- முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைக்க, மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி இருக்கிறது. பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்திருக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில், 15 நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
- மும்பையில் அரபிக் கடலில் அமைக்கப்பட்டுவரும் சத்ரபதி சிவாஜி சிலைத் திட்டத்துக்கும் இதே போல எதிர்ப்புகள் எழுந்தன. இத்திட்டம் கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்குப் புறம்பானது என விமர்சிக்கப்பட்டது. மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி நடைபெற்ற காலத்தில் இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. முன்னதாக, கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
- அதன்படி கடலோர ஒழுங்குமுறை விதிகளில் கட்டுமானம் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் துறைமுகம், நினைவுச்சின்னம் உள்ளிட்ட சில கட்டுமானங்களை அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சிவாஜி சிலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிரதமரே இந்தக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தார். பேனா நினைவுச்சின்னத் திட்டமும் இதே விமர்சனத்தை எதிர்கொண்டது; மத்திய அரசின் விதியின் திருத்தத்தின் அடிப்படையிலேயே இதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது.
- சட்ட ரீதியில் இதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றாலும் இந்தக் கட்டுமானம் கடலுக்குள் அமையவிருக்கிறது என்பதால் தமிழ்நாடு அரசு கவனத்துடன் செயல்படுவது அவசியம். சிவாஜி சிலைத் திட்டத்துக்கான செலவு ரூ.2,000 கோடிக்கும் அதிகம். ஆனால், இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் கீழ்.
- இது கவனிக்கப்பட வேண்டிய அம்சம். சென்னையைப் பொறுத்தவரை மெரினா கடற்கரையில் வார இறுதி நாள்களிலேயே பல்லாயிரம் பேர் கூடுவார்கள். விடுமுறை / பண்டிகை நாள்களில் கூட்டம் கட்டுக்கடங்காது. நினைவுச் சின்னத்துக்கு இம்மாதிரிக் கூட்டம் வரும்போது கட்டுப்படுத்த முறையான செயல்திட்டங்கள் அவசியம்.
- ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேரை அனுமதிக்கக் கூடாது என்று நிபந்தனையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதுபோல் இயற்கைச் சீற்றமோ விபத்தோ ஏற்படும் நேரத்தில் மக்களை உடனடியாக வெளியேற்றும் மாற்றுத் திட்டமும் வகுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
- கட்டுமானம் அமையவுள்ள பகுதி பங்குனி ஆமைகள் புழங்கும் இடம் எனச் சுற்றுச்சூழல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், ஆமைகள் வருகையின்போது கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபுணர்களின் துணையோடு இதைச் சரியாக அடையாளம் கண்டு செயல்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகும்.
- தேசியக் கடல் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை 2023இன்படி, தமிழ்நாடு எதிர்கொள்ளும் கடல் அரிப்பு 42.7%. மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிகம் கடல் அரிப்புக்கு உள்ளாகும் பகுதியாகத் தமிழ்நாடு இருக்கிறது. இதனால் கட்டுமானப் பகுதியின் கடல் அரிப்பைக் கண்காணித்து அறிக்கை அளிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.மொத்தமாக இத்திட்டத்தைக் கண்காணிக்கவும் நிபுணர் குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மக்களின் பாதுகாப்புக்கும் கடல் உயிரினப்பன்மைக்கும் சவாலான இத்திட்டத்தை செயல்படுத்துகையில் மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (05 – 05 – 2023)