TNPSC Thervupettagam

பெரியாறு அணையும் இரண்டு கேரள ஆளுமைகளும்

June 6 , 2024 219 days 198 0
  • பெரியாறு அணை மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. அணை பலவீனமாக இருப்பதாகச் சொல்லிவருகிறது கேரள அரசு. அணையின் நீர்மட்டம் இடைக்காலத்தில் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் உயர்த்துவதை எதிர்த்து வந்த கேரளம், பழைய அணையைத் தகர்க்க வேண்டும்; புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக வாதாடிவருகிறது. அதற்கான முதல் கட்டமாக, புதிய அணையினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து ஓர் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அது குறித்து விவாதிக்க, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மே 28ஆம் தேதியைக் குறித்திருந்தது. தமிழ்நாடு அரசு இதைக் கடுமையாக எதிர்த்தது. குறிப்பிட்ட நாளில் காரணம் எதுவும் சொல்லாமல் கூட்டத்தை ரத்து செய்துவிட்டது அமைச்சகம்.
  • இப்போது அந்த நாள்பட்ட கேள்வியை மீண்டும் எழுப்பிக்கொள்வோம். பெரியாறு அணையின் கட்டுறுதி எப்படி இருக்கிறது? இதற்கான பதிலை இரண்டு ஆளுமைகளின் வழியாகச் சொல்லலாம். ஒருவர் டாக்டர் கே.சி.தாமஸ் (1922-2020). இவர் ஒரு பொறியாளர், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்தவர்.
  • அடுத்தவர், கே.டி.தாமஸ் (1937) - சமூக ஆர்வலர், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர். இருவருக்கும் ஒரே பெயர் என்பதோடு வேறு சில ஒற்றுமைகளும் உண்டு. இருவரும் மலையாளிகள். இருவரும் பெரியாறு அணையுடன் தொடர்புடையவர்கள்.
  • முதல் பூதம்: 1979ஆம் ஆண்டுதான் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்னும் பூதம் முதலில் புறப்பட்டது. சமூக ஊடகங்கள் இல்லாத அந்தக் காலத்தில், பீதியைப் பரப்பும் வேலையை அச்சு ஊடகங்கள் செய்தன. கேரள அரசு மத்திய அரசிடம் முறையிட்டது.
  • அப்போது மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்தவர் பொறியாளர் கே.சி.தாமஸ். அவர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அணையைப் பரிசோதித்தது. அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்றார் கே.சி.தாமஸ். அதை அப்போதைய கேரள முதல்வர் ஈ.கே.நாயனாரிடமும் தெரிவித்தார்.
  • எனினும் அணையின் ஆயுளையும் மக்களின் அச்சத்தையும் கணக்கில்கொண்டு, அணையில் மூன்று கட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும், அதுவரை ஓர் இடைக்கால ஏற்பாடாக அணையின் உச்ச நீர்மட்டமான 152 அடியை 136 அடியாகக் குறைத்துக்கொள்ளுமாறும் கே.சி.தாமஸ் பரிந்துரைத்தார். இரண்டு மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டன. தமிழகம் மேற்கொண்ட மேம்பாட்டுப் பணிகள் 1984இல் முடிவடைந்தன.
  • 1985இலும், 1996இலும் அணையைப் பரிசோதித்த ஆணையத்தின் வல்லுநர் குழு அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிவித்தது. என்றாலும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளம் உடன்படவில்லை. பிரச்சினை மத்திய அரசிடமும் உச்ச நீதிமன்றத்திடமும் போனது. மத்திய அரசு அணைக்கட்டு வல்லுநர் டாக்டர் பி.கே.மிட்டலின் தலைமையில் எழுவர் அடங்கிய பொறியாளர் குழுவை நியமித்தது. குழுவில் தமிழ்நாடு, கேரள நீர்வளத் துறைகளின் தலைமைப் பொறியாளர்களும் இடம்பெற்றனர்.
  • விரிவான சோதனைகளையும் ஆய்வுகளையும் நடத்திய குழு, அணை பாதுகாப்பாக இருக்கிறது என்றும், உடனடியாக நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், முதன்மை அணைக்கு அருகில் இருக்கும் சிற்றணையில் சில மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்ட பிறகு, முழு நீர்மட்டமான 152 அடிக்கு உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்தது.
  • குழுவில் அங்கம் வகித்த கேரளப் பிரதிநிதி மட்டும் இந்தப் பரிந்துரையை ஏற்கவில்லை. குழுவின் இந்த அறிக்கைதான் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட அடிப்படையாக அமைந்தது. இந்தத் தீர்ப்பை 2006இல்தான் பெற முடிந்தது.
  • நீர்மட்டம் உயர்ந்தால் அணை உடையும் என்றொரு கதையைக் கட்டமைத்திருந்த கேரள ஊடகங்கள், இப்போது தங்கள் ஊகங்களை ஊதிப் பெருக்கின. இதைத் தொடர்ந்து கேரள அரசு நீர்ப்பாசனப் பாதுகாப்புக்காகத் தனிச் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. மாநிலத்தில் உள்ள எல்லா அணைக்கட்டுகளின் நீர்மட்டத்தையும் கேரள அரசுதான் நிர்ணயிக்கும்.
  • இதன்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மிகலாகாது. இது சட்டத்தின் மாட்சிமைக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் பொறியியல் கோட்பாட்டுக்கும் எதிரானது. 2006இல் தமிழகம் மீண்டும் வழக்குத் தொடுத்தது. 2010இல் இந்த வழக்கு ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
  • இந்த அமர்வு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்ய நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்தின் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தது. குழுவில் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணனும், கேரள அரசின் சார்பில் முன் குறிப்பிடப்பட்ட நீதியரசர் கே.டி.தாமஸும் இடம்பெற்றனர். தவிர, இரண்டு பொறியியல் வல்லுநர்களோடு குழுவின் உறுப்பினர்கள் ஐவராயினர்.
  • நான்கு கேள்விகள்:
  • ஓர் அணைக்கட்டின் பாதுகாப்பு முக்கியமாக நான்கு அம்சங்களில் கணிக்கப்படுகிறது. உச்சபட்ச சாத்தியமுள்ள பெருமழையின்போது அணையின் நீர்மட்டம் எவ்வளவு உயரும், நீர்ப்பரப்பு எவ்வளவு விரியும்? இரண்டு - அணையின் நீர்க்கசிவு கூடிவருகிறதா? அது விதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கிறதா? மூன்று - அணையின் கட்டுமானப் பொருள்களின் தரம் எப்படி இருக்கிறது? நான்கு - அணை எந்த அளவுக்கான நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும்? அது குறிப்பிட்ட பகுதியில் சாத்தியமுள்ள அதிகபட்ச நிலநடுக்க அளவைவிடக் குறைவானதா? இந்த நான்கு வினாக்களின் வழி அணையை விரிவாக ஆய்வுசெய்தது குழு.
  • பல்வேறு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. கருங்கல்லாலும் சுண்ணாம்புச் சுருக்கியாலும் கட்டப்பட்டிருந்த அணை கான்கிரீட்டாலும் ஊடுகம்பிகளாலும் மேம்படுத்தப்பட்டிருந்தது. எல்லாப் பொருள்களும் சோதிக்கப்பட்டன. ஆய்வுக் கூடங்களில் மாதிரிகள் உருவாக்கப்பட்டன. எல்லாக் கணக்கீடுகளும் எல்லா ஆய்வுகளும் எல்லாச் சோதனைகளும் ஒரே முடிவை எட்டின: ‘அணை பாதுகாப்பாக இருக்கிறது!’

தீர்ந்தது ஐயம்:

  • குழுவின் உறுப்பினர் நீதியரசர் கே.டி.தாமஸ் இதை மேலும் ஒருவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினார். இதற்காக கோட்டயத்திலிருந்து அவர் திருவனந்தபுரம் சென்றார். அங்கு பொறியாளர் கே.சி.தாமஸைச் சந்தித்தார். 1979 முதல் அணையின் மேம்பாட்டுப் பணிகளை மேற்பார்வையிட்டவர் பொறியாளர் தாமஸ்.

அவர் நீதியரசர் தாமஸிடம் சொன்னார்:

  • “1984இல் மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்தபோது, அது புதிய அணையாகவே மாறிவிட்டது.” தொடர்ந்து அணையின் பல்வேறு சிறப்பம்சங்களையும் விளக்கினார். நீதியரசர் விடைபெறும்போது பொறியாளர் சொன்னதுதான் முக்கியமானது. “எனக்கு இப்போது 90 வயதாகிறது. 50 வயதாக இருந்தால், பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியில் 50 சென்ட் இடம் வாங்கி, அதில் ஒரு வீடு கட்டி வாழ்ந்திருப்பேன்” என்றார்.
  • அதன் பிறகு நீதியரசருக்கு எந்த ஐயமும் இல்லை. அணை பாதுகாப்பாக இருக்கிறது என்கிற அறிக்கையை ஒருமனதாக உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது குழு. இதற்காக நீதியரசர் தாமஸ், கேரளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அப்படி நடக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
  • ஆனால், மனசாட்சி மிக்க ஓர் ஆளுமைக்கு உண்மை எல்லாவற்றையும்விட உயர்வானதல்லவா? ஆனால், கேரள அரசு உண்மைக்கு எதிர்த்திசையில் இயங்குகிறது. ஒருபுறம் சிற்றணையில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கிறது. மறுபுறம் அவசியமற்ற புதிய அணைத் திட்டத்தை முன்னெடுக்கிறது.
  • புதிய அணை தொடர்பாக மே 28ஆம் தேதி நடக்கவிருந்த சுற்றுச்சூழல் கூட்டத்துக்கு முன்பாகத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்வினையாற்றியது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகச் செயல்படுவதால், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்போம் என்று கடிதம் எழுதினார் மு.க.ஸ்டாலின். அதுவே கூட்டம் ரத்துசெய்யப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம்.
  • விவாதம் தொடர்கிறது. பிரச்சினையை எதிர்கொள்ள சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியமானவை. தாமதமானாலும் நீதிமன்றத்தின் மூலமாகவே அணையின் நீர்மட்டம் 142 அடி ஆகியிருக்கிறது. சட்டத்தின் வழிகளை முழுமையாகப் பயன்கொள்ளும் அதே வேளையில், கேரள அரசையும் கேரள அறிவாளர்களையும் நாம் அணுக வேண்டும்.
  • கட்டுக்கதைகள் பரப்பப்பட்டுவரும் அதே கேரளத்திலிருந்துதான் ஒரு கே.டி.தாமஸும் ஒரு கே.சி.தாமஸும் அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று சொன்னார்கள். அவர்கள் நேர்மையாளர்கள். இன்னும் எண்ணற்ற தாமஸ்கள், கல்வி சிறந்த கேரளத்தில் இருப்பார்கள். அவர்களைத் தமிழகத்தின் அறிவாளர்கள் காட்சி, அச்சு ஊடகங்கள் வழியாக அணுக வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும். அந்த உண்மை 152 அடி உயரமானது.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories