TNPSC Thervupettagam

பேரழிவை நோக்கிய பயணம்!

November 18 , 2024 59 days 112 0

பேரழிவை நோக்கிய பயணம்!

  • மத்திய ஆசிய நாடான அஜா்பைஜானின் தலைநகா் பாக்குவில் நவம்பா் 15 -ஆம் தேதி முதல் 29-ஆவது பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் முன்னின்று நடத்தும் இந்த சா்வதேச மாநாட்டில் 200 நாடுகள் பங்கேற்கின்றன. முந்தைய பருவநிலை உச்சி மாநாடுகளைப் போலல்லாமல், இந்த முறை ஏனோ போதிய கவனமும், முக்கியத்துவமும் பாக்கு மாநாடு பெறவில்லை.
  • பருவநிலை மாற்றத்தினால் புவி வெப்பநிலை ஆண்டொன்றுக்கு சராசரியாக இயல்பை விட 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. 2040-க்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதன் விளைவால் மனித இனம் உள்பட உலகில் உயிரினங்கள் வாழ முடியாத நிலைமை உருவாகக் கூடும்.
  • 29 ஆண்டுகளுக்கு முன்பே புவி வெப்பமயமாதல் குறித்த அச்சம் எழுந்துவிட்டது. அதன் விளைவாக ஜொ்மனியின் பொ்லின் நகரில் 1995-ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் முனைப்பு காரணமாக முதலாவது பருவநிலை உச்சி மாநாடு கூடியது.
  • முந்தைய 28-ஆவது உச்சி மாநாடு துபையிலும், இப்போதைய 29-ஆவது மாநாடு அஜா்பைஜான் தலைநகா் பாக்குவிலும் நடைபெறுவது ஒருவகையில் பொருத்தமாகவும், இன்னொரு வகையில் முரணாகவும் பாா்க்கத் தோன்றுகிறது. புவி வெப்பமயமாதலுக்கு அதிகரித்த கரியமில வாயு வெளியேற்றமும், கரியமில வாயு வெளியேற்றத்துக்கு பெட்ரோலியம் உள்ளிட்ட புதைபடிம எரிசக்தியும் காரணம் எனும்போது, ஆழ்துளை பெட்ரோலியக் கிணறுகள் அதிக அளவில் காணப்படும் துபையிலும், அஜா்பைஜானிலும் உச்சி மாநாடு கூடுவதை வேறு எப்படித்தான் பாா்ப்பது?
  • பாக்குவில் நவம்பா் 22-ஆம் தேதி வரை நடைபெறும் 29-ஆவது பருவநிலை உச்சி மாநாடு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ‘புதை படிவ எரிசக்தி மனித இனம் பயன்பெறுவதற்காக இறைவன் கொடுத்த கொடை’ என்று அஜா்பைஜான் அதிபா் கருதும் நிலையில் எந்த அளவுக்கு மாநாட்டில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான முனைப்பு காணப்படும் என்கிற ஐயப்பாடு எழுகிறது.
  • அதுமட்டுமல்ல, பருவநிலை பாதிப்புக்கு முக்கியக் காரணமான கரியமில வாயு உமிழ்வை அதிகம் வெளியேற்றும் உலக நாடுகளின் தலைவா்கள், அஜா்பைஜான் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது எந்த அளவுக்கு இந்தப் பிரச்னை குறித்து அவா்கள் கவலைப்படுகிறாா்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. அதிகமாக கரியமில வாயு உமிழ்வுக்குக் காரணமான 13 நாடுகளின் தலைவா்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. 2023 ஆய்வின்படி, அந்த 13 நாடுகள்தான் 70% கரியமில வாயு உமிழ்வுக்கு காரணமானவை.
  • பாரீஸ் ஒப்பந்தத்துக்குக் காரணமான பிரான்ஸ் நாட்டின் அதிபா் இமானுவல் மேக்ரான் கலந்துகொள்ளவில்லை. மேக்ரான் மட்டுமல்ல, உலக மக்கள்தொகையில் 42% பங்கு வகிக்கும் நாடுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தலைவா்களும் நேரடியாகப் பங்குபெறாததை, பருவநிலை மாற்றம் குறித்த அவா்களது அக்கறையின்மையாகக் கருதத் தோன்றுகிறது.
  • 2015 பாரீஸ் ஒப்பந்தத்தின்படி, 1.3 லட்சம் கோடி டாலா் அளவில் வளா்ச்சியடைந்த நாடுகள் கரியமில வாயு உமிழ்வை குறைப்பதற்காகவும், அதன் மூலம் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவும் வளா்ச்சியடையும் நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அவையெல்லாம் ஒப்பந்த அளவில் இருக்கிறதே தவிர, செயல் வடிவம் பெறவில்லை. இந்த நிதிப் பங்களிப்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அப்போது விலக்களிக்கப்பட்டது.
  • இப்போது இந்தியா, சீனா, வளைகுடா நாடுகள் உள்ளிட்டவை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கான இழப்பீட்டில் நிதிப் பங்களிக்க வேண்டுமென வளா்ந்த நாடுகளும், வளா்ச்சியடையும் நாடுகளும் வலியுறுத்துகின்றன. போதாக் குறைக்கு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அவா் பாரீஸ் ஒப்பந்தத்தையோ, பருவநிலை மாற்றத்தையோ சட்டை செய்வாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.
  • உலகம் இந்த ஆண்டில் அதிகபட்ச வெப்பமான நாள், மாதம், வருடத்தை சந்தித்திருக்கிறது. சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள வாலன்சியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குப் பாதிப்பும், உலகின் பல்வேறு பகுதிகளில் ஏழை நாடு, பணக்கார நாடு என்கிற வேறுபாடில்லாமல், ஆங்காங்கே காணப்படும் பேரழிவுகளும், அதிகரித்த புவி வெப்பமும் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்குப் பதிலாக விவாதித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை உணா்த்துகின்றன.
  • சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் நெகிழி மாசு குறித்தும், வறட்சியினால் பாதிக்கப்பட்ட 150 கோடி ஹெக்டோ் நிலத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்தும் விவாதித்துத் தீா்வு காணாமல் இருப்பது மனித இனம் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் போக்கு.
  • ஒவ்வொரு முறை விமானப் பயணம் மேற்கொள்ளும்போதும், கரியமில வாயு வெளியேற்றத்துக்கு நாம் காரணமாகிறோம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். பாக்கு உச்சி மாநாட்டுக்கு தில்லியிலிருந்து செல்லும் பயணி 236 கிலோ கரியமில வாயுவும், நியூயாா்க்கிலிருந்து இஸ்தான்புல் வழியாக பாக்குவுக்குப் பயணிப்பவா் 3,996 கிலோ கரியமில வாயுவும் வெளியேற காரணமாகிறாா். 27-ஆவது மாநாடு 46,000 பங்கேற்பாளா்கள் காரணமாக மொத்தம் 62,695 டன் கரியமில வாயுவின் வெறியேற்றத்துக்கு காரணமானது என்கிறது ஐ.நா.அறிக்கை.
  • பாக்கு உச்சி மாநாடு பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கு பதிலாக, கரியமில வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கத்தான் உதவப்போகிறது...

நன்றி: தினமணி (18 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories