- உலக பேட்மின்ட்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று புதிய சாதனை படைத்து இந்தியர்களை மகிழ்ச்சியிலும் பெருமையிலும் ஆழ்த்தியிருக்கிறார் பி.வி.சிந்து. இதுவரை எந்த இந்திய வீரர் அல்லது வீராங்கனையும் இதைச் சாதித்ததில்லை. பேட்மிண்டனின் இந்திய முகமாக அறியப்பட்ட பிரகாஷ் படுகோன், பி.கோபிசந்த் கூட ‘அனைத்து இங்கிலாந்து' சாம்பியன்ஷிப் போட்டிகள் வரையில்தான் முன்னேறினார்கள்.
- சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நொசோமி ஒகுஹரா, 38 நிமிடம் நடந்த ஆக்ரோஷமான ஆட்டத்தில் சிந்துவிடம் தோற்றார். 2016 ஒலிம்பிக் போட்டி, 2017, 2018 உலக சாம்பியன் போட்டிகள், 2018 காமன்வெல்த், ஆசியப் போட்டிகளில் இறுதிச் சுற்றில் தோல்வியையே சந்தித்தார் சிந்து. இதனால், மிகப் பெரிய போட்டிகளின் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் உந்துதல், ஆற்றல் குறைவாக இருக்கிறது என்று அவரை விமர்சித்தார்கள். 21-7, 21-7 என்ற கணக்கில் இறுதிச் சுற்றில் வென்று அவர்களுக்கெல்லாம் பதில் அளித்துவிட்டார்.
மகளிர் பிரிவு
- 2006-ல் பேட்மின்ட்டன் போட்டியில் ஒரு ஆட்டத்துக்கு 21 புள்ளிகள் என்று தீர்மானித்த பிறகு, இந்த அளவுக்குத் திட்டவட்டமாக மகளிர் பிரிவு போட்டியில் யாருமே சாம்பியன் ஆனதில்லை. இந்தப் பருவத்தில் சிந்து எல்லாப் போட்டியாளர்களையும் நன்றாகவே எதிர்கொண்டார். காலிறுதிச் சுற்றில் டாய் சு-யிங்யிடம் ஒரு ஆட்டத்தை மட்டுமே இழந்தார். அரை இறுதிப் போட்டியில் உலகின் 3-வது இட ஆட்டக்காரரான சென் யுஃபெயை அப்படியே தூக்கிவீசிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
- 2020 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பு சிந்துவுக்கு அதிகரித்திருக்கிறது. சிந்து இப்போது தனது ஆட்டத்திறனின் உச்சத்தில் இருக்கிறார். எந்தப் போட்டியாக இருந்தாலும் அவர் வெற்றியை ஈட்டுவார் என்பது நிச்சயம். சிந்துவின் இந்த வெற்றி, இந்திய இளம் மகளிருக்கு மிகப் பெரிய உற்சாகத்தை நிச்சயம் அளித்திருக்கிறது. சிந்து, சாய்னா நெவாலைத் தவிர, உலகின் முதல் 60 வீராங்கனைகள் பட்டியலில் வேறு இந்தியப் பெண்கள் இல்லை என்பதைப் பார்க்கும்போது சிந்துவின் வெற்றி முக்கியமாகிறது.
ஆடவர் பிரிவு
- மகளிர் பிரிவில் மட்டுமல்ல, ஆடவர் பிரிவிலும் புதிய வீரர்கள் முன்னுக்கு வர வேண்டும். பி.சாய் பிரணீஷ் பேசலில் நடந்த போட்டியில் அரை இறுதி வரை முன்னேறினார். உலக பேட்மின்ட்டன் போட்டிகளில் இந்திய வீரர்கள் பேசப்படும் அளவுக்கு அவர்களை முன்னுக்குக் கொண்டுவந்த முதன்மை தேசியப் பயிற்றுநர் கோபிசந்தும் மிகவும் பாராட்டுக்குரியவர். அவரிடம் பயிற்சி பெற்ற சிந்து, அவருக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இந்தியா இதுவரை உலகுக்கு அளித்த மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் சிந்துவும் ஒருவர் என்பதில் நாம் பெருமைகொள்ளலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை(03-09-2019)