- மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்குக் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ள நிலையில், அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், பட்டியல் சாதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சமைத்த உணவைத் தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் எனப் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.சமூகத்தில் நிலவும் சாதி ஆதிக்கத்தின் சாட்சியாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருவது கவலைக்குரியது.
- 2012இல் சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் இம்மாதிரிச் சம்பவங்கள் நடைபெற்றன. ராசிபுரத்தான் காட்டுவளவு என்கிற கிராமத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சத்துணவு ஊழியராக நியமிக்கப்பட்ட பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண், மாணவர்களுக்குச் சமைக்கக் கூடாது என எதிர்ப்பு உருவானது. அப்போதிருந்த மாவட்டக் கல்வித் துறை அதற்குப் பணிந்தது. அவரது சொந்தக் கிராமமான மூக்கானூர் ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு அவரை இடம் மாற்றி உத்தரவிட்டது. அங்கும் அவர் எதிர்ப்பைத்தான் எதிர்கொண்டார்.
- 2018 இல் அவிநாசியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த பாப்பம்மாள் என்கிற ஊழியருக்கும் இதே போல் எதிர்ப்பு உண்டானது. அவர் சமைத்த உணவால் மாணவர்கள் உடல்ரீதியாகப் பாதிக்கப் பட்டதாகத் தலைமை ஆசிரியரே புகார் அளித்தார். 2019இல் மதுரை வலையப்பட்டி அங்கன்வாடி மையத்தில் நியமிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளரும் சமையல் ஊழியரும் இதே போன்ற வன்கொடுமையை எதிர்கொண்டனர்.
- சாதி ஆதிக்கத்துக்குப் பணிந்து, மாவட்டக் கல்வித் துறை அவர்களை இடமாற்றம் செய்தது. தற்போது தூத்துக்குடி அருகிலும் பட்டியல் சாதி சத்துணவு ஊழியரை நீக்க வேண்டும் என்று பெற்றோர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு அந்த ஊழியரின் சாதி காரணமல்ல, அவருடனான தனிப்பட்ட பிரச்சினைதான் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
- பணியிடத்தில் நிலவும் சாதிப் பாகுபாடு குறித்த 2019-2020 அறிக்கை, 79% கிராமப்புறங்களில் பட்டியல் சாதி மக்கள் சாதிப் பாகுபாட்டால் வன்கொடுமையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்கிறது. வரும் தலைமுறையினருக்குச் சமூக ஒழுக்கமும் நற்பண்புகளும் புகட்டப்பட வேண்டிய கல்விக் கூடத்தில், இம்மாதிரிச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலைக்குரிய ஒன்று. மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய பெற்றோருக்கும் பாடம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அரவக்குறிச்சி சம்பவத்தில். நேரடியாகப் பள்ளிக்குச் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர், சாதி ஆதிக்கத்துக்குப் பணியாமல், பட்டியல் சாதிப் பெண்ணை நீக்க வலியுறுத்திய பெற்றோர் மீது வன்கொடுமைச் சட்ட வழக்குப் பதிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதுவரை இந்தப் பிரச்சினையைக் கையாண்ட விதத்திலிருந்து இது மாறுபட்டது; பட்டியல் சாதி ஊழியர்களுக்கு எதிரான வன்கொடுமையைத் தடுக்கும் நடவடிக்கையை எடுத்த மாவட்ட நிர்வாகம் பாராட்டுக்குரியது.
- சனாதனம் குறித்த விமர்சனங்களைப் பொது வெளியில் முன்வைக்கும் அரசியல் தலைவர்கள், ஆட்சிப் பொறுப்பைக் கையில் வைத்திருக்கும்போது இப்படியான இழிவுகள் நிகழும் தருணங்களில் சட்டரீதியில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
- வாக்கு அரசியல் கணக்குகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் தயங்கினால், அது சாதி ஆதிக்க உணர்வுடன் செயல்படுபவர்களுக்கு வலுசேர்ப்பது போலாகிவிடும். சாதி அடிப்படையில் சக மனிதரை இழிவுபடுத்தும் செயலை யார் செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 09 – 2023)