TNPSC Thervupettagam

பெருங்கடல் பாதுகாப்பு ஏன் அவசியம்

June 8 , 2023 536 days 360 0
  • பெருங்கடல்களும் கடல்களும் புவியின் மேற்பரப்பில் 70% அளவுக்குப் பரவியிருக்கின்றன. மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனின் பெரும்பகுதியைக் கடல்களே உருவாக்குகின்றன; கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கின்றன, காலநிலையை ஒழுங்குபடுத்துகின்றன, ஆயிரக்கணக்கான மீன்பிடி, கடலோரச் சமூகங்களின் வாழ்வாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் இன்றியமையாதவையாக உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் இருந்தும், கடல்களும் அவற்றின் வளங்களும் பல்வேறுநெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன; பல அச்சுறுத் தல்களை நாள்தோறும் எதிர்கொள்கின்றன.

கடலும் கழிவும்:

  • ஐக்கிய நாடுகள் அவையின் உணவு - வேளாண்மை அமைப்பின் (FAO) அறிக்கையின்படி, உலகின் கடல் வளங்களில் 30% தற்போது அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்பட்டுவருகின்றன; அல்லது மாசுபடுதல், அதிகப்படியான மீன்பிடித்தல், கடலில் வீசப்படும்-எறியப்படும்-அறுந்துபோகும் வலைகளில் தற்செயலாகச் சிக்கி உயிரினங்கள் இறந்துபோதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் கடலின் இயல்பில் மாற்றம் ஏற்படுகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் டன் ஞெகிழிக் கழிவு கடலில் சேர்கிறது. இந்தக் கடல் குப்பைகளில் சுமார் 10%, ‘கோஸ்ட் கியர்’ என்று குறிப்பிடப்படும் தூக்கிவீசப்பட்ட, அறுந்த அல்லது நிராகரிக்கப்பட்ட மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள் என 2016இல் வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • கடல் வாழிடங்களுக்கும் பல்லுயிர்களுக்கும் - குறிப்பாக பவளத்திட்டுகள், சுறா, ஆமைகள், திமிங்கிலங்கள், ஆவுளியா (Dugong), பெரிய மீன்களுக்கு - இந்தக் கழிவு வலைகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இனி பயன்படுத்த இயலாது என்கிற நிலையில் ஒரு வலை கடலில் எறியப்படும்போது, அதன் பயன்பாடு முடிந்துவிட்டது என்று பொருளல்ல. மாறாக, இந்த வலைகள் தங்கள் பாதையில் கடந்துசெல்லும் அனைத்தையும் சிக்கவைத்து, கடல்வாழ் உயிரினங்களின் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கைக்கும் கேடு விளைவிக்கின்றன.
  • மேலும், பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த வலையில் சிக்கிய மீன்களை உண்ண வரும் மற்ற உயிரினங்களும் அவற்றில் சிக்கி இறந்துபோகின்றன. ஆமைகள், ஓங்கில்கள், திமிங்கிலங்கள், பெரிய மீன் இனங்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள் இந்தக் கழிவு வலைகளில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு அல்லது சோர்வடைந்து மெதுவாகவும் பெருத்த வலியுடனும் இறக்கக்கூடும்.

அகற்றும் வழிமுறைகள்:

  • கடலில் அறுந்த, தூக்கிவீசப்பட்ட, கைவிடப்பட்ட மீன்பிடி வலைகளும் சாதனங்களும் மீனவர்களுக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் சவாலாக இருப்பது மட்டுமில்லாமல், குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதாரத் தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இந்த வலையில் சிக்கிய, பிடிபட்ட 90%க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் வணிக மதிப்புடையவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. படகு சுழல்விசிறிகள் அல்லது இயந்திரங்களில் சிக்கிய வலைகளை அகற்றுவது இன்னொரு பிரச்சினை.
  • இதன் மூலம், குறிப்பிடத்தக்க பழுதுபார்ப்பு, எரிபொருள் இழப்பு எனப் படகு உரிமையாளர்களுக்கு அதிக நடைமுறைச் செலவுகள் ஏற்படுகின்றன. மேலும், இவை படகு செலுத்துதல், கடலில் பாதுகாப்பு போன்றவற்றுக்கு ஆபத்தாக உள்ளன. எனவே, வலைக்கழிவுகள் கடலுக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலமும் அவற்றைக் கடலிலிருந்து நீக்குவதன் மூலமும் மீனவளத்தையும் கடல் வளத்தையும் காக்க முடியும். கூடவே, மீனவர்களுக்கு இந்த வலைகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பையும் குறைக்க முடியும்.
  • இந்த வலைகளை அகற்ற பல பரிமாண அணுகுமுறையும் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பை உள்ளடக்கிய சாத்தியமான தீர்வுகளும் நடவடிக்கைகளும் தேவை. கடலிலிருந்து கழிவு வலைகளை நீக்குவதற்கும் குறைப்பதற்கும் மீன்பிடிவலை விநியோகச் சங்கிலியில் அனைத்து மட்டங்களிலும் இடம்பெற்றுள்ளவர்களின் அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு, புதுமைக்கான தேடுதல் தேவைப்படுகிறது. இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால், வலுவான கொள்கைகள், மீனவச் சமூகம், உள்ளூர்ப் பஞ்சாயத்து சம்பந்தப்பட்ட கள அடிப்படையிலான ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, மனிதத் தலையீடுகள், கொள்கைகள் மட்டுமே ஒரே தீர்வு.

தேவை விழிப்புணர்வு:

  • கடல் துப்புரவு என்பது கடலிலிருந்து தேவையற்ற வலைகளை அகற்றுவதற்கான வழிகளில் ஒன்றாகும். மேலும், இது வெவ்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட வேண்டும். மீன் கொண்டுவரப்பட்டு வைக்கப்படும் துறைகள், மீன்பிடித் துறைமுகங்கள் ஒவ்வொன்றிலும் கடலில் உள்ள கழிந்த வலைகளின் மாசுபாட்டைத் தடுக்கப் பயனுள்ள உத்திகளை உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியம். மீனவர்கள், படகு உரிமையாளர்கள் மத்தியில் கழிந்த வலைகளை அகற்றல், மீட்புச் செயல்முறை போன்ற பிரச்சினைகள் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
  • இவற்றை மேலாண்மை செய்வதற்குச் சுற்றுச்சூழலைப் பாதிக்காத மறுசுழற்சி முறைகள் தீவிரமாக மேம்படுத்தப்பட வேண்டியது முக்கியமானது. வலை தயாரிக்கும் நிறுவனங்கள், வலை உற்பத்தியாளர்கள் கழிவு வலைகளைத் திரும்பப் பெறுவதற்குப் பணம் அல்லது சில வகையான தள்ளுபடிகள், அவர்களை மீனவர்கள் எளிய முறையில் அணுகக்கூடிய வசதிகள் போன்ற சலுகைகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.
  • இந்த வழியில் சேகரிக்கப்பட்ட வலைகளைக் கலை ஆபரணங்கள், விளையாட்டு வலைகள் போன்ற பல புதுமையான வழிகளில் மறுசுழற்சி செய்வதன் மூலம் பொருளாதாரரீதியில் வருமான சுழற்சியை ஏற்படுத்த முடியும். பயன்படுத்தப்பட்ட வலைகளை கழிவுப்பொருளாகக் கருதாமல், மற்ற பொருள்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாக மீனவர்கள் கருதும் வகையில், அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான விழிப்புணர்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
  • உலகப் பெருங்கடல்கள் நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 8 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு, வேலைவாய்ப்பை வழங்கும் கடல், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.
  • கடல் மாசுபடுதல், அது தொடர்பான பிரச்சினைகள் பெருங்கடல்களை - குறிப்பாக அதன் ஆரோக்கியம், கடல்வாழ் உயிரினங்கள், அதன் மீன் வளங்களை- எவ்வாறு பாதிக்கிறது. என்பதைப் பற்றிச் சிந்திக்க இது ஒரு பொருத்தமான நாள். கடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நமது ஒவ்வொருவரின் ஆதரவும் முயற்சியும் ஒற்றுமையும் மிகவும் அவசியம்.

நன்றி: தி இந்து (08 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories