TNPSC Thervupettagam

பெற்றதும் உற்றதும்

November 26 , 2024 9 days 147 0
  • தற்போதைய அரசமைப்பு ஏற்கப்பட்டு, இன்றுடன் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறோம். நிலம், மொழி, இனம், நிறம், உணவு, உடை எனப் பன்மைத்துவம் கொண்ட விரிந்து பரந்த இந்தியாவின் உறுதிக்கும் இயக்கத்துக்கும் அச்சாணியாக இருப்பது இந்திய அரசமைப்புதான். அதை வடிவமைத்தவர்கள், பேரவைக்கு உள்ளும் வெளியிலுமிருந்து விவாதித்தவர்கள் என எல்லோரையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய தருணமிது.
  • இந்தியாவின் உறுதிக்கு அரசமைப்பு அடிப்​படையாக இருப்​பதைப் போலவே, தேசிய அளவில் பெருஞ்​சிக்​கல்களாகத் தொடரும் பல விவாதப் பொருள்​களுக்கும் அதுவே காரணமாகி நிற்கிறது. போற்றித் துதித்​த​படியே அரசமைப்பை விமர்​சிக்​க​வும்தான் வேண்டி​யிருக்​கிறது.
  • இரண்டில் எதைத் தவிர்த்​தாலும் பிழையாகிப்​போகும். நடந்து முடிந்த நாடாளு​மன்றத் தேர்தலின்போது எதிர்க்​கட்​சிகளின் தலைவர்கள் அரசமைப்புப் புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி பிரச்​சாரம் செய்தார்கள். பதவி யேற்​கை​யிலும் கரங்களில் அந்தப் புத்தகத்தோடு காட்சி​யளித்​தார்கள்.

எதிரெதிர் முழக்​கங்களா?

  • அரசமைப்பைப் பாதுகாப்போம் என்பது அரசியல் முழக்​க​மாகவே மாறிப்​போ​யிருக்​கிறது. அந்த முழக்​கத்தை முன்வைக்கும் கட்சிகளில் சில, அரசமைப்பின் பல பகுதிகள் திருத்​தி​யமைக்​கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவை. முக்கிய உதாரண​மாகத் தமிழ்​நாட்டை ஆளும் திமுகவையே எடுத்​துக்​கொள்​ளலாம். முதலமைச்சராக அண்ணா பொறுப்​பேற்றுக்​கொண்​ட​வுடன் சென்னை வானொலியில் 15.3.1967இல் ஆற்றிய உரையில் ‘மாநில அரசு செயல்பட இயலாது தடுத்​திடும் குறைபாடுகள் நீக்கப்​பட்டாக வேண்டும்.
  • நிதிநிலை, வருவாய்ப் பெருக்கம், உதவி, கடன் என்பவைகளை மட்டுமல்ல நான் குறிப்​பிடுவது. செயலாற்று​வதற்குத் தேவைப்​படும் அதிகாரம் பற்றியும் குறிப்​பிடு​கிறேன். அரசியல் சட்டத்தில் தரப்பட்​டுள்ள அதிகார வரம்பும் வகையும் மாற்றி அமைக்​கப்​பட்​டால்​தான், மாநில அரசு முழு வளர்ச்சி பெற முடியும், மக்களின் வாழ்வைச் செம்மைப்​படுத்த முடியும் என்றால், அந்த நோக்கத்​துடன் அரசியல் சட்டத்தைத் திருத்தத் தயக்கம் காட்டக் கூடாது’ என்று பேசினார்.
  • அதே வார்த்​தைகள் இன்றும் தொடர்​கின்றன. மத்தியில் ஆண்ட அன்றைய ஆளுங்​கட்சி இன்று திமுகவின் கூட்டணிக் கட்சி. ஆனாலும் கட்சி வேறுபாடு​களைத் தாண்டி மத்திய அரசை நோக்கிக் கோரிக்கைகள் தொடர்ந்​து​கொண்டே இருக்​கின்றன. இவற்றைக் கருத்​தியல் வேறுபாடுகள் என்பதோடு மையப்​படுத்​தப்பட்ட அரசமைப்பு அதிகாரத்தை நோக்கிய எதிர்க் குரலாகவும் பார்ப்பதே பொருத்​த​மானது.

அடிப்​படைக் கட்டு​மானம்:

  • மாநிலங்​களின் சட்டமியற்றும் அதிகாரம், மாநிலங்​களாகவே நீடிக்கும் அதிகாரம், அவற்றின் சிறப்பு​உரிமை​களைத் தக்கவைத்​துக்​கொள்ளும் அதிகாரம், நிதிப் பகிர்வில் சமத்துவம், ஆட்சிமொழி உள்ளிட்ட அரசமைப்பின் கூறுகள் திருத்​தப்பட வேண்டிய பகுதிகள் என்று விவாதங்கள் ஆக்கபூர்​வ​மாகத் தொடரும் வேளையில், நடைமுறையில் உள்ள அரசமைப்பின் அடிப்​படைக் கட்டு​மானத்தைப் பாதுகாப்​பதும் அவசியம் என்பதும் உணரப்​படு​கிறது.
  • குடிமக்கள் ஒவ்வொரு​வரின் அடிப்​படைக் கடமைகளில், அரசமைப்பைப் பாதுகாப்​பதும் ஒன்று. அரசமைப்பு வெறும் பகுதி​களும் கூறுகளும் அட்டவணை​களும் பட்டியல்​களும் கொண்ட சட்ட வரைவு மட்டுமல்ல. இந்தியா என்ற ஒற்றை வார்த்தை உள்ளடக்கி​யிருக்கும் பன்மைத்துவம், தனிமனிதச் சுதந்​திரம், சமூக நீதி ஆகிய அரசியல் கோட்பாடு​களின் தத்துவ வெளிப்​பாடு. ஆனால், கடந்த சில பதிற்​றாண்​டு​களில் அந்தத் தத்துவம் கேள்விக்கு உள்ளாகிவரு​வதையும் கவனத்தோடு ஆராய வேண்டி​யிருக்​கிறது.

நெருக்கடிநிலைப் பாடங்கள்:

  • அரசமைப்புத் திருத்​தங்​களைத் தனிப் பெரும்​பான்​மை​யாலும் அறுதிப் பெரும்​பான்​மை​யாலும் மேற்கொண்டு​விடலாம். ஆனால், அத்திருத்​தங்கள் காலத்தின் கரங்களில் ஒப்படைக்​கப்​படு​கின்றன. அரசமைப்பு ஏற்கப்​பட்டதன் 75ஆவது ஆண்டை நிறைவுசெய்யும் இவ்வேளை​யில், நெருக்கடி நிலையின் 50ஆவது ஆண்டையும் அனுசரித்​துக்​கொண்​டிருக்​கிறோம். நெருக்கடிநிலைக் காலத்தின் திருத்​தங்கள் பின்வந்த அரசால் மீண்டும் திருத்​தி​யமைக்​கப்​பட்டன.
  • ‘மதச்​சார்​பற்ற’, ‘சோஷலிச’ என்ற வார்த்​தைகள் மட்டுமே விட்டு​வைக்​கப்​பட்டன. ஏனெனில், அவை அரசமைப்பின் உள்ளுறைந்த கோட்பாடுகள். அரசமைப்பால் மதச்சார்​பின்மை ஏற்றுக்​கொள்​ளப்​பட்டால் மட்டும் போதாது. அரசமைப்பின் முக்கியப் பொறுப்புகளை வகிப்​பவர்கள் அதை எல்லா நிலைகளிலும் கடைப்​பிடிக்க வேண்டும். குறைந்​த​பட்சம், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளையும் வீட்டு விழாக்​களையும் பொதுவெளியில் பகிர்​வதையேனும் தவிர்க்க வேண்டும்.

அதிகார ஒப்படைவுகள்:

  • நாடாளு​மன்​றத்தில் போதுமான விவாதங்கள் இல்லாமலேயே முக்கியமான சட்டங்கள் இயற்றப்​படு​வ​தாகச் சொல்லப்​படும் குற்றச்​சாட்டு​களுக்கு இனிமேலும் வாய்ப்புகளை வழங்கக் கூடாது. அரசமைப்புத் திருத்​தங்கள் உள்ளிட்ட முக்கியமான சட்ட முன்வரைவுகள் நாடாளு​மன்றக் குழுக்​களுக்கு அனுப்​பிவைக்​கப்​பட்டு விரிவாக விவாதிக்​கப்​படும் நடைமுறை குறைந்​து​கொண்டு​இருப்பது இக்குற்​றச்​சாட்டு​களுக்கு வலுசேர்க்கவே செய்யும். சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்கள் தங்கள் பிரதி​நி​தி​களுக்​குத்தான் அளித்​திருக்​கிறார்களே தவிர, ஆளுங்​கட்​சிக்கு ஆதரவான உயர் அலுவலர்​களுக்கு அல்ல.
  • அரசமைப்பின் வழி, மத்திய அரசின் பிரதி​நி​தி​களாகச் செயல்​பட்டு​வரும் ஆளுநர் அலுவல​கங்கள் மட்டுமின்றி, தன்னாட்சி உரிமை அளிக்​கப்பட்ட தேர்தல் ஆணையமும்கூட ஆளுங்​கட்சி ஆதரவுநிலைக்குத் தள்ளப்​பட்டு​விட்டதோ என்று சந்தேகங்கள் எழுப்​பப்​படு​கின்றன. இந்த ஐயப்பாடுகள் அரசமைப்பின் பாதுகாவலராக வர்ணிக்​கப்​படும் உச்ச நீதிமன்​றத்தின் நிர்வாகச் செயல்​பாடு​களையும் விட்டு​வைக்க​வில்லை. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிப​தி​களைத் தேர்ந்​தெடுக்கும் உச்ச நீதிமன்​றத்தின் மூத்த நீதிப​திகள் அடங்கிய குழுவின் அதிகாரமும் முன்னெப்​போதும் இல்லாத அளவுக்கு விவாதங்​களுக்கு உள்ளாகிவரு​கிறது.
  • உச்ச நீதிமன்​றத்தின் இந்தத் தனிச்​சிறப்பான அதிகார​மானது அரசமைப்பின் வழியாக வழங்கப்​பட்டது அல்ல என்கிற பார்வையும் முன்வைக்​கப்​படு​கிறது. நீதித் துறை தனது தன்னாட்​சியைத் தக்கவைத்​துக்​கொள்ள வேண்டு​மெனில், கடந்த காலங்​களில் நிலைநிறுத்திய அதன் நம்பகத்​தன்​மையைப் பேணிக் காக்க வேண்டும். தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் குறித்த தனது அதிருப்தியை உச்ச நீதிமன்றம் வெளிப்​படுத்​தி​ய​போது, அந்த நம்பிக்கையின் ஒளிக்​கீற்றுகள் புலப்​பட்டன.

அதிகாரப் பிரிவினை:

  • தன்னாட்சியை அனுபவிக்கும் நீதிப​திகள் பணிநிறைவுக்குப் பின்பு, நிர்வாகத் தலைமையை அலங்கரிக்க விரும்​பு​வார்கள் என்றால், அந்தத் தன்னாட்சி கேள்விக்கு ஆளாவது தவிர்க்க​விய​லாதது. இது நீதித் துறைக்கு மட்டுமன்று, நிர்வாகத்தின் உயர் பொறுப்புகளை வகிக்கும் அலுவலர்கள் பணியி​லிருந்து விலகிய வேகத்தில் சட்டம் இயற்றும் அவைகளுக்கு ஆசைப்​படு​வதற்கும் பொருந்​தும். பணிவில​கலுக்கும் பதவியேற்​பு​களுக்கும் இடையில் குறைந்​தபட்ச கால அவகாசத்தைச் சட்டரீ​தி​யாகவே உறுதிப்​படுத்த வேண்டும்.
  • சட்டம் இயற்றும் அவைகள், நிர்வாகம், நீதித் துறை என்று எல்லா நோக்கிலும் மத்திய அரசின் கரங்கள் ஓங்கி​யிருப்​பதைக் குறித்தும் அதற்குக் காரணமான அரசமைப்புக் கூறுகள் குறித்தும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுக்​கொண்​டிருக்​கின்றன. இன்னொரு பக்கம் அடிப்படை உரிமைகள் குறித்த பார்வை​களும் விரிவு​பெற்றுக்​கொண்டே இருக்​கின்றன. உரிமை​களுக்கான வரையறை​களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு​களின் வழியாக விசாலமான பார்வை உருவாகி​யிருந்​தா​லும், நடைமுறையில் ஏன் அது சாத்தி​ய​மாக​வில்லை என்ற கேள்விக்கான பதில்களை நாம் கண்டடைய வேண்டி​உள்ளது.
  • அரசமைப்பின் உரிமைகளை உறுதிப்​படுத்த, குடிமைச் சமூகங்​களின் குரலாக ஒலிக்கும் கல்விப்பு​லத்​தினர், இதழாளர்கள், களச் செயல்​பாட்​டாளர்​களின் சுதந்​திரமான இயக்கத்தை அனுமதிக்க வேண்டும். அரசமைப்பால் உறுதிப்​படுத்​தப்​பட்​டுள்ள அடிப்படை உரிமை​களுக்கான தடைக்​கற்​களைக் கண்​டுணர்ந்து, அவற்றைக் களைந்து சமத்துவ ச​மு​தா​யத்தை அடைய, அரசமைப்பு மட்டுமே நம் கையிலுள்ள ஆயுதம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories