TNPSC Thervupettagam

பேரிடர்களை வெல்வோம்

February 25 , 2024 183 days 190 0
  • ஆண்டுதோறும் 21.5 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) மக்கள் அகதிகளாகிவருகின்றனர். இதில் இயற்கைப் பேரிடரால் அகதிகளாக மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதாக ஐ.நா. சபையின் அகதிகளுக்கான ஆணைய அறிக்கை தெரிவிக்கின்றது.
  • கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் உலகின் 125 நாடுகளிலிருந்து 17.2 மில்லியன் மக்கள் இயற்கைப் பேரிடரால் அகதிகளாக வெளியேறியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இயற்கைப் பேரிடர்கள் போரை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
  • அகதிகளாக இடம்பெயர்பவர்களில் 18 வயதுக்குட்பட்டவர்களே அதிகளவில் உள்ளனர். ஐ.நா. சபையின் பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை, உலகில் பேரிடர்களின் எண்ணிக்கை 2030 வாக்கில் இப்போதைவிட 30 மடங்கு உயரக்கூடுமென எச்சரிக்கிறது.
  • 2022-இல் உலகில் ஏற்பட்ட பேரிடர்களால் 185 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் பேரிடர்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு 223.8 மில்லியன் ஆகும். 2023 பிப்ரவரி 18-இல் பிரேஸில் நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
  • இதற்கு காரணம், எதிர்பார்க்காத வகையில் அங்கு 24 மணி நேரத்தில் பெய்த 633 மி.மீ. மழைப்பொழிவே ஆகும். இந்தப் பேரிடர் சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். 59 பேர் காணாமல் போய்விட்டனர். 2022-இல் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து 5 மில்லியனுக்கும் மேலான மக்கள் வெளியேறியுள்ளனர்.
  • 2023-இல் துருக்கி, ஆப்கானிஸ்தான் மால்வி, காங்கோ போன்ற நாடுகளில் அதிகளவு பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 14 மில்லியன் மக்கள் பாதிக்கபட்டனர். இது அந்நாட்டின் மக்கள்தொகையில் 16% ஆகும். அதே ஆண்டில் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 8,000 பேர் உயிரிழந்தனர்.
  • லிபியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 4,000 பேர் இறந்தனர். 10,000 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் 1,000 பேர் படுகாயமடைந்தனர்.
  • பேரிடர்களில், வறட்சியின் தாக்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதிப்பதாக உள்ளது. பசி, பட்டினி உணவுப் பற்றாக்குறை என பல பிரச்னைகளுக்கு வறட்சி அடித்தளமாக அமைகிறது.
  • கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீனாவின் ஒரு பகுதியில் ஏற்பட்ட கடும் வெப்பமும் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட குறைவான மழைப்பொழிவும் அந்நாட்டை தேசிய வறட்சி நாடாக அறிவிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டன.
  • அந்நாட்டில் ஏற்பட்ட கடும் வெப்பத்தால் 34 மாவட்டங்களில் உள்ள 66 ஆறுகள் வறண்டுவிட்டன. ஐந்து மில்லியன் மக்கள் வேறு இடங்களுக்கு வெளியேறிவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கினறன. இத்துயரத்திற்கு, முக்கியக் காரணம் பூமியின் வெப்ப அலை உயர்வே ஆகும்.
  • கடந்த 2022 ஆம் ஆண்டு உலகெங்கும் அதிக வெப்பஅலை தாக்கம் நிறைந்த ஆண்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 53,688 காட்டுத்தீ பேரிடர் நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 2.61 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகிவிட்டது என்று புள்ளிவிவரங்கள் தெரிக்கின்றன.
  • பேரிடர் என்பது முன்கூட்டியே கணிக்க முடியாத ஒன்று. அறிவியலையும் ஏமாற்றிவிடும் இயல்புடையது. கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 95 செ.மீ. அளவிலான மழைப்பொழிவு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொழிந்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் இதே நிலை உருவானது.
  • புவி வெப்ப நிலை உயர்ந்து வருவதால் 2050-ஆம் ஆண்டு வாக்கில் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். கடல் மட்ட உயர்வு, தீவிரப் பேரிடர் வகையைச் சேர்ந்தது.
  • கடல் மட்ட உயர்வால் வங்கதேசத்தின் 17% நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கக்கூடும் என்றும், இதனால் 20 மில்லியன் மக்கள் அகதிகளாக மாறும் நிலை உருவாகும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதே போல் ஆஸ்திரேலியாவில் 1.2 மில்லியன் மக்கள் கடல் மட்ட உயர்வால் இடம்பெயர்வார்கள் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • காலநிலை மாற்றம் எனும் பேரிடர் தற்போது நம்மை அச்சுறுத்தி வருகின்றது. மிதமிஞ்சிய வெப்பம், மிதமிஞ்சிய குளிர், பருவம் தவறிப் பெய்யும் மழை போன்ற புதிய நிகழ்வுகளை நாம் சந்தித்து வருகின்றோம். இதற்கு முக்கியக் காரணம் வளிமண்டல கரியமிலவாயு அதிகரிப்பே ஆகும்.
  • சமீபத்தில் துபையில் நடந்த பருவநிலை மாநாட்டில் உலகளாவிய கார்பன் உமிழ்வை 2050-க்குள் பூஜ்ய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே முக்கியத் தீர்மானமாக அமைந்தது.
  • ஐ.நா. சபையின் பேரிடர் அபாயக் குறைப்புக் குழுவின் உதவி தலைமைச் செயலர் மாமி மிக்டோரி, "பேரிடர்களைக் குறைக்க வேண்டுமென்றால் இயற்கையை காக்க வேண்டும் என்ற உணர்வு மனிதர்களுக்கு ஏற்பட வேண்டும்.
  • இயற்கைக்கு எதிரான செயல்களை செய்யாமல் இருப்பதும் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை தடுப்பு வழிமுறைகளை அனைவரும் அறிந்துவைத்திருப்பதும் மிகவும் அவசியமாகும்' என்கிறார்.
  • இதற்கேற்ப சென்ற ஆண்டு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது ஏற்படும் பெருங்காற்று மற்றும் பெரிய அலைகளின் வேகத்தைத் தடுக்க ஒரு கோடி பனைவிதைகள் விதைக்கப்பட்டன.
  • இவை வளர்ந்தபின் பனைமரங்கள் கடலோரப் பகுதிகளுக்குத் தடுப்பு அரணாக அமையக்கூடும். இது பேரிடரை எதிர்கொள்ள மேற்கொண்ட சிறப்பான மனித முயற்சியாகும். மேலும் இத்திட்டம் பேரிடர் மேலாண்மையின் பேரிடர் தணிப்பு நடவடிக்கையாகவும் உள்ளது.
  • பேரிடர்களை குறைப்பதற்கான ஒரே வழி இயற்கையை காப்பதுதான். இதனை மனிதகுலம் உணர்ந்தால் இயற்கைப் பேரிடர் குறித்த அச்சத்திற்கு இடமில்லை.

நன்றி: தினமணி (25 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories