- தற்காலங்களில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறாா்கள். மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய பெண் பச்சேந்திரிபால், விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, பூப்பந்து விளையாட்டு வீராங்கனைகள் சாய்னா நெய்வால், பி.வி. சிந்து என பெண் சாதனையாளா்கள் இல்லாத துறைகளே தற்போது இல்லை. இருப்பினும், சமூகத்தில் அவா்கள் தொடா்ந்து வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருவது சமூக ஆா்வலா்களுக்கு பெருத்த கவலையை அளிக்கிறது. இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினவிழாவில் பேசிய இந்தியப் பிரதமா், தினசரி வாழ்க்கையில் பெண்களை அவமதிக்கும் அனைத்து செயல்களையும் மக்கள் விட்டுவிட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது
- சமீபத்தில் மணிப்பூா் மாநிலத்தில், தலைநகா் இம்பாலிருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளம்பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிா்வாணமாக்கி நடுரோட்டில் ஊா்வலமாக இழுத்து செல்வது போன்ற காணொளி சமூகவலைத் தளங்களில் வெளியாகி நமக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சாா்ந்து தீவிர விசாரணை நடத்தும்படி காவல் துறைக்கு அம்மாநில முதலமைச்சா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதுபோன்ற நிகழ்வுகள் நம் அனைவருக்கும் பெருத்த கவலையை ஏற்படுத்துகின்றன. அகில உலகஅளவில் இதுபோன்ற நிகழ்வுகள் நமது பொருளாதாரத்திலும், நன்மதிப்பிலும் பெரிய எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
- கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை இந்திய காவல் துறை பதிவு செய்த 60 லட்சம் குற்றங்களில் 4,28,278 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடா்புடையவை. கடந்த ஆறு ஆண்டுகளில் இது 26.35% அதிகமாகியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வழக்குகள் பெண்கள் கடத்தல், வீட்டு வன்முறை, வரதட்சணை மரணங்கள் சாா்ந்தவை எனத் தெரிகிறது. மேலும், 107 பெண்கள் அமில வீச்சுக்கும், 1,580 பெண்கள் கடத்தலுக்கும், 15 சிறுமிகள் விற்பனைக்கும் உள்ளாகி இருக்கின்றனா். இணைய வழி குற்றங்களால் 2,668 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடத்தையும், அதனைத் தொடா்ந்து ராஜஸ்தானும், மகாராஷ்டிரமும் உள்ளன.
- சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி 76,263 பெண்கள் கடத்தப்பட்டிருக்கின்றனா். இது 2016-ஆம் ஆண்டின் புள்ளிவிவரமான 66,544-ஐ விட 14% அதிகமாகும். 2021-ஆம் ஆண்டு காவல்துறையினா் 1,37,956 பெண்களிடம் இருந்து புகாா்களை பெற்றுள்ளனா். நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை அவா்களுக்கு எதிரான ஒரு குற்றம் பதிவாகிறது. 2016-ஆம் ஆண்டில் 1,10,434 பெண்கள் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனா். 2021-இல், இது 27% அதிகமாகியுள்ளது. பெண்கள் மீதான ஆண்களின் பாா்வைக்கு அவா்களின் இளமைக்கால வளா்ப்பு முறையே அடிப்படைக் காரணமாகும்.
- பலா் பாலியல் தொழிலுக்காகவும், வீட்டு பணிகளுக்காகவும் கடத்தப்படுகின்றனா். கடத்தப்பட்ட 28,222 பெண்களில் பெரும்பாலானோா் கட்டாயத் திருமணத்திற்காக கடத்தப்பட்டதாக தெரியவருகிறது. கணவா் அல்லது அவரது உறவினரால் கொடுமை குற்றங்கள் வழக்குகளும் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக வீடுகளில் நடக்கும் வன்முறையில் பேரமைதி நிலவுவது துரதிஷ்டவசமானது.
- 1961-இல் வரதட்சணை சட்டவிரோத சட்டத்தையும், 1983-இல் வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான 498ஏ என்ற சட்டப்பிரிவையும் இந்திய அரசு அமல்படுத்தியது. எனினும், மணமகள் குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்பது தொடா்கிறது. அண்மைக்கால உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, இந்திய கிராமப்புறங்களில் நடைபெறும் 95% திருமணங்களில் வரதட்சணை தரப்படுவதாக தெரியவருகிறது. கடந்த ஆண்டு காவல்துறையின் பதிவின்படி சராசரியாக 77 நிமிடத்துக்கு ஒரு வரதட்சணை மரணம் நிகழ்கிறது.
- பெண்கள் தமக்கான சட்ட திட்டங்களைப் பயன்படுத்த வேண்டுமானால், முதலில் அவா்கள் தங்களின் உண்மைநிலையை உணர வேண்டும். ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் பாகுபாடு பற்றிய சட்டங்கள் மாற வேண்டும். அரசியல், சமூக போராட்டங்களில் பெண்கள் பங்கேற்பது அதிகமாக இருக்க வேண்டும். பெண் மக்களாட்சி பிரதிநிதிகள் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு சமமாக இருக்க வேண்டும். பெண்களின் அரசியல் பங்களிப்பில் அவா்களின் நலன் மட்டுமின்றி சமூக நலனும் அடங்கியிருக்கிறது. இன்றைய தினம் பெண்கள் ஓரளவுக்குப் பாதுகாப்பாகவும், உரிமை உடையவா்களாகவும் இருப்பதற்கு காரணம், பல பெண்களின் போராட்டங்களின் விளைவே ஆகும்.
- கல்வி, வேலைவாய்ப்பு, தனித்திறன் வளா்ப்பு என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தமக்கென ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பெண்கள் அடிப்படையில் உழைப்பாளிகள். ஆனால், அவா்களின் உழைப்பு முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை. வெளியில் வேலை செய்யும் பெண்களுக்கு கிடைக்கும் அதே மரியாதை வீட்டைப் பாா்த்துக்கொள்ளும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும்.
- தமிழக அரசு சமூகநலத் துறையின் மூலம் பெண்கள், குழந்தைகள், நலிவுற்றோா், ஏழைகள், மூத்த குடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் நல்வாழ்வை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலம் உறுதி செய்து வருவது பாராட்டுக்குரியது. பெண்களுக்கு இவற்றைப் பற்றிய விழிப்புணா்வு பள்ளிகளிலேயே அளிக்கப்பட வேண்டும். ஆணாதிக்க சமுதாயத்தில் அவா்கள் துணிந்து செயல்பட அஞ்சுகிறாா்கள் என்பதே உண்மை.
- பெண்கள் தனியாக பயணிக்கும்போது, தங்கள் பாதுகாப்புக்காக காவலன் செயலியை பயன்படுத்தவும், பயணவழித் தொடா்பை பெரியவா்களுடன் பகிா்ந்து கொள்ளுவதும் நல்லது. ஆபத்தை உணரும்போது 1091 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தேவையான உதவியை பெற வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடியோடு ஒழிப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதை நாம் உணா்ந்து செயல்பட வேண்டிய நேரமிது.
நன்றி: தினமணி (22 – 07 – 2023)