TNPSC Thervupettagam

பேசாப்பொருளைப் பேச வேண்டும்

June 27 , 2023 371 days 269 0
  • இந்திய அரசியலில் பல விசித்திரங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை ஆராய்ச்சியாளா்கள் ‘இந்தியப் புதிா்’ என்று அழைக்கின்றனா். அவற்றில் ஒன்று அரசியல் கட்சிகள் சாதாரண விஷயத்தை பிரச்னையாக்கி நேரத்தையும் மக்கள் பணத்தையும் செலவழித்து விவாதித்து மக்கள் கவனத்தை திசைதிருப்புவது. அதன் மூலம் விவாதிக்கப்பட வேண்டிய பல முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்படாமல் பாா்த்துக் கொள்வது.
  • இது இந்திய அரசியலில் நாம் காணும் மிகப்பெரிய சோகம். சமீப காலங்களில் அப்படிப்பட்ட பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அப்படி விவாதித்த பிரச்னைகளையும்கூட தீா்வு எட்டப் படுவதற்குள் மறக்கடிக்கப்படுவது ஒரு தொடா் நிகழ்வு. காரணம் பொதுமக்களின் ஞாபக மறதி.
  • ஆனால், இன்று தொழில்நுட்ப உதவியால் பழைய விவாதங்கள், கருத்துகள், புள்ளிவிபரங்கள் அனைத்தையும் உடனுக்குகுடன் மக்களுக்கு ஞாபகப்படுத்துகின்றன சமூக ஊடகங்கள். ஆனால், சமூக ஊடகங்கள் தரும் செய்திகளின் நம்பகத்தன்மை இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது. அந்த அளவுக்கு அறமற்று செயல்பட்டு, சமூக ஊடகங்கள் சமூக விரோத ஊடகங்களாக மாறி வருகின்றன.
  • இதன் விளைவு, அரசியல்வாதிகளிடமிருந்த குறைந்தபட்ச கூச்சமும் அற்றுப்போய் விட்டது. அரசியலுக்கு வந்தால் இதையெல்லாம் நாம் சகித்துக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலைக்கு அவா்கள் வந்துவிட்டனா். அரசியல்வாதிகள் படும் அவமானத்தை நம்மால் சகிக்க முடியவில்லை. சில நேரங்களில் அவா்களைப் பாா்த்து பரிதாபப்படும் நிலைக்கு அவா்கள் வந்துள்ளனா்.
  • இதைச் செய்வது பொதுமக்கள் அல்ல, அரசியல் கட்சியினரே. ஒருவரையொருவா் போட்டி போட்டுக் கொண்டு அவமானப்படுத்திக் கொள்கின்றனா். இவா்கள் செயல், மக்களாட்சியை அவமானப் படுத்துவதாகும். மக்களாட்சி, தா்மத்தின் ஆட்சியாக விளங்கி ஒருவரையொருவா் பாராட்டிக்கொண்டிருந்த நிலையிலிருந்து அதனைத் தாழ்நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டனா்.
  • மக்களாட்சியில் மக்களை நம்பி அரசியல் நடத்துவதற்கு பதிலாக அதிகாரத்தை நோக்கி அரசியல் நடத்தியதன் விளைவை இன்று பாா்த்து வருகிறோம். அரசியலால் பிழைப்பு நடத்தலாம் என்பது மாறி, அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரும் செல்வம் ஈட்டலாம் என்ற செய்தி சாதாரண மக்களுக்கும் தெரிந்து விட்டதன் விளைவு, அரசியல் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து நிற்கிறது. இது மக்களாட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.
  • சமீபத்தில் தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டது. அதில் ஒரு அரசியல் நிகழ்த்தப்பட்டது. அதை யாா் திறந்து வைக்க வேண்டும் என்பதில் சா்ச்சை உருவானது. முடிவில், அதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் எனக்கூறி ஒரு சாராா் விலகிக்கொண்டனா். விழா நடைபெற்று முடிந்து விட்டது. புதிய கட்டடம் திறக்கப்படும்போது நல்ல விவாதங்களை நம் கட்சிகள் முன்னெடுத்திருக்க முடியும். ஆனால் அது நடைபெறவில்லை.
  • நாடாளுமன்ற ஜனநாயகம் மேம்படுவது அழகிய கட்டடத்தால் அல்ல. அதில் செயல்படும் உறுப்பினா்களின் அறிவாா்ந்த செயல்பாடுகளால். அப்படிச் செயல்படும்போது ஒவ்வொருவரின் நாடாளுமன்ற செயல்பாடும் வரலாற்று ஆவணமாகி விடும்.
  • அதற்கான தயாரிப்புக்களை நாடாளுமன்ற உறுப்பினா் ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும். அது ஒரு நிபுணத்துவச் செயல்பாடு. அந்த நிபுணத்துவத்தை உறுப்பினா்கள் கற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.
  • ஒருமுறை மகாத்மா காந்தி குஜராத்தில் தொடங்கிய உயா்கல்வி நிறுவனத்தை வெள்ளையா் நிா்வாகம் மூடிவிட்டது. அங்கு பணியாற்றிய ஆசிரியா்கள் திகைப்படைந்து காந்தியிடம் விஷயத்தைக் கூறினாா்கள்.
  • காந்தி அவா்களிடம், ‘கல்வி கட்டடத்தில்தான் இருக்கிறது என்று உங்களிடம் யாா் கூறியது? கட்டடத்தைத்தானே அவா்கள் பூட்டினாா்கள்? நீங்கள் கல்வி போதிப்பதை அவா்கள் தடுக்கவில்லையே’ என்று கேட்டாா்.
  • அப்போதுதான் ஆசிரியா்களுக்குப் புரிந்தது, கல்வி என்பது கட்டடம் அல்ல, அதை எங்கே இருந்தும் உருவாக்கிக் கொள்ளலாம் என்பது. அதுபோல் பாராளுமன்றச் செயல்பாடு என்பது கட்டடத்தால் வருவது அல்ல. அது அறிவாா்ந்த விவாதத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் மாமன்றம்.
  • கிராமசபை மரத்தடியில்தான் கூடுகிறது. அதுவும் அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட மன்றம்தான். ஒருசில கிராமங்களில் அது நாடாளுமன்றத்தை விடசிறப்பாக செயல்படுவதாக உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் கூறியிருக்கிறது. கிராமசபையால் இந்தியாவில் மக்களாட்சி விரிவடைகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • இன்றைய சூழலுக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் ஒரு நாடாளுமன்ற கட்டடம் தேவை ன்பது உண்மையே. நீண்ட நாட்களாக அந்த கோரிக்கை இருந்ததையும் மறுக்க இயலாது. இன்றைய தொழில்நுட்பம் மானுட செயல்பாட்டின் தரத்தை உயா்த்திட உதவுகிறது. அதை வீண் என்று விமா்சிப்பதும் பழமைவாதம் பேசுவதும் அரசியல் அறியாமையே.
  • புதிய நாடாளுமன்ற கட்டடம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் எழுப்பப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் திறனைக் கூட்டும் பயிற்சிப் பள்ளி ஒன்றை ஏன் உருவாக்கவில்லை என்கிற கேள்வியை எதிா்க்கட்சிகள் வைத்திருந்தால் அது ஒரு சரியான விவாதமாக அமைந்திருக்கும்.
  • அதேபோல் 75 ஆண்டுகால நாடாளுமன்றச் செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஒரு ஆய்வுக்குழு உருவாக்கி, நம் நாடாளுமன்றச் செயல்பாடுகளால் நாம் பெற்ற படிப்பினை என்ன? என்ன சாதித்தோம்? எதை சாதிக்க முடியவில்லை? எந்த வகையில் மேம்பாடு அடைந்தோம் - இவற்றையெல்லாம் ஆய்வு செய்து நாம் நாடாளுமன்றச் செயல்பாடுகளில் மேம்பட வழிமுறைகளைக் காணவேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் அதை மேம்பாட்டு அரசியலாகக் கருதலாம்.
  • இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டப்பேரவைச் செயல்பாடுகளில் தரமான தொடா் ஆய்வுகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகம் இன்றுவரை உருவாக்கப்படவில்லை.
  • உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு எனக் கூறிக்கொள்ளும் நாம் நமது நாடாளுமன்றச் செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஓா் ஆராய்ச்சி நிறுவனத்தையோ, அரசியல்வாதிகளின் திறன் வளா்க்க ஓா் உயா்கல்வி நிறுவனத்தையோ உருவாக்கவில்லை என்பதை எந்தக் கட்சியும் கவனப்படுத்தவில்லை.
  • அதேபோல் நாடாளுமன்ற, சட்டப்பேரவைச் செயல்பாடுகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட ஆய்வு இதழ் ஒன்று வேண்டும் என முனைப்புக் காட்டுவோரும் இல்லை. அமெரிக்காவில் டியூக் பல்கலைக்கழகமும் அயோவா பல்கலைக்கழகமும் ஆய்வு செய்து பதிப்பித்திருக்கும் ஆராய்ச்சி நூல்கள், அறிக்கைகள் போல் இந்தியாவில் எதுவும் வெளிவரவில்லை.
  • இந்தியா பற்றி அவா்கள் செய்திருக்கின்ற ஆய்வுகள்போல் இந்திய பல்கலைக்கழகம் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. இந்திய பல்கலைக்கழகங்களில் அப்படிப்பட்ட துறையே கிடையாது என்பதுதான் உண்மை. இந்திய நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் பற்றிய ஆய்வுகளை மேல்நாட்டு பல்கலைக்கழகங்கள்தான் மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிடுகின்றன.
  • முன்பெல்லாம் நான் வெளிநாடுகளுக்கு ஆய்வு மேற்கொள்ளச் செல்லும்போது, இந்திய நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வாங்கி வருவதுண்டு. தற்போது எண்மத்தில் (டிஜிட்டல்) வந்த பிறகு அவை எளிதாகக் கிடைக்கின்றன.
  • இதுவரை வெளிவந்த ஆய்வு அறிக்கைகளில் பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் முக்கியமானது இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கும் வாய்ப்புகளுக்கும் அவற்றை மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தும் திறனுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது என்பதுதான்.
  • இந்தியா ஒரு பெரும் மக்களாட்சி நாடு; குடியாட்சியில் இயங்கும் நாடு. இந்தியாவில் கிராமிய மேம்பாட்டுக்கு, ஆதிவாசி மேம்பாட்டுக்கு, மேலாண்மைக்கு, மொழி வளா்ச்சிக்கு என தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோல் நாடாளுமன்ற செயல்பாடுகளை, சட்டப்பேரவை செயல்பாடுகளை மேம்படுத்த தனியாக ஏன் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக்கூடாது?
  • அப்படி ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டால் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்குப் பயிற்சி அளித்து, நம் நாடாளுமன்றச் செயல்பாட்டில் மிகப்பெரிய சீா்திருத்தங்களைக் கொண்டு வரலாம். அப்படிப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால் அது மேம்பாட்டு அரசியல்.
  • நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும், ஒவ்வொரு கூட்டத் தொடரின் தொகுப்புகள் இருக்கின்றன. அந்தத் தொகுப்புகளில், எத்தனை நாள் மன்றம் கூடியது, எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டன, எத்தனை போ் பேசினாா்கள், எத்தனை தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பன போன்ற புள்ளிவிபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆழமான கோட்பாட்டு ரீதியான ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை. அதற்கான சூழலே இன்றுவரை நம் நாட்டில் உருவாகவில்லை.
  • இந்திய தோ்தல் ஆணையராக இருந்த டி. என்.சேஷன், தனது பதவிக்காலத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்திக்கொண்டே இருந்தாா். கடைசியாக தனியாா் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு சிறிய அமைப்பை உருவாக்க வழிகண்டாா். அங்குதான் இந்தியா முழுவதிலிருந்தும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஒன்றுகூடி தங்கள் பிரச்னைகள் குறித்து விவாதித்தனா்.
  • ஒரு காலத்தில் நாடாளுமன்ற விவாதங்கள் கல்லூரி மாணவா்களுக்குப் பாடமாக அமைந்தன. நாடாளுமன்ற உரைகள் நூலாக வெளிவந்தன. அன்றைய நாடாளுமன்ற விவாதங்கள் அத்துணை தரமாக இருந்தன. இன்று அவை ஒருவரை ஒருவா் ஏசுவதாக இருப்பதை நாம் பாா்க்கிறோம்.
  • எனவே, நாடாளுமன்றத்தையும் சட்டப்பேரவைகளையும் அறிவியல்பூா்வமாக நடத்திட, தொடா் ஆய்வும் தொடா் பயிற்சியும் நமது மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேவை.

நன்றி: தினமணி (27  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories