- சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் 29 ஆண்டுகள் பணியாற்றி துறைத் தலைவராக ஓய்வு பெற்றவர் பேராசிரியர் வீ.அரசு. அவரது ஆய்வு, இலக்கிய, எழுத்துப் பங்களிப்பின் பரப்பு மிகவும் விரிவானது.
- சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் ஆய்வுப் பட்டங்களை நிறைவுசெய்தவர். மாணவர்களை உயர்நிலைக்கு வளர்த்தெடுப்பதில் மிகுந்த கரிசனம் காட்டிவந்தார். வீ.அரசுவின் பல்கலைக்கழக வாழ்வு என்பது அவரையும் அவரது மாணவர்களையும் பிரிக்கமுடியாத ஒன்று. அவரிடம் பயின்ற 49 முனைவர் பட்டமாணவர்களில் பெரும்பாலானோர் சமூக ரீதியில் பெரிய வாய்ப்புகளை அதுவரை பெற்றிராதவர்கள்.
- பேராசிரியர் கா.சிவத்தம்பியுடன் இணைந்து புதிய கல்லூரிப் பாடத்திட்டத்தை அவர் உருவாக்கியபோது அதைத் தமிழ் இலக்கியப் படிப்பாக இல்லாமல் தமிழ்ச் சமூகம், பண்பாட்டு வரலாற்றைஅடிப்படையாகக் கொண்டதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். இதுவரை தமிழ்ப் படிப்பில் இடம்பெறாத ஊடகங்கள் குறித்த விரிவான படிப்பு, பயிற்சி, நடைமுறை என அதை வடிவமைத்தார்.
- பொதுவாக தொகுப்பாசிரியர் பணி குறித்துப் பொதுவெளியில் மேலோட்டமான புரிதலே நிலவுகிறது. ஆனால், வீ.அரசுவின் பணி வெறுமனே தொகுப்பதல்ல. மாறாக, எடுத்துக்கொண்ட பொருண்மை குறித்த திறனாய்வோடு அவற்றைப்பதிப்பிப்பது அவரது தனித்துவம். பதிப்பிக்கப்படும் ஆளுமைகளின் பல்வேறு பரிமாணங்களையும் இந்தத் திறனாய்வு மூலம் எளிதாகக் கடத்திவிடுவார்.
- அந்த வகையில், பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் ப.ஜீவானந்தத்தின் நூற்றாண்டு நிறைவின்போது அவரது ஆக்கங்கள் அனைத்தையும் இரண்டு தொகுதிகளாக (சுமார் 3,000 பக்கங்கள்) உருவாக்கிப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டு வெளியிட்டார். 1937 ‘ஜனசக்தி’ இதழ் தொடங்கியது முதல் 1963 ஜீவா மறையும்வரை உள்ள இதழ்த் தலையங்கங்கள் தொகுப்பின் பதிப்பாசிரியரும் இவரே.
- சென்னை லெளகிகச் சங்கம் 1878-1888 காலகட்டத்தில் வெளியிட்ட ‘தத்துவ விவேசினி’ இதழ்களையும், அச்சங்கம் ஆங்கிலத்தில் நடத்திய ‘The Thinker’ என்கிற இதழ்த் தொகுப்பையும் பொருண்மை வாரியாக வரிசைப்படுத்தித் தமிழில் நான்கு தொகுதிகளாகவும் ஆங்கிலத்தில் இரண்டு தொகுதிகளாகவும் இவர் பதிப்பித்துள்ளார். மேலும், 1878இல் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் என்பவர் எழுதிய ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி’ என்ற நூல் வெளிவந்தது. வெங்கடாசல நாயகரின்அனைத்து ஆக்கங்களையும் தொகுத்து ‘அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு’ என்ற நூலையும் பேராசிரியர் பதிப்பித்துள்ளார்.
- மேலும், வ.உ.சி.யின் 13 நூல்களைத் தொகுத்து, ‘வ.உ.சி. நூல் திரட்டு’ எனும் தலைப்பில் 2001ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். வ.உ.சி. அவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய தமிழ்ப் பணிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நூல் திரட்டு அமைந்திருந்தது. இவை தவிரவும், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள், மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆக்கங்கள், பேராசிரியர் வையாபுரியாரின் நூற்களஞ்சியம் (ஏழு தொகுதிகள்) ஆகியவற்றின் தொகுப்புப் பணியிலும் வீ.அரசுவின் பங்களிப்பு கணிசமானது.
- புதுமைப்பித்தனின் கதைகளைத் தொகுத்து மூன்று தொகுதிகளாக 2005இல் வெளியிட்டார். புதுமைப்பித்தனின் பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் 102 கதைகளைப் பதிப்பித்து, அதுசீர் வாசகர் வட்டம் சார்பாக மக்கள் பதிப்பாகவெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு’ எனும் தலைப்பில் ஐம்பெரும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளையும் பேராசிரியர் வீ.அரசு தொகுத்தளித்துள்ளார்.
- கவிஞர் தமிழ்ஒளியின் கடிதங்களைத் தொகுத்துள்ளார். இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி, கோ.கேசவன்ஆகிய ஆளுமைகள் குறித்து ஆய்வு நூல்களைச் சாகித்திய அகாடமி மூலம் வெளியிட்டுள்ளார். தமிழ்ச் சிறுகதைகள், தமிழியல் ஆய்வு, அச்சுப் பண்பாடு, தமிழ் இலக்கியக் கோட்பாடு, தமிழ்க் கவிதை வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 150 கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் காலவரிசையிலான பதிப்புகள், தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளின் அனைத்து நூல்கள், தமிழ்ச் சமூக வரலாறு குறித்த ஆங்கில நூல்கள், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் சார்ந்த மூல நூல்கள், தொல்காப்பியத் துறை சார்ந்த நூல்கள், அகராதிகள் எனப் பல்வேறு துறைசார்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அவரது இல்ல நூலகமான ‘கல்மர’த்தில் உள்ளன.
- பெரியார் கருத்துகள், போராட்டங்களை மார்க்சியத்தோடு இணைத்து வினையாற்ற வேண்டியதன் தேவை குறித்தும் வீ.அரசு தன் எழுத்துகள் வழி விவாதித்துள்ளார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் சாதியின் மேலாதிக்கத்தை எதிர்கொள்ள இத்தகைய இணைவு முக்கியம் என்பதாக அவரது நிலைப்பாடு உள்ளது. அறிவுத்தளத்தில் பிற்போக்குக் கருத்துகள் திணிக்கப்பட்டுவரும் அவலச் சூழ்நிலையில், பேராசிரியர் வீ. அரசு போன்றவர்களின் இருப்பு, செயல்பாடு மிகவும் பொருத்தப்பாடு மிக்கதாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 05 – 2024)