TNPSC Thervupettagam

பேரிடர் நிவாரண நிதியில் அரசியல் வேண்டாம்!

February 24 , 2025 6 hrs 0 min 9 0

பேரிடர் நிவாரண நிதியில் அரசியல் வேண்டாம்!

  • அண்மையில் தேசியப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் புதுச்சேரியும் விடுபட்டுள்ளன. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு துறைகள் மூலமாக நிவாரணம் அளிப்பது தமிழகத்தில் இன்னும் நிறைவடையவில்லை. இந்தச் சூழலில் இத்தகைய போக்கு இழப்பின் தாக்கத்தை அதிகரிக்கும்.
  • தமிழகம் ஏற்கெனவே பல இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டிருந்தாலும், ஃபெஞ்சல் புயல் நிகழ்வு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்தது. 2024 நவம்பர் 14இலேயே இந்தியக் கடலின் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்தமாக உருவாகி, இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்துப் புயலாக வலுப்பெற்ற ஃபெஞ்சல், கணிக்க முடியாத வகையில் எல்லோரையும் திணறவைத்தது.
  • நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய நாள்களில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் - வெள்ளத்தால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 40 பேர் உயிரிழந்தனர். டிசம்பர் 3 நிலவரப்படி, 9,576 கிமீ நீளத்துக்குச் சாலைகளும் 1,847 சிறு பாலங்களும் சேதமடைந்திருந்தன; 2,416 குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தன; 721 வீடுகள் சேதமடைந்தன. 963 மாடுகள் உயிரிழந்திருந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் 80,520 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தன.
  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.6,675 கோடி நிவாரணத்தொகையும் அதில் இடைக்காலத் தொகையாக ரூ.2,000 கோடியும் மத்திய அரசிடம் கேட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த மத்தியக் குழு ரூ.944.80 கோடி வழங்க ஒப்புதல் அளித்தது. பாதிப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பின்னர், கூடுதல் உதவி அளிக்கப்படும் எனவும் கூறியது.
  • ஆனால், தற்போது மத்திய அரசின் கூடுதல் நிதியான ரூ.1,554.99 கோடி ஆந்திரம், தெலங்கானா, ஒடிஷா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை அல்லது மனிதரால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான உதவிகள், நிவாரணம், மறுகுடியேற்றம் போன்றவற்றை மேற்கொள்ள ‘பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005’ வழிவகை செய்கிறது.
  • இதன்படி, மாநில அரசு ‘பேரிடருக்கான மாநில நிவாரண நிதி’ மூலம் இழப்பீடு வழங்கும். இதில் 75 சதவீதம் மத்திய அரசு வழங்குவதாகும். மாநிலப் பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லையெனில், பாதிக்கப்பட்ட மாநிலத்துக்குத் தேசியப் பேரிடர் நிவாரண நிதி அளிக்கப்பட இச்சட்டத்தின் 46ஆம் பிரிவு வழிவகுக்கிறது. பேரழிவுகளின்போது மாநிலங்கள் கைவிடப்படாமல் இருப்பதையும் மத்திய அரசின் அரவணைக்கும் கடமையை உறுதிப்படுத்துவதையுமே இந்தச் சட்டம் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது எனலாம்.
  • தமிழகம் அடுத்த கட்ட நிவாரண நிதியை எதிர்பார்த்திருந்த நிலையில், அது மறைமுகமாக மறுக்கப்பட்டிருப்பது, தமிழக அரசுக்கான சிக்கல் மட்டுமல்ல; பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் முடிவும்கூட. கேரளம் போன்ற மாநிலங்களும் இந்தக் கூடுதல் நிதி அறிவிப்பில் விடுபட்டுள்ளன. பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்கிற விமர்சனத்தையும் இது தொடரவே வழிவகுக்கிறது.
  • மத்திய அரசும் மாநில அரசுகளும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒத்திசைவுடன் செயல்படும் சூழல், இந்திய அரசியல் வரலாற்றில் அரிதான ஒன்றுதான். ஆனால், இயற்கைப் பேரிடர்களின்போதும் அதற்குப் பிறகான மீட்சி நடவடிக்கையிலும்கூட மாநில அரசுகள் தனித்து விடப்படுவது ஆரோக்கியமானதல்ல. தமிழகம், கேரளம், புதுச்சேரி போன்றவற்றுக்குப் பாரபட்சம் இன்றிக் கூடுதல் நிதி அளிக்க வேண்டும். இதில் அரசியல் மனமாச்சரியங்களுக்கு இடம் அளிக்கக் கூடாது!

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories