TNPSC Thervupettagam

பெண்களுக்கு வேண்டும் பெருங்கனவு

October 10 , 2019 1872 days 1131 0
  • பாட்னாவில் அனைத்துப் பெண்கள் அஞ்சல் நிலையம் ஒன்று புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது.
  • பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிக்கொள்ளும் செல்ஃபிகளும் அந்தச் செய்தியுடன் வெளியாகியிருந்தன.
செய்திக் குறிப்பு
  • அங்கன்வாடி ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராடியதாகக் குறிப்பிட்டிருந்த மற்றொரு செய்திக் குறிப்பில் முழுவதும் பெண்கள் மட்டுமே வரிசையாய் அமர்ந்து கையில் பதாகைகளை ஏந்திய புகைப்படம் ஒன்றையும் காண முடிந்தது. ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்குப் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என அரசு கட்டாயமாக வலியுறுத்துகிறது.
  • பெண் ஆசிரியர்களால் மட்டுமே பாலகர்களைத் தாயுள்ளத்தோடு அணுக முடியும் என்பதால்தான் நியமனங்களில் இவ்வாறான விதிமுறைகளைப் புகுத்தியுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
  • மேற்கூறிய அனைத்தும் சமூகத்தில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தளங்களின் சில உதாரணங்கள்தான் என்பதும், கொண்டாட்டங்கள் முதல் போராட்டங்கள் வரை பெண்களுக்கென பிரத்யேகமாக நிகழ்ந்துவருவதும், பெண்ணுரிமை வலியுறுத்தும் பொருட்டு அவர்களுக்கென தனிப்பட்ட பணிகள் ஒதுக்கப்பட்டிருப்பதும், பெண்களைச் சமூகம் அவர்களுக்கான மதிப்பை அளித்து வாஞ்சையுடன் சிலசமயங்களில் கொண்டாடிவருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்தான்.
  • அதேவேளையில், ‘ஃபார்ச்சூன்’ இதழின் ‘க்ளோபல் 500’-ல் வெளியாகியிருக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளின் இந்த ஆண்டுக்கான பட்டியலில், பெண்கள் 6.6%, அதாவது 33 பெண்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை ‘ஃபார்ச்சூன்’ இதழ் வெளியிட்டுள்ளது.
  • வாங்காரி மாத்தாய் என்னும் நோபல் பரிசு வென்ற கென்ய சுற்றுச்சூழலியலாளர், ஒருமுறை தனது உரையில் ‘சமூகத்தின் மேல் தளங்களுக்குச் செல்லச் செல்ல, அங்கு குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பெண்கள் காணப்படுகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருப்பார்.
  • சமூகத்தின் அடித்தட்டுப் பதவிகளும் பொறுப்புகளும் பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் வழங்கப்படும் போது பெரும்பாலான பெண்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டுவிடுகிறார்கள்.
  • சமூகம் பெண்களுக்கு வழங்கும் சிறு அங்கீகாரத்தைக்கூட அவர்களுடைய நீண்ட அடிமைத்தனத்துக்குக் கிடைத்த ஒட்டுமொத்த விடுதலை எனப் பெண்கள் நம்பிவிடுகிறார்கள்.
பெண்கள் சமூகம்
  • இவ்வாறான ஈர்ப்புகளும் நம்பிக்கைகளும் பெண்களைச் சமூகத்தின் அடித்தளத்தில் மட்டுமே இயங்கும்படி செய்துவிடுகிறது. அந்த மாயையிலிருந்து விடுபட்டு, அடுத்த கட்டங்களை நோக்கிப் பயணிக்கும் பெண்கள் எண்ணிக்கையில் வெகு சிலரே. எஞ்சியவர்கள் ‘கிடைத்தது போதும்’ எனச் சிறு வட்டத்துக்குள் வாழத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்கிறார்கள்.
  • மேலும், பெரிய இலக்குகளுக்குப் பெண்கள் தங்களைத் தகுந்த முறையில் தயார்படுத்திக் கொள்வதில்லை என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப் படுகிறது. உண்மையில், ஒரு ஆண் தனது லட்சியங்களை அடைய கனவுகள் காண வேண்டுமென்றால், ஒரு பெண் அதே லட்சியங்களை அடையப் பெருங்கனவுகள் காண வேண்டியுள்ளது.
  • பெரிய இலக்குகள், பெரிய பதவிகள், பெரிய பொறுப்புகளுக்குப் பெண்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • அத்தகைய தயாரிப்பு, சமூகத்தின் அடித்தளப் பணி களிலிருந்து தொடங்குகிறது என்றாலும், அந்த நிலையிலேயே தேக்கம் அடைந்துவிடாமல் தங்களின் கனவுகளைத் துரத்த வேண்டியது இன்றைய சமூகத் தேவையென்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories