TNPSC Thervupettagam

பெண்களைச் சிறைப்படுத்தும் சாதி வலை

December 17 , 2023 337 days 239 0
  • அது ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி. காதல் திருமணம் குறித்த விவாதம். பல்லாயிரம் பேர் பார்க்கிறார்கள் என்கிற அச்சமின்றிப் பொதுவெளியில் பேசுகிறோம் என்கிற தயக்கமும் இன்றி, “என் மகன் என் விருப்பமின்றி வேறு சாதியில் திருமணம் செய்துகொண்டால் என் சொத்துகளை அவனுக்குத் தர மாட்டேன். ஆனால், என் மகள் அவ்வாறு செய்தால் அவளை வெட்டிக் கொல்வேன்” என ஒரு தந்தை கூறுகிறார். நடன நிகழ்வு ஒன்றில் ஆடும் பெண்களைத் தங்களின் சாதி ஆண்களையே மணம்புரிவோம் என உறுதிமொழி ஏற்க வைக்கின்றனர்.
  • சாதிப் பெருமைக்காகக் கொலைசெய்யும் அளவுக்குப் போவோர் உண்டு என்றாலும் இடைநிலை சாதிகளிடையே திருமணம் செய்துகொள்வதில் ஒரு நெகிழ்ச்சியும் சிறிது காலமாகக் காணப்படுகிறது. இந்த நெகிழ்ச்சியே சாதியைக் காக்க விரும்புவோருக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். காலம் காலமாகச் சாதியை மட்டுமின்றித் தங்களையே ஒடுக்குதலுக்கு உள்ளாக்கும் பண்பாட்டு அடையாளங்களையும் மரபுகளையும் பாதுகாப்பவர்களாகப் பெண்கள் இருப்பதால் சாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்ற பெண்களையே சமூகம் நிர்பந்திக்கிறது.

சாதியைக் காக்கும் அகமணமுறை

  • இந்தியப் பண்பாட்டுச் சூழலில் திருமணம் என்பது தனிமனித வாழ்வு சார்ந்தது அன்று. மாறாக அது அவரவரின் சாதி - சமூகம் சார்ந்த நிகழ்வு. சொத்தினைப் பாதுகாக்க, சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க என உறவுகளுக்குள்ளேயே திருமணங்கள் நிகழ்ந்தன. கல்வித்தகுதி, பொருளாதார மேட்டிமை, பெண்களின் அழகு, வசதி வாய்ப்புகள், முன்போல் அல்லாமல் பயணம் செய்யும் வசதி போன்ற காரணங்களால் உறவைக் கடந்து பெண் கொள்வதும் கொடுப்பதும் வந்துவிட்ட நிலையில் உறவைக் கடந்தாலும் பலரால் சாதியைக் கடக்க இயலவில்லை. விளைவு, சாதிக்கொரு திருமணத் தகவல் மையங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை இம்மையங்கள் சிறப்பாகவே பயன்படுத்திக் கொள்கின்றன. ஆங்கிலம் பயின்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிந்தாலும் சாதிக்குள்தான் திருமணம் என்கிற நிலையே தொடர்கிறது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் சாதி கடந்த திருமணங்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டிலேயே நடக்கின்றன. தங்களின் சாதிக்குள் கல்வி, வேலை, பொருளாதாரத் தகுதி உள்ள பெண் அல்லது மாப்பிள்ளை கிடைக்காத சூழ்நிலையில் பிற சாதியில் மணம்முடிக்கின்றனர். அப்போதுகூட ஏறக்குறைய தங்களின் சாதியைப் போன்றே சமூக மேன்மை உடைய சாதியைச் சேர்ந்தவரையே தேர்வு செய்கின்றனர். காதல் திருமணங்களிலும் இடைநிலை சாதிகளுக்குப் பெற்றோர் விருப்பமின்றி ஒப்புதல் அளிப்பதும் ஒடுக்கப்பட்ட சாதியினர் எனக் கருதப்படுவோரைத் திருமணம் செய்ய விரும்பினால் எதிர்ப்பது, புறக்கணிப்பது, வீட்டில் இருந்தும் தங்களின் சமூகத்தில் இருந்தும் அந்நியப்படுத்துவது, வன்முறைக்கு உள்படுத்துவது, குழுவாகச் சென்று தண்டிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் இயல்பாக நடக்கின்றன. இத்தகைய செயல்கள் மூலம் அவர்கள் தங்களின் சாதியைச் சார்ந்தோருக்கும் தங்களின் சாதியைக் கடந்து திருமணம் செய்ய விரும்புவோருக்கும் ’பாடம் புகட்ட’ விழைகின்றனர்.

ஏன் இவ்வளவு வன்மம்

  • காலமாற்றத்தில் பல்வேறு பண்பாட்டு அடையாளங்கள் பல்வேறு சமூகக் குழுக்;களால் கைவிடப்பட்டுள்ளன. சாதிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சாதியத்தின் சல்லிவேரைக்கூட இச்சமூகத்தில் இருந்து பிடுங்கியெறிய முடியவில்லை என்பதே யதார்த்தம். சாதி அடையாளத்தை, அது தரும் பெருமையை அது தரும் அதிகாரத்தை, அதனால் கிடைக்கும் அரசியல் செல்வாக்கைத் தக்கவைப்பதையும் அதை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தி உறுதி செய்வதையும் ஒவ்வொரு சாதியும் ஓர் இயக்கமாகவே செய்துவருகிறது. சாதிய அமைப்பு தொடர்ந்து நிலைத்திருக்க சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் அகமணமுறையைக் கட்டிக்காக்க வேண்டிய நெருக்கடி இச்சாதிகளுக்கு இன்று கூடியிருப்பதை அவற்றின் செயல்பாடுகள் காட்டுகின்றன. சமூகமாற்றத்தின் காரணமாகப் பெண்கள் கல்விபெறுவதும் வேலைக்குச் செல்வதும் அவர்களின் புழங்குவெளியை அதிகமாக்கியிருக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்வதால் கிடைக்கும் பொருளாதார மேம்பாட்டையும் சமூக உயர்நிலையையும் பெற்றோர்கள் விரும்பினாலும் பெண்களின் சுதந்திரத்தை அச்சத்தோடே கண்காணிக் கின்றனர். ஆங்காங்கே நடக்கும் காதல் திருமணங்கள் இவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அதுவும் பெண்கள் காதல் வயப்படுவதை ஒழுக்கமின்மையாக மட்டுமன்றி, பாலியல் அத்துமீறலாகவே சாதி சமூகம் பார்க்கிறது. சாதியைப் பாதுகாப்பதிலும் அதைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதிலும் இருந்து பெண்கள் விலகிச் செல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆண் குழந்தைகளையே விரும்பிப் பெற்றுக்கொண்டு பெண் குழந்தைகளைத் தவிர்த்த சமூகங்களில் திருமணத்திற்குப் பெண் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. தங்கள் சாதிப் பெண்களைப் பிறர் கவர்ந்து சென்றுவிடுவார்களோ என்கிற அச்சமும் தலைதூக்கியுள்ளது. தன் சாதிப் பெண்களை வசப்படுத்தும் ஆண்களுடன் மல்லுக்கட்டுவதைவிட நம் பெண்களைக் கட்டுப்படுத்துதலும் பயிற்றுவித்தலும் எளிது என்பதால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். மேலும், குடும்பப் பெருமைக்காகப் பல்வேறு உரிமைகளை விட்டுக்கொடுத்து தங்கள் மீதான ஒடுக்குதலை இயல்பானதாக ஏற்றுக்கொண்ட பெண்களை வசப்படுத்துவது எளிது.

சாதியைப் பாதுகாப்பதில் பெண்கள்

  • சாதி சமுதாய நியாயங்களின்படி குலமும் சாதியும் தழைக்கப் பிள்ளைகளைப் பெற்றுத்தருதலே பெண்களின் தலையாய கடமை. சாதியின் தூய்மைக்கு அவர்களே பொறுப்பு. பெண்களின் சாதி கடமைக்கும் ஒழுக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு கற்பிக்கப்பட்டுள்ளது. இக்கடமைகளைப் பெண்கள் ஆற்றாமல் போனால் அகமணமுறை மறைந்து, சாதித் தூய்மை கெட்டு கலப்பு நேர்ந்துவிடும். இதனால், சாதிசார் நெருக்கடிகள் பெண்களுக்குக் கூடுதலாக உள்ளன. சாதியின் அடையாளங்களை அன்றாட வாழ்வில் மிக நுட்பமாகக் கடைப்பிடிப்பது பெண்களின் மேல் சுமத்தப்பட்ட பொறுப்பாகவே உள்ளது. சாதிசார்ந்த சடங்குகள் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதோடு மட்டுமல்லாமல் அதை அடுத்த தலைமுறைக்குக் கடத்தி அவர்களும் அதைக் கடைபிடிக்கிறார்களா எனக் கறாராக கண்காணிப்பதும் பெண்கள் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாதிசார்ந்து சிறப்பாக இயங்கும் பெண்கள் தங்கள் வீட்டாரின் அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமின்றித் தங்களின் சாதி சார்ந்தவர்களின் அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுகின்றனர். இப்பாராட்டு சாதி இறுக்கத்தை அவர்கள் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கத் தூண்டுதலாக உள்ளது. வீட்டில் உள்ளவர்களைக் குழந்தைப் பருவம் முதலே சாதி அடையாளத்துடன் வளர்ப்பதும் பெண்களின் பொறுப்பு. யாருடன் பழகலாம், எந்தச் சாதியினரை எந்த எல்லைவரை அனுமதிக்கலாம், யாரை வீட்டிற்குக் கூட்டிவரலாம், யாருடன் உணவைப் பகிர்ந்துகொள்ளலாம், யாருடன் தோழமை பாராட்டலாம் என்பது போன்ற எழுதப்படாத விதிகளைக் கற்பிப்பதோடு தம் சாதிக்காரர்கள் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என்கிற ஒழுங்குகளைப் பழக்கும் பொறுப்பும் பெண்களுடையதே. தாம் கற்பிப்பதைத் தாங்கள் பின்பற்றவேண்டிய நெருக்கடிக்கும் பெண்கள் ஆளாகின்றனர். இதில் தவறு நேரும்போது “வீட்ல இருக்கிற பொம்பள பிள்ளைகள் யாரோடு பழகுகிறார்கள் எனப் பார்க்க மாட்டிங்களா?” என்கிற வசைச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். சாதியமும் ஆணாதிக்கமும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்தே பெண்களை இயக்குகின்றன.

சாதிகள் அற்ற சமூகம் படைக்க

  • சாதியை வளர்ப்பதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஊடகத்தின் நிகழ்வுகளைப் பொதுவெளியில் விவாதிப்பதும் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதும் அவசியம். அரசியல் கட்சியினரும் சாதி ஓட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிடப் போட்டியாளர்களைத் தேர்வுசெய்கின்றனர். எண்ணிக்கையே பலம் என்பதால் சாதியைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு சமூகமும் போட்டிபோடுகிறது. இதையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
  • சாதிய இறுக்கத்துக்கு முன்பு நம்மிடையே நிலவிய புறமணமுறைகளை வீடுகள் ஊக்குவிக்கவேண்டும். திருமணங்கள் தனிமனித உரிமையாக மதிக்கப்பட வேண்டும். சாதி குறித்த விவாதங்கள் அறிவுப்பூர்வமாகப் பொதுவெளியில் நடத்தப்பட வேண்டும். சாதியைப் பின்பற்ற தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம் என்பதை பெண்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories