TNPSC Thervupettagam

பெண்கள் பாதுகாப்பு: கனத்த கேள்விகள்

September 1 , 2024 5 hrs 0 min 9 0

பெண்கள் பாதுகாப்பு: கனத்த கேள்விகள்

  • பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல்கள் போன்றவற்றை வாழ்க்கையில் அனுபவித்தே இராத ஒருவர் இந்தக் கருத்துகளைக் கூறுகிறார் என்று சிலர் சாடவும் கூடும். அது உண்மைதான். என்னுடைய வாழ்க்கையில் பாலியல் சீண்டல் – வல்லுறவு போன்றவற்றுக்கு ஆட்பட்டதில்லை. இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தரும் தகவல்களையும் அவை தொடர்பான செய்திகளையும் படித்ததால் பெறப்பட்ட உணர்வுகளிலிருந்து இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
  • இப்படி ஒவ்வொரு கொடூர சம்பவம் நடக்கும்போதும் தாங்க முடியாத மனவேதனைகளால் துயரப்படுகிறேன். நான் மட்டுமல்ல - நாம் அனைவருமே கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி அறிந்ததும் பெரிதும் துயரமடைந்தோம், மன நிம்மதியை இழந்தோம், கையறுநிலைக்கும் சென்றோம்.
  • இந்தச் சம்பவம், இப்படிப்பட்ட சூழல்களில் எளிதில் இரையாகக் கூடியவர்களுடைய மனக் கவலையைப் பல மடங்கு பெரிதாக்கியிருக்கிறது. அதீத சோகமும் வலியும் மிக்க இந்தத் தருணத்தில், இப்படி நேராமல் தடுப்பதற்கான வழிகள் என்ன என்று தீர்மானித்துவிடவும் முடியாது. எனவே, இதுகுறித்து மிகுந்த கவனமுடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் தீர்வை யோசிக்க வேண்டும்.

மரண தண்டனை தீர்வா?

  • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில நாள்களுக்கு முன் அளித்த பேட்டியில், “பாலியல் வல்லுறவை மேற்கொள்ளும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்தைத் திருத்த அரசு தயார்” என்று அறிவித்தார்.
  • இந்த விவகாரத்தில் பாஜக, திரிணமூல் காங்கிரஸ் கட்சி இடையிலான அரசியல் போராட்டத்தை ஒருபக்கம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், எந்த அரசியல் கட்சியும் இப்படியொரு திருத்தம் கொண்டுவருவதை நிச்சயம் எதிர்க்காது. ‘இப்படி தண்டனை விதிப்பதால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது’ என்று எவராவது சொன்னால், அவர்களை, ‘பாலியல் வல்லுறவை ஆதரிப்பவர்கள்’ என்று உடனே முத்திரை குத்திவிடுவார்கள்.
  • பெரும்பாதகச் செயலைச் செய்தவனுக்குக் கடுமையான எதிர் தண்டனை வழங்கும் பழிவாங்கும் உணர்வு கலந்த தீர்வை யாரும் குறைத்துப் பேசமாட்டார்கள். இந்தச் சம்பவத்தால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கோபம் மேலும் வேகம் கொண்டு வளர்வதற்கே சாத்தியங்கள் அதிகம். குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறையைவிட மரண தண்டனை விதிப்பது பிரச்சினைக்குத் தீர்வாகிவிடுமா?

நிர்பயாவுக்குப் பிறகு நிலைமை என்ன?

  • டெல்லியில் ‘நிர்பயா’ (கற்பனைப் பெயர்) என்ற இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவு கொண்ட சம்பவம் இதேபோல நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிறகு, அப்படிப்பட்ட குற்றங்களுக்கு தண்டனைகளைக் கடுமையாக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் பிறகும் மகளிருக்கு எதிரான அனைத்து வகை குற்றங்களும் அதிகரித்தே வருகின்றன.
  • தேசிய குற்றப் பதிவேட்டின்படி 2021இல் நாடு முழுவதும் 31,677 பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் நிகழ்ந்தன; ஒரு நாளைக்கு சராசரியாக 87 குற்றங்கள். ஒவ்வொரு மணி நேரமும் நாடு முழுவதும் மகளிருக்கு எதிரான குற்றங்களாகப் பதியப்படுவனவற்றின் எண்ணிக்கை 49. இதில் புகார் செய்யப்படாமலும் - புகார் செய்தும் பதிவுபெறாமலும் போகும் குற்றங்களின் எண்ணிக்கை தனி.
  • சட்டங்களைக் கடுமையாக்கியும், பாதிக்கப்படும் நிலையில் அல்லது இரையாகும் நிலையில் சிக்கிவிட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்தக் குற்றங்களைச் செய்தவர்களைத் தூக்கில் போடுவது என்பது, சிக்கும் குற்றவாளியை பதிலுக்கு பழிவாங்கும் செயலின் மிகுதியாகவே இருக்குமே தவிர, இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவோ, தடுக்கவோ உதவாது.
  • இப்படியொரு சம்பவம் இனி நிகழக் கூடாது என்ற அக்கறையுடனும் நேர்மையுடனும் நாம் தீர்வை சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதிலுமே, மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எதுவும் குற்றவாளிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே தெரியவில்லை.

காவல் – நீதித் துறை

  • பாலியல் சீண்டல்கள், பெண்களுக்கு தொல்லைகள் என்று வரும் புகார்களை காவல் துறையினர் அதற்குரிய அக்கறையோடு பதிவுசெய்து விசாரணைகளைத் தொடராமல் விட்டுவிடுவதும், இவை தொடர்பான வழக்குகளை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிப்பதில் நீதித் துறை காட்டும் மெத்தனமும், அணுகுமுறையும்கூட இந்தக் குற்றங்கள் அதிகரிக்கக் காரணங்கள். அரசின் இரண்டு கரங்களுமான காவல் துறையும் நீதித் துறையும் இப்படிச் செயல்படுவதற்குக் காரணம், இவை இரண்டுமே இந்தச் சமூகத்தின் உறுப்புகள் என்பதால்தான்.
  • அதிகாரத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் போன்றோர் பெண்களை இழிவுபடுத்தியும் கேலிசெய்தும் பேசும் எத்தனைப் பேச்சுகளை நாம் காணொலிகளாக அன்றாடம் பார்க்கிறோம்? இப்படிப்பட்டவர்கள்தான் கொல்கத்தா சம்பவத்தையும் ‘கடுமையாகக் கண்டித்து’ அறிக்கை விடுகின்றனர்.
  • பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு மரண தண்டனை தரலாமா என்றால், கிட்டத்தட்ட எல்லோரும் ‘ஆம்’ என்றே ஒப்புதல் தருவார்கள், திருமணமான பிறகு மனைவியின் விருப்பமின்றி கணவன் அவளை வலுக்கட்டாயமாக உடலுறவுக்குச் சம்மதிக்க வைப்பதற்கும் இதேபோல தண்டனை தரலாமா என்று கேட்டால், பெரும்பாலும் மவுனமாகிவிடுவார்கள்.
  • மரண தண்டனை தருமாறு கேட்பது அனைவருக்கும் எளிது, காரணம் அதற்குப் பிறகு இப்போதிருப்பதைப் போலவே தொடர்ந்து பெண்களை அலட்சியமாகவே நடத்திக்கொண்டிருக்கலாம்.

வல்லுறவு மறைய…

  • பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்யும் போக்கு சமுதாயத்தில் குறைய வேண்டும் என்றால் அதற்கான முதல் மாற்றம் வீடுகளிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். இப்போதும்கூட வீடுகளில் ஆண் – பெண் என்று இருபால் குழந்தைகள் இருந்தால், பெண்ணைவிட ஆண் குழந்தைக்கே அதிக முக்கியத்துவமும் கவனிப்பும் அளிக்கப்படுகிறது. உடை, உணவு, செலவுக்குப் பணம், கேளிக்கை – விளையாட்டுகளுக்கு அனுமதி, பிடித்த பாடத்தில் – கல்வி நிலையத்தில் சேர அனுமதி என்று சலுகைகள் அதிகமாகவே காட்டப்படுகின்றன.
  • பெண் குழந்தை தனக்குத் தேவையானவற்றை பலமுறை கெஞ்சியோ, அழுது அடம்பிடித்தோதான் பெற வேண்டியிருக்கிறது. இன்னும் சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்குப் பொறுப்புகளை அதிகம் கொடுத்து, ‘எங்கள் பெண்ணையே பையன்போலத்தான் வளர்க்கிறோம்’ என்று போலிப் பெருமையுடன் சொல்லச் செய்கிறது. ஆணாதிக்கம்தான், வீட்டில் ஒருவர் மற்றவரிடம் அன்பு காட்டுவதைக்கூட தீர்மானிக்கிறது. எனவே, நம் வீட்டில் அன்பு செலுத்துவதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. இதே சூழல்தான் பள்ளிக்கூடங்களிலும் தொடர்கிறது.
  • ஒரு சமூகத் தொடர்பு ஏற்படும் பள்ளிக்கூடத்திலும் இதேபோல ஆண் – பெண் சமத்துவமின்மை தொடரும்போது பெண் குழந்தையும் தனக்கான இடம் இதுதான், உரிமைகள் இதுதான், அவமதிப்புகள் இவைதான், பாதுகாப்பின்மை இதுதான் என்று மனதளவில் தன்னை தயார்படுத்திக்கொண்டுவிடுகிறது. வேலை செய்யும் அலுவலகம் என்பதும் இதே சூழலின் அடுத்த கட்ட விரிவாக்கமாகவே தொடர்கிறது.
  • ஒரு பெண் குண்டா – ஒல்லியா, கறுப்பா – சிவப்பா, அழகா – அவலட்சணமா என்பதை வைத்து உருவ கேலிகளும் தொடர்கின்றன. திரைப்படங்களிலும் அழகு சாதனங்களுக்கான விளம்பரங்களிலும்கூட பெண்களை உருவத்தைப் பொருத்தும் உடல் நிறம், எடை போன்றவை தொடர்பாகவும் சிறுமைப்படுத்தி தங்களுடைய பொருள்களைச் சந்தைப்படுத்தும் முயற்சிகளே தொடர்கின்றன.

மத வழிபாடு, சடங்குகளிலும்…

  • பெண்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் நிலை மத வழிபாடுகளிலும், வீடுகள் – பொது இடங்களில் கடைபிடிக்கும் சடங்குகளிலும் இதற்கு இணையாகவே தொடர்கிறது. ஆண்கள் எப்படியாக இருந்தாலும் கவலையில்லை, பெண்கள் மத – வீட்டுச் சடங்குகளின்போது வீட்டுக்கு விலக்கு (மாத விலக்கு) போன்ற ‘அசுத்தமான நிலையில்’ இருந்துவிடக் கூடாது என்பது கட்டாயமாக்கப்படுகிறது. பெண்களை இழிவுபடுத்துவதில் எல்லா மதங்களும் சமமாகவே செயல்படுகின்றன.
  • பெண் தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், வீட்டுப் பெண்களின் நிலைமையில் மாற்றம் இல்லை. ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டியவள்தான் பெண் என்று ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து நினைவூட்டப்படுகிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களுமே இந்தப் பழக்கங்களைப் பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் நியாயப்படுத்தி தொடர்கிறார்கள். பெண் வர்க்கத்தில் காலங்காலமாக இப்படித்தான் வழக்கம் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆன்மிகத் துறவிகளாக வாழ்ந்த பெண் மக்கள் என்ன சொன்னார்கள் என்பதைக்கூட போலியாகத் திரித்துவிடுகிறார்கள்.
  • ஆன்மிகத்தில் ஈடுபட்ட பெண்களும்கூட இன்றைய பெண்கள் படும் அனைத்து வேதனைகளையும் அனுபவித்தவர்கள்தான் என்பதை அவர்களுடைய போதனைகளிலிருந்து அறியலாம். இதில் எதையாவது ஆராயப் புகுந்தால் உடனே ‘மத எதிரி - குலத்துக்கே கோடாலி’ என்று முத்திரை குத்தி, மேற்கொண்டு விவாதிக்க விடாமல் தடுத்துவிடுகிறார்கள்.
  • இப்படிப் பேச முற்பட்டாலே, இந்தக் கருத்துகள் எல்லாம் மேலை நாட்டிலிருந்து வந்தவை அல்லது நகர்ப்புற மக்களுடைய நாகரிக மோகத்தால் விளைந்தவை அல்லது மேட்டுக்குடிகளுக்கே உரிய போலியான அக்கறை என்று திசைத் திருப்பி ஒதுக்குகிறார்கள். உடல் சுத்தம், மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டிருத்தல், பலரை அண்டவிடாமல் ஒதுக்கிவைத்தல் ஆகியவைதான் ஆழ்ந்த மத நம்பிக்கையின் அடையாளம் - அவற்றைக் கைவிடுவதோ, கைவிடுமாறு சொல்வதோ மதத்தின் மீதே நம்பிக்கையற்ற செயல்கள் என்று கண்டிக்கிறார்கள். அதனால்தான் நாம் இன்னமும் பழைய வழக்கங்களை விடாமல் தொடர்கிறோம்.
  • பால்புதுமையரின் பிரச்சினைகள் அனேகம், அவர்களுக்கு இழைக்கப்படும் துயரங்கள் கொடூரமானவை. இதில் சாதி பின்புலத்தையும் சேர்த்துக்கொண்டுவிட்டால் வெவ்வேறு பாலியல் விழைவுகொண்டவர்களுக்குக் கிடைக்கும் வசவுகள், சூட்டப்படும் பட்டங்கள், மனிதனாகவே கருதப்படாத இழிவுகள் என்று துயரங்களின் பட்டியல் மேலும் நீளும்.

சமூகத்தில் புரட்சி தேவை

  • இவ்வளவு சிக்கல்களும் பிரச்சினைகளும் நிறைந்த சமூகத்தில் பெண்களின் நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், நம்முடைய சமூகத்தின் கண்ணோட்டத்திலும் பழக்க வழக்கங்களிலும் புரட்சிகரமான மாற்றம் அவசியம். ஒவ்வொரு மனிதனின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் குலைக்கும் பழக்கங்கள் நமக்கு இருந்தால், அவை பழையனவா – புதியனவா என்று பாராமல் சமூகத்துக்குக் கேடான அவற்றைக் கைவிட்டுவிட வேண்டும். இதைச் செய்வதற்கு அசாத்தியமான துணிவு வேண்டும், பலருக்கு அது கடினமாகவே இருக்கும்.
  • இந்த இடத்தில்தான் நாம் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள், நீதித் துறையினர், காவல் துறையினர் பங்கேற்க வேண்டும். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் இதே சமூகத்திலிருந்துதான் வந்தவர்கள் என்பதால் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைப்பது அவர்களுக்கும் இயாலததாகத்தான் இருக்கும். எனவே, நாம் இந்த மாற்றத்துக்கு உதவக்கூடிய மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும், வழக்கறிஞர்களுக்குப் புதிய சமுதாயப் பயிற்சி அளிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்குப் புதிய கண்ணோட்டத்தைக் கற்றுத்தர வேண்டும். நமக்கு சங்கடத்தைத் தரும் வரலாற்றை அழிக்க நினைக்காமல், அதிலிருந்தே நாம் பாடம் கற்று தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற வேண்டும்.
  • நம்முடைய பிற்போக்கான மனநிலையை சட்டங்களோ, சமூக ஆதரவு அமைப்புகளோ மாற்றிவிடாது, காரணம் அவைதான் நம்முடன் கூடவே இருந்து இந்த நிலை தொடர உதவிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சமூக மாற்றம் உருவாக அனைத்துத் துறைகளிலும் உள்ள ஆண்கள்தான் முன்வர வேண்டும். தங்களுடைய உணர்ச்சிகரமான – உளவியல்ரீதியிலான வன்செயல்களையும் எண்ணங்களையும் அவர்கள்தான் கைவிட வேண்டும், அது எங்கே நடந்தது, யார் முதலில் செய்தார்கள் என்றெல்லாம் பார்க்கக் கூடாது.
  • பெண்களுக்குக் கொடுமை செய்யும் ஒவ்வொரு குற்றவாளியையும் சமூகமாகிய நாம்தான் உருவாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு ஏற்பட்டால், இந்த மாற்றங்களை நாம் நிச்சயம் மேற்கொள்வோம்.

நன்றி: அருஞ்சொல் (01 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories