TNPSC Thervupettagam

பேரிடர் நிவாரணங்கள் யாசகம் அல்ல

January 3 , 2024 198 days 163 0
  • பேராசை கொண்ட மனித சமூகத்தின் ஒரு பகுதி சுற்றுச்சூழலை நாசம் செய்யும்போது, ஒருகட்டத்தில் இயற்கை இடர் செய்யத் தொடங்குகிறது. இயற்கையின் சுபாவம் இப்போது, தாமே பேரிடர்களை உருவாக்குவதாகிவிட்டது. 1970 முதல் 2021 வரை இந்தியாவில் 573 பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. 1,38,377 பேரின் உயிரிழப்பும், 430 கோடி டாலர் பொருளிழப்பும் ஏற்பட்டுள்ளதாக .நா. அமைப்பு சமீபத்தில் உலக வானிலை மாநாட்டில் தெரிவித்தது. 2023இல் நிலைமை இன்னும் மோசமானது.

பேரிடர் புகட்டிய பெரும்பாடம்

  • 2023 டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டைத் தத்தளிக்கச் செய்தது இயற்கைப் பேரிடர். டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உலுக்கியெடுத்தது. டிசம்பர் 17, 18 தேதிகளில், பெயர்சூட்டப்படாத ஒரு பேய் மழையை வளிமண்டலச் சுழற்சிகள் மூலமே இயற்கை நடத்தியது.
  • தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள் நிர்மூலமானது. ஊழிக்காலத்தின் அழிவோ இது என அப்பகுதி மக்கள் தவித்துப்போயினர். ஓர் ஆண்டின் முழு மழையை ஒரே நாளில் அவர்கள் பெற்றனர்.
  • காயல்பட்டினத்தில் 93 செ.மீ., திருச்செந்தூரில் 67 செ.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 61 செ.மீ., என அங்கு மழை நீர்த்தாரைகளைக் குண்டுகளாகப் பொழிந்தது. 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் சிக்கின. எல்லாவற்றையும் தாண்டி இந்த இயற்கைப் பேரிடர் ஒரு பெரும்பாடத்தைப் புகட்டியிருக்கிறது.
  • டிசம்பர் 17, 18 தேதிகளுக்கான பேய் மழை எச்சரிக்கையை, சென்னை வானியல் ஆய்வு மையம் 17.12.2023 அன்றுதான் வெளியிட்டதாகத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. தகவல் அறிந்து தப்புவதற்கு மக்களுக்குப் போதிய அவகாசம் இல்லை. பெரும்பாதிப்புக்கு இதுவும் காரணம்.
  • காலநிலையைக் கணிக்க ரேடார் டாப்ளர் கருவிகளுடன் வளிமண்டல அடுக்குகளைக் கண்காணிக்கும் நவீன பலூன் கருவிகள், செயற்கைக்கோள் வழங்கும் தரவுகள் தருவிக்கப்பட வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

உரிய சட்டத்திருத்தம் தேவை

  • தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை. இச்சட்டம் இயற்கைச் சீற்றங்களை அவற்றின் தன்மைகளைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கிறது: 1. மாவட்ட அளவில் கையாளப்படும் பேரிடர்; 2. மாவட்ட மற்றும் மாநில அளவில் கையாளப்படும் பேரிடர்; 3. மத்திய-மாநில அரசுகளால் இணைந்து கையாளப்படும் பேரிடர்.
  • தேசியப் பேரிடர் நிதி மத்திய அரசின் மேலாண்மையிலும், மாநிலப் பேரிடர் நிதி என்பது மாநில அரசு மத்திய அரசிடம் நிதி பெற்றும் பகிரப்படுகிறது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் பகுதி 7.1, பேரிடர் கடும் தன்மையிலானது என்று மத்தியக் குழு அறிவித்த பின் தேசியப் பேரிடர் நிதியிலிருந்து உடனே உதவுவதை வலியுறுத்துகிறது.
  • பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 46ஆவது பிரிவு மீட்பு நிதி உருவாக்கம், ஒதுக்கீடு குறித்துச் சில நியதிகளைக் கூறுகிறது. பேரிடர் நிதி மேலாண்மைக்காக 2010இல் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் விதி3.1 இதன் பகிர்வை வகை செய்கிறது.
  • தேள் கடிக்கு விஷம் என்று சிகிச்சை தர ஆய்வகத்துக்குப் போக வேண்டியதில்லை. அதற்குள் நோயாளியின் உயிர் போய்விடும். அது இயற்கைப் பேரிடருக்கும் பொருந்தும். அதற்கான சட்டத்திருத்தங்களே தேவை.

நிதி உதவியில் இழுபறி

  • பேரிடர் நிதி என்பது மத்திய-மாநில அரசுகளின் குழாயடிச் சண்டையல்ல. அதுவும் மக்களின் வரிப்பணம்தான். மத்திய அரசு 75%, மாநில அரசு 25% பங்களிப்பில் மாநிலப் பேரிடர் நிதி உருவாகிறது. மத்திய அரசுக்கு மாநில அரசு ஒரு ரூபாய் கொடுத்தால், மாநில அரசுக்குத் திரும்பக் கிடைப்பது 29 பைசாதான்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசிடமிருந்து மாநிலப் பேரிடர் நிதிக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.900 கோடி ஆகும். 15 ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, பேரிடர்களால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்குத் தேசியப் பேரிடர் மேலாண்மை நிதி வழங்க வேண்டும்.
  • இதற்காகத் தேசியப் பேரிடர் மேலாண்மை நிதி ரூ.1,60,153 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது தேசியப் பேரிடர் ஆணையத்தில் போதிய நிதி இல்லை என்கின்றனர். சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பையும் தமிழ்நாடு முதலமைச்சரும் மத்திய நிதியமைச்சரும் மத்தியக் குழுவினரும் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
  • தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்து நிதியுதவி தர கோரிக்கை விடுத்துள்ளார். பாதிப்புக்கான உதவிக்கு தமிழ்நாடு அரசு ரூ.21,700 கோடி மத்திய அரசிடம் கேட்கிறது. இதுவரை மத்திய அரசிடமிருந்து ஒதுக்கீடு விவரம் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1,000 கோடிக்கு நிவாரணத் தொகுப்பைத் தமிழ்நாடு அரசு 30.12.2023 அன்று அறிவித்துள்ளது.
  • மத்தியிலும் மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆண்டாலும் தமிழ்நாடு நிதியுதவி பெறுவதில் பெரும் தடங்கல் நிலவுகிறது. உதாரணமாக, 2011 தானே புயலின்போது ரூ.5,249 கோடி நிதியுதவி வழங்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டது; கிடைத்தது ரூ.500 கோடிதான். 2015 பெருவெள்ளத்தின்போது தமிழ்நாடு அரசு ரூ.25,912 கோடி கேட்டது; வழங்கப்பட்டது ரூ.2,195 கோடிதான்.
  • 2016 வார்தா புயல் பாதிப்புகளுக்காகத் தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.22,573 கோடி; கிடைத்தது ரூ.266 கோடிதான். 2017 ஒக்கி புயலின்போது தமிழ்நாடு அரசு ரூ.3,255 கோடி கேட்ட நிலையில், மத்திய அரசு வழங்கியது வெறும் ரூ.133 கோடிதான். அதேபோல 2018 கஜா புயலைத் தொடர்ந்து, ரூ.15,000 கோடியைத் தமிழ்நாடு அரசு கேட்டபோது கிடைத்தது ரூ.1,146 கோடிதான்.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசுக்கு ஏராளமான வரி செலுத்தினாலும் குறைந்த வரி கொடுக்கும் மாநிலங்களுக்குக் கிடைக்கும் அளவு உதவி கிடைப்பதில்லை. மத்தியப் பிரதேசம் ரூ.3,000கோடி ஜிஎஸ்டி செலுத்தி ரூ.1,000கோடி ஒதுக்கீடு பெறுகிறது.
  • உத்தரப் பிரதேசம் ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி செலுத்தி ரூ.9 லட்சம் கோடிக்குத் திரும்ப வாங்குகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசுக்குத் தமிழ்நாடு செலுத்திய ஜிஎஸ்டி ரூ.5 லட்சம் கோடி ஆகும். ஆபத்துக்கு மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றது ரூ.2 லட்சம் கோடிதான்.
  • முடியாட்சியில்கூடப் பாதிப்புக்கு மக்கள் நிவாரணம் பெற்றனர். முதலாம் குலோத்துங்கன் இயற்கைச் சீற்றங்களில் வரியைத் தவிர்த்துசுங்கம் தவிர்த்த சோழன்என அழைக்கப்பட்டான். வெள்ளையர்கள் ஆட்சியிலும் இத்தகு நிவாரணம் பெற்ற தரவுகள் உண்டு.
  • இயற்கைப் பேரிடர்களில் சிக்குண்டு மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வருவோருக்குக் கொடுக்கப்படுவது யாசகமல்ல. அவர்கள் செலுத்திய வரியின் ஒருபகுதிதான். ஆள் வோர் அதை மறக்கலாகாது!

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories