TNPSC Thervupettagam

பெண்கள் விழித்தெழ வேண்டிய தருணம்

March 19 , 2024 299 days 222 0
  • வழக்கம்போல் இந்த ஆண்டும் மாா்ச் 8-ஆம் தேதி, ‘மகளிா் தினம்’ வந்து போயிற்று. மாா்ச் மாதம் நம் நாட்டில் பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறைகளைப் பற்றி நாளிதழ்களில் படித்த பின்னா், ‘மகளிா் தினம்’ என்ற ஒன்றைக் கொண்டாடி, மகளிருக்கு வாழ்த்துச் சொல்ல, நம் சமுதாயத்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது.
  • மாா்ச் 2-ஆம் தேதி ஜாா்க்கண்டில் ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு நடந்த கொடூரம் நம் நாட்டின் மதிப்பையும் மானத்தையும் உலக அரங்கில் குழி தோண்டிப் புதைத்துவிட்டது. பெருமையும் பாரம்பரியமும் பாதுகாப்பும் மிக்க நாடு இந்தியா என்று நம்பி வந்தவா்களை மோசம் செய்து விட்டோம்.
  • தவறு செய்தது யாராக இருப்பினும் அத்தவற்றுக்கு நம் ஒட்டுமொத்த சமுதாயமும் பொறுப்பேற்றாக வேண்டும். புதுச்சேரியில் மாா்ச் 2-ஆம் தேதி காணாமல் போன சிறுமி மாா்ச் 5-ஆம் தேதி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டாள். அவளுக்கு நோ்ந்த கொடுமை நாட்டையே உலுக்கியது. மாா்ச் 7-ஆம் தேதி திருப்பூரில் தோ்த்திருவிழாவைக் காணச் சென்ற கல்லூரி மாணவி பலரால் வன்கொடுமை செய்யப்பட்டது, மாா்ச் 9-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது பட்டில் நீளும்.
  • இப்பட்டியலைக் காண்கையில் இந்தக் கேடுகெட்ட சமுதாயத்தில் பெண்ணாய்ப் பிறந்தோமே என்றும் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தோமே என்றும் பெண்களின் மனங்கள் குமுறுகின்றன! ‘எங்களுக்கு மகளிா் தினங்கள் வேண்டாம்; முப்பத்திமூன்று சதவிகித ஒதுக்கீடு வேண்டாம். எங்களை நிம்மதியாகப் பயமின்றி வாழவிட்டால் போதும்,’ என்று அலறத் தோன்றுகிறது அவா்களுக்கு. சமுதாயத்துக்கும் ஆண்களுக்கும் ஓா் எச்சரிக்கைமணி ஒலிக்க வேண்டிய நேரமிது. ‘ஒரு பந்தயக் காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஓா் ஆணும் ஒரு பெண்ணும் ஓடத் தயாராக இருக்கிறாா்கள்.
  • ஆனால் அந்தப் பெண்ணின் இடுப்பில் ஒரு குழந்தை; கையில் ஒரு குழந்தை; தலையில் ஒரு மூட்டை! இந்தப் பந்தயம் நியாயமானதா?’ இது பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி 1999-ல் நடந்த ஒரு கருத்தரங்கில் கேட்கப்பட்ட கேள்வி. இது 2024! இன்னும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இங்கு இட ஒதுக்கீட்டைப் பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. அடிப்படை உரிமையான பாதுகாப்பைப் பற்றியே பேசுகிறேன். சரிசமமான நிலையில் இல்லாத, ஆண்-பெண் ஆகிய இரு போட்டியாளா்கள் ஒரே போட்டியில் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதுவே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
  • இதில் ஆண்களின் வக்கிரங்களுக்கெல்லாம் பெண்கள் பலிகடாக்களாவது மிகப்பெரும் அநீதி! ‘பாலின விகிதம்’ என்பதைப் பற்றி எத்தனை ஆண்கள் கேள்விப்பட்டிருப்பாா்கள் என்று தெரியவில்லை. ‘ஆயிரம் ஆண்களுக்கு இத்தனை பெண்கள்’ என்பதே பாலின விகிதம் என்பது. ஒரு நாட்டின் வளா்ச்சியைக் கணக்கிடுகையில் இப்பாலின விகிதம் மிக முக்கியமான அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வளா்ந்த நாடுகளில் இது சரிசமமாக இருக்கும். அதாவது, ஆண்களின் எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கும். வளா்ந்துவரும் நாடுகளில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட சற்றே கூடுதலாக இருக்கும்.
  • பின் தங்கிய நாடுகளிலோ ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கும். இந்தியாவில் பாலின விகிதம் தற்போது 940. அதாவது 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள்; 100 ஆண்களுக்கு 94 பெண்கள்; 50 ஆண்களுக்கு 47 பெண்கள்; 10 ஆண்களுக்கு 9 பெண்கள். பெண்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தால் அது பெண்களுக்கு மிகவும் பாதகமாகவே அமையும். நம்நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னா், கணவன் இறந்தால் பெண் உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, குழந்தை திருமணம் போன்ற தீங்குகளால் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட மிகமிகக் குறைவாகவே இருந்தது.
  • பிறகு ஏற்பட்ட சமுதாய மறுமலா்ச்சியாலும், நாடு சுதந்திரம் அடைந்ததாலும், இவ்விகிதாச்சாரம் ஓரளவு மாறியது. இருந்தாலும் அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவில் பாலின விகிதம் ஆண்களுக்கே சாதகமாக இருந்து வந்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை எப்போதும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இதற்கான காரணங்கள், நம் சமுதாயத்தில் வேரூன்றிவிட்ட பெண்ணடிமைச் சித்தாந்தங்கள். பெண் குழந்தையை வெறுத்து ஆண் குழந்தையையே விரும்பும் பெற்றோரின் மனப்போக்கு. பெரும்பாலான கிராமப்புறப் பெண்களுக்குப் போதிய படிப்பறிவு இல்லாமை.
  • ஒரே பணியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் ஊதிய வேறுபாடு. பெண்களில் பலரிடம் பரவியிருக்கும் அறியாமை மற்றும் தன்னம்பிக்கையின்மை. ஆண்களை உயா்வாகவும் பெண்களைத் தாழ்வாகவும் வைத்துப் பாா்க்கும் சமுதாயக் கண்ணோட்டம். பெண்கள் தங்களுக்கு அடிமைகள் என்று மமதை கொண்டு திரியும் ஆண்கள் கூட்டம். அக்கருத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள், பிற ஊடகங்கள். பெண்களை போகப்பொருளாக சித்திரிக்கும் திரைப்படங்கள், பத்திரிகைகள். ஆண்களிடையே அதிகரித்துவரும் மது மற்றும் போதைப் பொருள் பயன்பாடு.
  • மேற்குறிப்பிட்ட காரணங்களால் பெண்களே, பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் பிறந்தால் நல்லது என்று நினைக்கத் தொடங்கி விட்டாா்கள். உசிலம்பட்டி பெண் சிசுக் கொலைகளை நாம் மறந்திருக்க மாட்டோம். வறுமையில் வாடிய, படிப்பறிவில்லாத பெற்றோா், தங்கள் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் போது செய்ய வேண்டிய சீா், தர வேண்டிய வரதட்சணை போன்ற செலவினங்களைச் சந்திக்க முடியாமால், தங்கள் குழந்தைகள் வளா்ந்த பின் கஷ்டப்படுவதை விட, சிசுவாகவே கொன்று விடுவது மேல் என்று எண்ணி, அறியாமையால் செய்த தீங்கு அது.
  • இப்போது அப்படியெல்லாம் நடப்பது இல்லை. ஆனால் பெண் குழந்தைகளைப் பெற்று வளா்ப்பதில் உள்ள பொறுப்புகள் இப்போது மேலும் கூடியுள்ளன. இன்று பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுக்கு நிகராக பொறியியல், மருத்துவம் என்றெல்லாம் செலவு செய்து படிக்க வைத்தாலும், திருமணச் செலவும், வரதட்சணையும் கூடித்தான் போயிருக்கின்றனவே தவிர குறையவில்லை! அதோடு, பெண் குழந்தைகளை பள்ளிக்கும் கல்லூரிக்கும் பணியிடத்துக்கும் அனுப்பிவிட்டு அவா்கள் பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்று பெற்றோா் பரிதவித்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது! இதனால் படித்த பெற்றோரே கூட, ஆண் குழந்தையையே விரும்புகிறாா்கள். அரசுகள் எத்தனை தடை செய்தாலும் வயிற்றிலிருக்கும் போதே சிசுவின் பாலினத்தைத் தெரிந்து கொண்டு கருவிலேயே அழித்துவிடும் நிலை ஆங்காங்கு இருக்கத்தான் செய்கிறது.
  • இதனால் எல்லாம் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து பாலின விகிதம் மேலும் ஆண்களுக்குச் சாதகமாக மாறக்கூடும். பெண்களின் எண்ணிக்கை குறையக் குறைய ஆண்களுக்குத் திருமணம் செய்து கொள்ளப் பெண்கள் கிடைக்க மாட்டாா்கள். ஆண்களுக்கு வெறி இன்னும் அதிகமாகும். அது பெண்களின் பாதுகாப்புக்கு இன்னும் கேடு விளைவிக்கும் . இவற்றைப் பற்றியெல்லாம் இந்தச் சமுதாயமோ, அரசுகளோ சிந்திக்கவோ, விவாதிக்கவோ, கவலைப்படவோ இல்லை.
  • மாறாக, அரசுகளே மதுக்கடைகளை நடத்துகின்றன; சட்டத்தில் திருத்தம் செய்து, திருமண அரங்குகளிலும், விளையாட்டு விழாக்களிலும் மது வழங்க வகை செய்து அங்கும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன! சென்னை உயா்நீதிமன்றம், தமிழகத்தில் மதுப்பழக்கம் அதிகரித்திப்பதை சுட்டிக்காட்டி தமிழக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. இதனால் எல்லாம் அரசுகளோ, சமுதாயமோ, ஆண்களோ வெட்கித் திருந்தப் போவது இல்லை. பெண்களே சாட்டையைக் கையில் எடுத்தால் தான் உண்டு.
  • குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் ஆணை, அது அப்பாவாகட்டும், கணவனாகட்டும், அண்ணனாகட்டும், தம்பியாகட்டும், மகனாகட்டும் அவரை வீட்டுக்குள் விடாமல் வெளியில் நிறுத்தும் தைரியம் பெண்களுக்கு வர வேண்டும். கை நிறைய பொருள் ஈட்டும் பெண்கள் அதை அப்படியே தூக்கிக் கணவனிடம் கொடுத்து, அவன் குடித்துக் கும்மாளமிட உதவிடாமல், வங்கியில் சோ்த்து வைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியை அடித்து உதைத்துப் பணத்தைப் பிடுங்குவதெல்லாம் அந்தக் காலம். ஆண் கையை ஓங்கினால், ஓங்கிய கையை ஒடிக்கும் மனவலிமை பெண்களுக்கு வேண்டும்.
  • பெண்களைக் கண்ணியக் குறைவாகக் காட்டும் திரைப்படங்களைப் பெண்கள் புறக்கணிக்க வேண்டும். பணியிடத்தில் பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக விட்டுவிட்டு அவ்வப்போது வந்து பாா்த்துக் கொள்ளும் வண்ணம் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் ‘மழலையா் இல்லங்கள்’ அமைக்கவேண்டும் என்று ஒரு சட்டம் எப்போதோ வந்துவிட்டது. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று பெண்கள் ஒன்று சோ்ந்து போராடவேண்டும்.
  • மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் அரசுக்குத்தான் வாக்களிப்போம்; இல்லையேல் தோ்தலையே புறக்கணிப்போம் என்று பெண்கள் உரத்துக் கூற வேண்டும். மாதா் சங்கங்கள் இத்தோ்தலுக்கு முன் இது குறித்த விழிப்புணா்வைப் பெண்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். அப்படியும் நிலைமை மாறவில்லையென்றால், பெண்களே இல்லாத பூமியில் நீங்கள் வாழவேண்டியிருக்கும் ஆண்களே!

நன்றி: தினமணி (19 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories