TNPSC Thervupettagam

பேராசிரியர் இம்தியாஸ் அகமது (1940-2023) - மதச்சார்பற்ற கொள்கையாளர்

June 28 , 2023 506 days 345 0
  • புகழ்பெற்ற சமூகவியலாளரும் பேராசிரியருமான இம்தியாஸ் அகமது (83), உடல்நலக் குறைவால் ஜூன் 19 அன்று காலமானார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சமூகவியல், மானுடவியல், அரசியல் அறிவியல், இஸ்லாம் தொடர்பான படிப்புகள் எனப் பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இம்தியாஸ் அகமது; அவரது மறைவு, கல்வி, ஆய்வுப் புலங்களில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  • லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்ற இம்தியாஸ், டெல்லி, சிகாகோ பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்டார். 1960இல் லக்னோ பல்கலைக்கழகத்தில் ‘பண்டிட் ஜக்பால்கிருஷ்ணா’ தங்கப் பதக்கத்தை வென்ற அவர், பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் உறுப்பினராக (Fellow) இருந்தவர்.
  • இஸ்லாம் மதத்தில் சாதிகளின் இருப்பு குறித்த அவரது ஆய்வு மிக முக்கியமானது. 1973இல் ‘இந்திய முஸ்லிம்களிடையே சாதி-சமூகப் படிநிலை’ (Caste and Social Stratification among Muslims in India) என்னும் தலைப்பில் தனது ஆய்வு முடிவுகளைப் புத்தகமாக வெளியிட்டார்.
  • யுனெஸ்கோ ஆய்வு மையத்தில், மூத்த ஆய்வாளராகப் பணியாற்றிய பிறகு, டெல்லி கல்லூரியில் சமூகவியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் சமூகவியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
  • அமெரிக்காவில் மிசெளரி பல்கலைக்கழகம், பாரிஸில் உயர் படிப்புகளுக்கான கல்வி நிறுவனம், கனடாவில் யார்க் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அகதிகள் தொடர்பான படிப்புகளுக்கான கல்வி நிறுவனம், ஷெர்ப்ரூக் பல்கலைக்கழகம், இத்தாலியில் உள்ள அமைதிக்கான மக்கள் முன்னெடுப்புகளின் சர்வதேசப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார்.
  • ஆய்விதழ்களில் மட்டுமல்லாமல், வெகுஜன இதழ்களிலும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது ஆய்வுகள் அறிவுப்புலத்தில் பெரும் தாக்கம் செலுத்தியவை. கள ஆய்வுகளே உண்மை நிலையை வெளிக்கொணரும் என்பதில்அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
  • இம்தியாஸ் அகமது மதச்சார்பற்ற கொள்கையாளர். இந்துத்துவ அரசியலின் வளர்ச்சி குறித்த காத்திரமான விமர்சனங்களை முன்வைத்த அவர், சிறுபான்மைச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் விமர்சித்தார். ஆய்வு மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார்.
  • புகழ்பெற்ற அறிவுஜீவிகள் பலர் அவரது மாணவர்கள். நட்பார்ந்த முறையில் பழகுவதுஅவரது தனித்தன்மை என அவருடன் பணிபுரிந்த சக பேராசிரியர்களும், அவரிடம் பயின்ற மாணவர்களும் நினைவு கூர்ந்திருக்கின்றனர்.

நன்றி: தி இந்து (28  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories