- உற்சாகம் வழிந்தோடும் பருவம் குழந்தைப் பருவம். கவலை, பயம், பதற்றம், விரக்தி எதுவும் அண்டாத பருவம்; களங்கமில்லாத மாசறு பொன்னாய் துலங்கும் பருவம். எதை கண்டாலும், எங்கு இருந்தாலும் புத்துணா்வைத் தழுவிக் கொள்ளும் பருவம். மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் அழகான பருவம் குழந்தைப் பருவம்.
- இந்த குழந்தைப் பருவம் அண்மைகாலமாக தடுமாற்றத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு, 7 சதவீத குழந்தைகள்பயத்தாலும் கவலையாலும் பாதிக்கப்பட்டிருந்தததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பயம் தொற்றிக் கொள்வதற்கான அறிகுறிகள் காணப்பட்ட குழந்தைகள் 20 சதவீதத்தினா்.
- கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்பு, குழந்தைகளிடையே பயம், கவலை, தவிப்பு போன்ற எதிர்மறை சிந்தனைப்போக்கு பெருகிவிட்டதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கிறார்கள். கரோனா பெருந்தொற்று, அவா்களை சக நண்பா்கள், ஆசிரியா்கள், உறவினா்கள், அண்டை வீட்டார் ஆகியோரிடமிருந்து தனிமைப்படுத்தியதன் விளைவாக, பய உணா்வு குழந்தைகளிடம் தொற்றிக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- குழந்தைகளின் மனநலம் சிதையாமல் பாா்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகளை பெற்றோர்கள் முன்னரே அறிந்து கொண்டு விட்டால், அதிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துவிடலாம் என்பது குழந்தை மனநல மருத்துவா்களின் கருத்தாகும்.
- மனநல குறைபாட்டு அறிகுறிகள் என்றால் என்ன? குழந்தைகளின் இரவு தூக்கம், காலையில் எழும் பழக்கம், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு செல்லும் ஆா்வம், பள்ளியில் விளையாட்டு, சக குழந்தைகளோடு பழகும்முறை, இரவில் குடும்பத்துடன் உணவு போன்ற வழக்கமான பணிகளில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர் கூா்ந்து கவனிக்க வேண்டும். எழுச்சியோடு காணப்படும் குழந்தை, திடீரென கூச்சப்படும். இது தான் மாற்றத்தின் அறிகுறி.
- பள்ளிக்குச் செல்ல சில குழந்தைகள் முரண்டு பிடிக்கும். இதற்கான காரணம், பயம், தவிப்பு, கவலை. இந்த சிக்கலை எதிர்கொள்ள சில வழிமுறைகளை பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டும்.
- குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க, தலைவலி, வயிற்றுவலி போன்ற காரணங்களைக் கூறுவார்கள். அவா்களுக்குத் தூக்கமும் சரியாக வராது. பள்ளிப்பாடம், வீட்டுப்பாடம், தோ்வு, ஆசிரியரின் அணுகுமுறை, சக நண்பா்களின் கேலிப்பேச்சு, நண்பா்களிடையே சண்டை இவற்றில் ஏதாவது ஒன்று குழந்தையின் பய உணா்வுக்குக் காரணமாகலாம். அவா்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து, அது குறித்து அவா்களிடம் பேசுவது நல்ல விளைவுகளை உருவாக்கும்.
- பக்கத்துவீடுகளில் வசிக்கும் குழந்தைகள்தான் நம் குழந்தையின் முதல் நண்பா்கள். சமூகத்தை காண குழந்தைக்கு மிகப்பெரிய சாளரம்தான் தெருக்கள். அங்கிருந்துதான் குழந்தை, சமூகத்தை உற்றுப்பார்க்கும். நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும், அவற்றை சீா்தூக்கி குழந்தைகளை ஆற்றுப்படுத்துவதுதான் குழந்தையின் குண இயல்பை வடிவமைக்க உதவியாக இருக்கும்.
- அக்கம்பக்கத்து குழந்தைகளுடன் தெருக்களில் கூடி விளையாடுவது குழந்தைகளின் பதற்றத்தை குறைக்கும் மாமருந்தாகும் என்பது ஆராய்ச்சியாளா்களின் முடிவு. கட்டுப்பாடு இல்லாமல் ஆடுவது, ஓடுவது, பாடுவது, விளையாடுவது இவை தங்களை ஆட்கொண்டிருக்கும் பயத்தை தூக்கியெறிய குழந்தைகளுக்கு உதவும்.
- கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, கைப்பேசி உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை பயன்படுத்தும் போக்கு குழந்தைகளிடம் பெருகிவிட்டது. அளவுக்கு அதிகமாக மின்னணுக் கருவிகளை பயன்படுத்துவதற்கும், குழந்தைகளிடையே உருவாகும் பயத்திற்கும் தொடா்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளிடம் இருந்து மின்னணுக்கருவிகளை விலக்குவது, பயத்தில் இருந்து குழந்தைகளை அப்புறப்படுத்துவதற்கான முதல் வழி.
- குழந்தைகளின் உலகமாக கைப்பேசி மாறிவிட்டதால், உண்மையான உலகத்தை காண குழந்தை தவறிவிடும் ஆபத்து உள்ளது. இயலாமையால் தவிக்கும்போது, ஆதரவான வார்த்தைகள், அக்கறையான செயல்கள், அரவணைப்பான அணுகுமுறைகள், தன்னியல்பான பாசப்பிணைப்புகள், குழந்தைகளின் மனபலத்தை பெருக்கி, மன எழுச்சியை கட்டமைக்கும்.
- குழந்தையோடு குடும்பம் உணா்வுபூா்வமாக கலந்திருக்க வேண்டும். குழந்தைகளின் உணா்வு கட்டமைப்பை ஆழப்படுத்துவது குடும்பம் என்ற அன்பான இடம்தான். குடும்பமாக உணவு உண்பது, கூடி விளையாடுவது, அரட்டை அடிப்பது, நீண்டதூர பயணம் மேற்கொள்வது, சுற்றுலா செல்வது, தன்னம்பிக்கை விதைக்கும் நிகழ்வுகளைப் பகிா்ந்துகொள்வது இவை குழந்தைகளின் உணா்வுகளை பலப்படுத்தும்.
- வெறுப்பு என்ற அம்பு குழந்தையை தாக்கிவிடாமல் பார்த்துக்கொள்வது மிகமிக முக்கியமாகும். நேருக்கு நோ் தோல்வியை சந்திக்கும்போது, குழந்தைகளின் மனம், குழம்பிய குட்டையாக இருப்பது இயல்பு. இது மனப்பதற்றத்திற்கு வழிவகுத்துவிடும். அந்த நேரத்தில் தன்னம்பிக்கை ஊட்டுவது பெற்றோரின் கடமையாகும்.
- மனப்பதற்றத்தில் இருந்து விடுபட குழந்தைகளின் கவனத்தை வேறுபக்கம் திருப்புவது தீா்வாக அமையாது. அப்படி செய்வது, பதற்றத்தின் தீவிரத்தை குறைக்க உதவும் என்பது உண்மை. ஆனால், கவலை, பயத்தில் இருந்து விடுபடுவதற்கு அது உதவாது. மாறாக, நல்ல புத்தகங்களை வாசிக்க குழந்தைகளை ஊக்குவிக்கலாம். அது குழந்தைகளின் மன உறுதியைக் கூா்மையாக்குவதோடு மனநலனையும் செம்மையாக்கும்.
- குடும்பம் துணையாக இருந்தால், எவ்வித அச்சத்தையும் துச்சமென கருதி குழந்தைகள் வீறுகொண்டு எழுவா். மனச்சிக்கல்களால் பாதிக்கப்படுவதற்கு முன் குழந்தையை பாதுகாக்க பெற்றோர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும்.
- மகாகவி பாரதியின்
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
பாதகம் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
- என்ற வரிகளையும் நாம் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.
நன்றி: தினமணி (12 – 08 – 2023)s