வு, பெற்றோர், சமூகத்தின் புறக்கணிப்பு, தூற்றுதல், வன்முறை போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. இத்தகைய சூழலில் மாட்டித் தவிக்கும் பெண்களுக்குக் கருக்கலைப்பைச் சட்டம் அனுமதித்தபோதிலும் அதைப் பயன்படுத்திக் கொள்வது பாதிக்கப்பட்ட எல்லாப் பொண்களுக்கும் சாத்தியமானதாக இல்லை.
- ரகசியமாகச் செய்யப்படும் முறையற்ற கருக்கலைப்புகளாலும் அவர்கள் உயிரிழக்கவும் நேரிடுகிறது. அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதை யாரும் வரவேற்பதில்லை. புறக்கணிக்கப்படும் தாயையும் சேயையும் காப்பாற்றுவதற்கு நம்மிடம் திட்டங்களும் இல்லை. வீட்டைவிட்டு வெளியேறுவது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது, தற்கொலை செய்துகொள்வது போன்ற தவறான முடிவுகளுக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர்.
அரசின் செயல்பாடுகள்
- இளம் வயது கருவுறுதலைத் தடுக்க குழந்தைத் திருமணத்தைத் தடைசெய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளைப் படிக்கவைப்பது, பாதுகாப்பது என்ற நோக்கோடு குழந்தைத் திருமணத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. குழந்தைத் திருமண தடைச் சட்டம் - 2006, பெண்ணுக்கு 18 வயது முடியும் முன்பும், ஆணுக்கு 21 வயது முடியும் முன்பும் செய்யப்படும் திருமணத்தைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி இரண்டு ஆண்டுச் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம்வரை அபராதம் என அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வும் குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கான அலுவலர் மாவட்டங்கள்தோறும் நியமிக்கப்பட்டுள்ளார். பெண் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்க போக்ஸோ சட்டத்தின் மூலம் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிப் பருவத்தில் இலவசப் போக்குவரத்து வசதி, கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கிப் பெண்கல்வி தொடர தமிழக அரசு வகை செய்கிறது.
சமூகத்தின் பொறுப்பு
- இளம் வயது கருவுறுதலுக்கு மூன்று முக்கியக் காரணங்களைக் குறிப்பிடலாம்.
- பெற்றோர்களே நடத்திவைக்கும் குழந்தைத் திருமணம். திருமணம் ஆனவுடன் பெண்ணைக் கருவுற நிர்ப்பந்தித்தல்.
- 18 வயதுக்கு முன்னே பெண் குழந்தைகளே காதல் வயப்பட்டுத் திருமணம் இன்றிக் கருவுறு தல் அல்லது திருமணம் செய்தவுடன் கருவுறுதல்.
- பாலியல் வல்லுறவின் விளைவாகக் கருவுறுதல்.
- இவை மூன்றும் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
- குழந்தைத் திருமணம் ஒரு சமூகக் குற்றம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- பெண் கல்வியின் அவசியம், இளம் வயதுக் கருவுறுதலின் தீமைகள் குறித்த பரப்புரைகளைப் பல்வேறு ஊடகங்கள் வழி அரசும் அரசு சாரா அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும்.
- பள்ளிகளில் பாலியல் கல்வி, வாழ்க்கைக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- பாலியல் துன்புறுத்தல் இல்லாத வாழ்க்கையை வீடும் சமுதாயமும் உறுதிப்படுத்த வேண்டும்.
- பாலியல் வல்லுறவின் விளைவாகக் கருவுறும் பிள்ளைகளைப் பாதிக்கப்பட்டவராகக் கருதிப் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான மருத்துவ, உடல்நல, உளநல உதவிகளை வீடும் அவர்கள் வாழும் சமூகமும் அளிக்க வேண்டும். கருவைக் கலைக்க இயலாத சூழலில் பாதுகாப்பான மகப்பேறுக்கு உதவ வேண்டும். தாய் - சேய் பேணுதலுக்கான பொறுப்பைக் குடும்பமும் அரசும் ஏற்றுச் செயல்படவேண்டும்.
- இளம் வயதில் கருவுறுதல் என்பது உலகளாவிய பிரச்சினை. பெண்கல்வி, பெண்களின் மேம்பாடு, பாலினச் சமத்துவம் போன்ற முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் பிரச்சினை. இதை முடிவுக்குக் கொண்டுவருவது சட்டங்களால் மட்டும் சாத்தியமல்ல. மக்களின் மனநிலை மாற்றமும் துணிந்த செயல்பாடுகளும் தேவை.
நன்றி: தி இந்து (25 – 06 – 2023)