TNPSC Thervupettagam

பெண்ணுரிமைச் சட்டங்கள் யாருக்குச் சாதகமானவை

September 10 , 2023 435 days 318 0
  • ஒரு பெண்ணை அவமானப்படுத்துவது, அந்தப் பெண்ணிடம் மூர்க்கமாக நடந்து கொள்வது, அந்தப் பெண் எதிர்பார்க்கும் வகையில் அவரிடம் பண்பாக நடந்து கொள்ளாதது போன்றவை பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் செயல்கள் அல்ல என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன்னை ‘அழுக்கானவள்’ என்று பொருள்படுகிற சொல்லால் திட்டியதற்காகத் தன் கணவன் மீது ஒரு பெண் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கின் மீதான தீர்ப்பில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா.
  • நீதித்துறையில் பல்லாண்டுகளாக நிலவி வரும் பாலின ரீதியிலான அடையாளப் படுத்துதல்களைக் களையும் விதமாக 30 பக்கங்கள் கொண்ட கையேட்டைக் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. பழமைவாதங்களின் அடிப்படையில் பெண்கள் மீது திணிக்கப்படும் பாலின ரீதியிலான சொற்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு மாற்றுச்சொற்களைப் பரிந்துரைப்பது, பெண்கள் மீது சுமத்தப்படும் பாலின ரீதியிலான பிற்போக்குத்தனங்களைக் கண்டறிந்து அவை குறித்து விவாதிப்பது, பாலின ரீதியிலான அடையாளப்படுத்துதலைக் கடந்த முன்னோடித் தீர்ப்புகளை முன்வைத்து, குறிப்பிட்ட வழக்குகளில் நீதிபதிகள் அவற்றைப் பின்பற்றும் வகையில் செய்வது போன்றவையே அந்தக் கையேட்டின் அடிப்படை நோக்கங்கள். ‘பெண்கள் என்றால் இப்படித்தான்’ என்று காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பிற்போக்குத் தனமான கருத்தாக்கங்களையும் சொல்லாடல்களையும் நீதிபதிகளும் நீதித் துறையில் செயல்படுவோரும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றம் ஒரு கையேட்டை வெளியிட்டிருக்கும் நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்தச் சர்ச்சைக்குரிய கருத்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

குற்றமும் பாலினமும்

  • கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்கள் ஐவர் மீதான வழக்கு ஒன்றில் “பெண்கள் இப்படிச் செய்திருக்கமாட்டார்கள் என நம்புவது தவறு. சட்டத்துக்குப் பாலின பேதம் இல்லை, ஒரு குற்றத்தைக் குற்றமாக மட்டுமே பார்க்க வேண்டும்” என்று ‘பாலினம் கடந்து’ தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்வர்ண காந்தா தான், “பெண்கள் தொடர்பாகச் சட்டத்தில் இருக்கும் சில பிரிவுகளைப் பெண்ணுக்குச் சாதகமானவை எனத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பாலின அடிப்படையிலான குற்றங்களில் தீர்ப்பு வழங்கும்போது நடுநிலைத் தன்மையோடும் பக்கச்சார்புகள் இன்றியும் செயல்பட வேண்டும்” எனச் சொல்லியிருக்கிறார்.
  • கணவன், மனைவி இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறவர்கள். கணவன் தன்னிடம் கேட்ட ஆயிரம் ரூபாயைத் தான் தர மறுத்ததற்காகத் தன்னைக் கண்ணியக் குறைவான சொற்களால் திட்டிவிட்டார் என அந்தப் பெண் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி, “ஒருவர் அவருடைய மனைவியை ‘அழுக்கானவள்’ என்று சொல்வது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 509இன்படி சொல், சைகை, செயல் ஆகியவை மூலம் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குலைப்பதாக ஆகாது” என்று சொல்லியிருக்கிறார். இந்தப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர முடியாது என்று அந்த வழக்கையும் அவர் தள்ளுபடி செய்தார்.
  • “தனிப்பட்ட வகையில் பார்த்தால் ‘அழுக்கானவள்’ என்பது தவறான சொல் அல்ல. அதற்கு முன்னாலும் பின்னாலும் ஏதாவது சேர்த்துச் சொல்லியிருந்தால் அது குற்றமாகியிருக்கக் கூடும். ஆனால், அப்படி எதுவும் சொல்லப்பட்டதாகவும் தெரியவில்லை. இந்தச் சொல் தன் மனைவியின் கண்ணியத்தைக் குலைக்கும் சொல் என்பதை அறியாமல் அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம்” என்று நீதிபதி தெரிவித்துள்ளார். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தான் குறிப்பிட்ட சில சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று சொன்ன நீதிபதிதான், தன் கருத்துக்கு முரணாக இந்தத் தீர்ப்பையும் வழங்கியுள்ளார்.

முன்னோடித் தீர்ப்பு

  • ஒரு பெண்ணை நோக்கிச் சொல்லப்படும் சொல்லுக்கு, சொல்லும் நபரையும் சூழலையும் சார்ந்து ஆழமும் அர்த்தமும் கூடும். 2019இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதை உறுதிப்படுத்துகிறது. தன்னைப் ‘பாலியல் தொழிலாளி’ என்று சொன்ன கணவனைக் கொன்ற பெண்ணின் ஆயுள் தண்டனையைப் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் போது சொன்ன கருத்துகள் முக்கியமானவை. “நம் இந்தியச் சமூகத்தில் கணவன் தன்னைப் பாலியல் தொழிலாளி என்று தினமும் வசைபாடுவதை எந்தப் பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டார்” என்று தெரிவித்திருந்தது. தன்னை மட்டுமல்லாமல் தன் மகளையும் அந்தச் சொல்லால் கணவன் விளித்த போது அந்த நேரத்துக் கோபத்தால் தான் அவர் தன் கணவனைக் கொன்றிருக்க வேண்டும் என்று சொன்ன உச்ச நீதிமன்றம், உணர்வுக் கொந்தளிப்பில் நிகழ்த்தப்பட்ட அந்தக் கொலையை ‘உள்நோக்கமற்ற கொலை’ என்று சொல்லித் தண்டனையைக் குறைத்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஒற்றைச் சொல் ஏற்படுத்திய கொந்தளிப்பால் விளைந்த கொலையை நியாயப்படுத்தவில்லை. ஒரு சொல் ஒரு பெண்ணின் மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை உணர்ந்து அதன் அடிப்படையில் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பாகத் தான் இதை நாம் கருத வேண்டும்.
  • ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்போ, ‘வீடு என்றால் நாலும் இருக்கத்தான் செய்யும், கணவன் என்றால் நாலு வார்த்தை பேசத்தான் செய்வார், அதை எல்லாம் குற்றமாகப் பார்க்கலாமா?’ என்கிற பழமைவாத பெண்ணடிமைக் கருத்தைத்தான் மறைமுகமாகச் சொல்கிறது. குடும்பங்களுக்குள் நடைபெறும் வன்முறையைப் புகாராகப் பதிவு செய்வோர் இந்தியச் சமூகத்தில் மிகச் சொற்பமே. இப்படியொரு சூழலில் நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்கிற ஒன்றிரண்டு குரல்களுக்கும் செவிசாய்க்காமல் இருப்பதும் புறந்தள்ளுவதும் சட்டங்கள் யாருக்குச் சாதகமானவை என்கிற கேள்வியைத்தான் எழுப்புகின்றன. உரிமைகள் மறுக்கப்படுகிறபோது அவற்றை நிலைநாட்ட வேண்டியவை நீதி அமைப்புகள்தாம். அந்த பொறுப்பிலிருந்து அந்த அமைப்புகள் வழுவாதவரை மட்டுமே பாதிக்கப்படுவோருக்கு நியாயம் கிடைக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories