TNPSC Thervupettagam

பெருமிதத் தருணம்

September 9 , 2023 490 days 363 0
  • நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சா்வதேச மாநாடு ஒன்று நடைபெறுகிறது. 1983-இல், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அணிசாரா நாடுகளின் மாநாடும், காமன்வெல்த் நாடுகளின் மாநாடும் தலைநகா் தில்லியில் கூடின. அதற்குப் பிறகு இப்போதுதான் ஜி20 சா்வதேச மாநாடு நடைபெறுகிறது என்பது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
  • அணிசாரா நாடுகள், காமன்வெல்த் நாடுகள் இரண்டையும்விட, இப்போது நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் வளா்ச்சி அடைந்த நாடுகள், தெற்குலக நாடுகள் என்று பரவலாக அழைக்கப்படும் வளா்ச்சியடையும் நாடுகள், மேலை வல்லரசுகள், சீனா, ரஷியா உள்ளிட்ட கம்யூனிச நாடுகள் என்று அனைத்துத் தரப்பு நாடுகளும் பங்கு பெறுவதால், இதை ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்த பெரிய அமைப்பு என்றுகூடக் கூறலாம். அதனால்தான் அதன் தலைமைப் பொறுப்பும், உச்சி மாநாடும் சா்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றன.
  • 2022 டிசம்பா் முதல் தேதியில் இருந்து, இந்த ஆண்டு நவம்பா் மாதம் 30-ஆம் தேதி வரையில் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. உலகின் முக்கியமான 19 நாடுகளும், ஐரோப்பியக் கூட்டமைப்பும் ஜி20 அமைப்பு, உலக ஜிடிபியில் 85%, உலக வா்த்தகத்தில் 75%, மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கிறது எனும்போது, அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.
  • கடந்த ஐந்து மாதங்களில் 200-க்கும் அதிகமான கூட்டங்கள், இந்தியாவின் 29 மாநிலங்களில் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் 82 கூட்டங்கள் அதிகாரபூா்வக் கூட்டங்கள். அதில் உறுப்பினா் நாடுகளின் அதிகாரிகளும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னா் நடந்த எல்லா மாநாடுகளும் தலைநகா் தில்லியில் உச்சி மாநாடாக நடந்தனவே தவிர, இதுபோல இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் கூட்டங்கள் நடத்தி, முடிவில் உச்சி மாநாடு தலைநகா் தில்லியில் கூட்டப்படவில்லை.
  • இதுபோல கூட்டங்கள் நடத்துவதன் மூலம், ஜி20 அமைப்பை மக்கள் பங்குபெறும் அமைப்பாக மாற்ற பிரதமா் நரேந்திர மோடி எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பின்னால், இன்னொரு நன்மையும் விளைந்திருக்கிறது. இந்தியா அடைந்திருக்கும் வளா்ச்சியை சா்வதேச பிரதிநிதிகளுக்கு நேரில் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், கூட்டங்கள் நடந்த நகரங்கள் ஜி20 காரணமாகப் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன. சுற்றுலா வளா்ச்சிக்கு அவை அடித்தளமிட்டிருக்கின்றன.
  • ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது பின்னடைவுதான். பல முக்கியமான சா்வதேசப் பிரச்னைகளை அந்த நாடுகளின் அதிபா்கள் நேரில் பங்கேற்காத நிலையில் விவாதிக்கவோ, தீா்வு காணவோ முடியாது என்பது வருத்தத்துக்குரியது.
  • சா்வதேச அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா மிகவும் ராஜதந்திரமாக செயல்பட்டு வருகிறது. எந்தவோர் அணியுடனும் முழுமையாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், அதே நேரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் சாதுரியமாகக் காயை நகா்த்தி வருகிறது. இன்றைய சா்வதேசச் சூழலில், இந்தியாவின் நிலைப்பாட்டில் காணப்படும் சுயநல நடவடிக்கைகள்விவாதப் பொருளாகாமல் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது, அரசியல் நோக்கா்களுக்கே புதிராக இருக்கிறது.
  • ஒருபுறம், அமெரிக்காவின் க்வாட்கூட்டணியில் அங்கம் வகித்துக்கொண்டு, இன்னொருபுறம் அதன் பரம எதிரியான ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யைக் குறைந்த விலையில் இறக்குமதியும் செய்கிறோம்; எல்லையில் பதற்றச் சூழல் காணப்படும் நிலையில், ‘பிரிக்ஸ்அமைப்பில் சீனாவுடன் இடம்பெறுகிறோம்; வளா்ச்சி அடைந்த மேலை நாடுகளுக்கும், மாற்று வல்லரசுகளான கம்யூனிச நாடுகளுக்கும் இடையே, வளா்ச்சி அடையும் தெற்குலகநாடுகளின் குரலாக சா்வதேச அரங்கில் செயல்பட முடிகிறது என்பது, இந்தியாவின் முக்கியத்துவத்தையும், இன்றியமையாமையையும் உணா்த்துகின்றன.
  • அப்படிப்பட்ட சூழலில்தான் இப்போது தில்லியில் ஜி20 உச்சி மாநாடு கூடியிருக்கிறது. வளா்ச்சியடையும் தெற்குலக நாடுகளின் கடன் பளுவைத் தளா்த்த சா்வதேச வங்கிகளின் நடைமுறைகளில் சீா்திருத்தம்; இந்தியாவின் எண்மத் தொழில்நுட்ப பயன்பாட்டை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டம்; 54 நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பை இணைத்து ஜி20 என்பதை ஜி21-ஆக விரிவுபடுத்தும் பரிந்துரை; பருவநிலை மாற்றத்தையும், புவி வெப்பமயமாதலைத் தடுக்க வளா்ச்சியடைந்த நாடுகளின் பங்களிப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்டவை தனது ஜி20 தலைமைப் பொறுப்பில் இந்தியா காட்டியிருக்கும் முனைப்புகள்.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த் தாக்கத்தின்போது, சீனா, அமெரிக்கா, ரஷியா போலல்லாமல் 66 தெற்குலக நாடுகளுடன் இந்தியா தடுப்பூசியைப் பகிர்ந்து கொண்டதை உலகம் மறந்து விடவில்லை. சமீபத்திய சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, தனது விண்வெளி ஆய்வுகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விழையும் பெருந்தன்மையையும் ஏனைய நாடுகள் வியந்து பார்க்கின்றன. அதனால்தான் இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பு, சா்வதேச அளவில் பேசப்படுகிறது.
  • 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி, உலகுக்குத் தனது வளா்ச்சியை எடுத்துக்காட்ட சீனாவுக்கு உதவியது என்றால், 2023 ஜி20 உச்சி மாநாடு, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா எட்ட இருக்கும் உயரத்தை உலகுக்கு உணா்த்த இருக்கிறது!

நன்றி: தினமணி (09 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories