- உள்துறை அமைச்சர், “இந்திய வரலாற்றை முறையாகவும் போற்றத்தக்க வகையிலும் புதிதாக எழுத வேண்டும்” என்று புதுதில்லியில் கடந்த நவம்பரில் பேசியபோது வரலாற்று அறிஞர்களைக் கேட்டுக்கொண்டார். “இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளை 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட மன்னர் பரம்பரைகள் பற்றியும், பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிய - அந்தந்தப் பகுதி மக்களால் மிகவும் அறியப்பட்ட - முன்னூறு தியாகிகளைப் பற்றியும் வரலாற்றில் இடம்பெறச் செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
இடம்பெறாத முஸ்லிம் வம்சம்
- அமித் ஷா வேண்டுகோளுக்கு உடனே செவிசாய்த்தது ‘வரலாற்று ஆய்வுகளுக்கான இந்தியப் பேரவை’ (ஐசிஎச்ஆர்); இது ஒன்றிய அரசின் நிதியில் இயங்குவது, அதன் கட்டளைக்கேற்பச் செயல்படுவது. ‘சாதனை அளவாக மூன்றே வாரத்துக்குள் புதுதில்லியில் மாபெரும் வரலாற்றுக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டது ஐசிஎச்ஆர்’ என்று ‘தி பிரிண்ட்’ இதழ் பிப்ரவரி மாதம் செய்தி வெளியிட்டது. ‘போற்றுதலுக்குரிய இடைக்கால இந்தியா: எட்டாவது நூற்றாண்டு முதல் பதினெட்டாவது நூற்றாண்டு வரையில் ஆண்ட, அறியப்படாத இந்திய அரச வம்சங்கள்’ என்ற தலைப்பில் கண்காட்சி அமைந்திருந்தது. சோழர்கள், காகதீயர்கள், மராட்டியர்கள், விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் என்று பலரும் அதில் இடம்பெற்றிருந்தனர். முஸ்லிம் அரச வம்சத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பது வியப்பை அளிக்கவில்லை.
- சர்க்காரால் (அரசு) நடத்தப்படும் நிறுவனம் என்பதால் அது எப்போதுமே ஆள்வோரின் அரசியல் முன்னுரிமைகளுக்கு ஏற்பவே செயல்படும். காங்கிரஸ் கட்சி ஆண்டபோது மார்க்ஸியச் சார்புள்ள இடதுசாரி - தேசியவாதிகள் குழு வரலாற்றை எழுதியது. இந்தக் கடந்த கால செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி, எதிர் திசையில் வரலாற்றை எழுதும் செயல்களை நியாயப்படுத்துகின்றனர் இப்போதைய அரசின் ஆதரவாளர்கள்.
- அவர்களுடைய விமர்சனங்களிலும் ஏற்கத்தக்கவை இல்லாமல் இல்லை; ஆனால், வரலாற்றை எழுதுவதில் மார்க்ஸியர்களாக இருந்தாலும், அவர்களில் பலர் கடைப்பிடித்த தீவிரமான ஆராய்ச்சி நெறிகளைப் புறந்தள்ளிவிட முடியாது. வலதுசாரி இந்துத்துவர்கள் எழுதும் வரலாறுகளில் இந்த ஆய்வு நெறிகள் பெருமளவு பின்பற்றப்படுவதில்லை. நம்முடைய ஆகச் சிறந்த வரலாற்றாசிரியர்கள், வரலாற்று ஆய்வுக்கான இந்தியப் பேரவையின் (ஐசிஎச்ஆர்) கீழ் என்றுமே தங்களுடைய பணிகளைச் செய்ததில்லை.
- அவர்கள் பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார்கள். ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்ந்தார்கள், தாங்களாகவே புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதினார்கள். அவர்கள் பலதரப்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை எழுதினார்கள், அதற்குப் பல்வேறு மூலங்களிலிருந்து தகவல்களை எடுத்துக்கொண்டார்கள், எந்த அரசியல் கட்சியி்ன் செயல்திட்டத்துக்கும் இணக்கமாக அவர்கள் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியதே இல்லை. வரலாற்றை எழுதிய அவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள், யார் மூலமாவது பதவிபெற்று ஊடுருவியர்கள் அல்லர். அவர்களில் சிலர் மார்க்ஸியவாதிகளாகவும் இருந்தனர், பெரும்பாலானவர்கள் அப்படியல்ல.
மூன்று மையக் கோட்பாடுகள்
- இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அடுத்த பல பத்தாண்டுகளில், வரலாறு எப்படி எழுதப்பட்டது என்ற ஆய்வு குறித்துப் பிறகு விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் மிகவும் ஆவலுடன் வரலாற்றைத் திருத்துவதைப் பற்றி மட்டும் எழுதி நிறுத்திக்கொள்கிறேன். கடந்த கால இந்திய வரலாற்றை எழுத அல்லது படிக்க நினைப்பவர்களிடம் இன்றைய ஆட்சியாளர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் அவர்கள் சொன்னவற்றைத் தொகுத்துப் பார்த்தால், ‘இந்துத்துவ வரலாறு’ என்பது மூன்று மையக் கோட்பாடுகளைக் கொண்டது. அவை என்னவென்று பார்ப்போம்:
- பண்டைக் கால வரலாற்றை எழுதுவதாக இருந்தால், உலகின் பிற நாடுகளைவிட – குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்காவைவிட – மெய்யியல், மொழி, இலக்கியம், அரசு நிர்வாகம், மருத்துவம், வானவியல் ஆகியவற்றில் இந்தியா முன்னேறியிருந்தது என்று எழுத வேண்டும். ஆதிகாலத்திலேயே நாம் இவற்றில் எல்லாம் முன்னேறிய நிலையில் இருந்தோம் என்பது நம்முடைய கலாச்சாரப் பெருமைகளுக்கு வலு சேர்க்கவும், வெகு விரைவிலேயே இந்தியா உலகின் ‘லோக குரு’வாக உருவாகும் என்பதை நியாயப்படுத்தவும்தான்.
- இடைக்கால வரலாற்றை எழுதும்போது, முஸ்லிம் ஆட்சியாளர்களையும் தளபதிகளையும் தீயவர்களாகவும், கொடுங்கோலர்களாகவும் துரோகிகளாகவும் சித்தரிக்க வேண்டும்; இந்து மன்னர்களையும் சேனாதிபதிகளையும் வீரம் செறிந்தவர்களாகவும் தியாகிகளாகவும் எல்லா நல்ல குணங்களுக்கும் உறைவிடமாக – குணக் குன்றுகளாகவும் விளங்கினார்கள் என்று எழுத வேண்டும் என்று பணிக்கின்றனர்.
- நவீன கால இந்திய வரலாற்றை எழுதும்போது நாட்டின் சுதந்திரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பைக் குறைத்தும், காங்கிரஸுக்கு அப்பாற்பட்ட பல்வேறு இயக்கங்களின் நடவடிக்கைகளைப் புகழ்ந்தும், மெய்சிலிர்த்துப்போகும் வகையிலும் எழுத வேண்டும் என்கின்றனர். காந்தியும் நேருவும் மன உறுதியற்றவர்களாகவும் அலைபாயும் உள்ளம் கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்பட வேண்டும்; சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் தீரம் மிக்கவர்களாகவும் தங்களுடைய லட்சியத்திலிருந்து விலகாதவர்களாகவும் வாழ்ந்தார்கள் என்று எழுத வேண்டும் என்கின்றனர்.
எப்படிப்பட்டது இந்துத்துவர்கள் எழுதும் வரலாறு?
- இந்துத்துவர்கள் எழுதும் வரலாறு, உண்மையற்ற சம்பவங்களையும் ஒன்றுக்கொன்று முரண்படும் தகவல்களையும் கொண்டதாக இருக்கிறது. பண்டைக்காலத்திலும் இடைக்காலத்திலும் ஆண்ட ராஜாக்களின் ‘தெய்வீக அரசுரிமை’யைப் புகழ்ந்துகொண்டே, ‘ஜனநாயகத்தின் தாய் இந்தியா’ என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது; நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிசெய்த மன்னர் பரம்பரைகளைப் புகழ்ந்துகொண்டே, ‘குடும்ப அரசியல் செய்கிறது’ என்று காங்கிரஸ் கட்சியை சாடுவது பொருத்தமாக இருக்காது; சுபாஷ் சந்திர போஸும் மகாத்மா காந்தியும் சமரசப்படாத போட்டியாளர்கள் என்று எழுதுவதும் சரியாக இருக்காது; இருவரும் நாட்டின் விடுதலைக்காக நீண்ட காலம் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்த பிறகும் காந்திஜி மீது போஸுக்கு பெரும் மதிப்பு இருந்தது, அவரை ‘தேசத் தந்தை’ என்றே மரியாதையுடன் அழைத்தார். இந்திய விடுதலைக்காக வெளிநாட்டில் அவர் திரட்டிய ‘இந்திய தேசிய ராணுவம்’ (ஐஎன்ஏ) என்ற படையின் பல அணிகளுக்கு காந்திஜி, நேருஜி, மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் பெயர்களைச் சூட்டினார்.
- இறுதியாக, இந்துக்கள் நல்ல நெறிகளுக்கு உறைவிடமானவர்கள், அன்னிய ஆட்சியாளர்களாலும், அன்னியப் படையெடுப்பாளர்களாலும் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டார்கள் என்று எழுதுவது, ஆணாதிக்க மரபுகளாலும் சாதியமைப்பு என்ற வர்ணாசிரமக் கொள்கையாலும் – முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களைவிட – இந்துக்களே சக இந்துக்களை இழிவாக நடத்தியதையும் கொடுமைப்படுத்தியதையும் புறக்கணிப்பதாகிவிடும்.
அடிப்படைப் புரிதலற்ற எழுத்துக்கள்
- இந்துத்தவர்கள் எழுதும் வரலாற்றின் பெரும் பிழையே, வரலாற்றை எப்படி எழுத வேண்டும் என்ற அடிப்படைப் புரிதலே இல்லாமல் அதை எழுதுவதுதான். இந்துத்துவ வரலாற்று ஆசிரியர்கள் பெருமளவுக்கு அன்றைய காலத்தில் வாழ்ந்த – மக்களுக்கு நன்கு அறிமுகமாகி இருந்த செல்வாக்கு மிக்க பிரமுகர்களைப் பற்றி மட்டுமே – நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ சித்தரித்து எழுதிவிடுகிறார்கள், அவர்களுடைய செயல்களின் பின்னணி குறித்தோ, காரணங்கள் குறித்தோ அக்கறை செலுத்துவதே இல்லை.
- இப்படி எழுதப்படுவோர் பிற மக்களுடன் வைத்திருந்த தொடர்புகள் எப்படிப்பட்டவை, அவர்களை அப்படிச் செயல்படச் செய்த சமூக – கலாச்சார செல்வாக்குகள் எப்படிப்பட்டவை, அவர்களுடைய செயல்களுக்குப் பின்னணியில் இருந்த உளவியல் காரணங்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரலாற்றை எழுதுகிறார்கள். சிக்கலான விஷயங்களைப் பற்றி ஆராய விரும்பாமல் மிகவும் எளிமையாக, அவர்களைப் பற்றி என்னவெல்லாம் கூறப்பட்டனவோ அவற்றையே தொகுத்து வரலாறு என்று எழுதுகிறார்கள்.
- வரலாறு என்பது, வாழ்ந்த பெரியவர்களின் வாழ்க்கை அல்லது செயல்களைவிட இதர அம்சங்களையும் பெரிதும் சார்ந்து நிற்பது. சமீபத்திய பத்தாண்டுகளில் வரலாற்று ஆய்வாளர்கள் கடந்த காலம் தொடர்பான பல்வேறு அம்சங்களையும் அறியும் வகையில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். வென்ற அல்லது தோற்ற போர்களைவிட இதர நிகழ்வுகளையும், மேட்டுக்குடிகளைவிட சாமானியர்களையும் ஆராயத் தொடங்கியுள்ளனர். விவசாயிகள், கைவினைஞர்கள், தொழிலாளர்கள், போர் வீரர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எதை உண்டார்கள், எதை உடுத்தினார்கள். வீடுகள் எப்படிக் கட்டப்பட்டிருந்தன, நகர அமைப்பு எப்படி, நகருக்கு எப்படியெல்லாம் அரண்களை அமைத்திருந்தார்கள். பயன்படுத்திய கருவிகள், பண்ட பாத்திரங்கள், அணிந்த அணிமணிகள், அவர்கள் செய்த பொம்மைகள், வரைந்த ஓவியங்கள், அவர்கள் கையாண்ட நீர் மேலாண்மை, கழிவுநீர் வெளியேறச் செய்திருந்த ஏற்பாடுகள் என்று பலவற்றையும் ஆராய்கிறார்கள்.
- அன்றைய கால பெண்களைப் பற்றி முக்கியத்துவம் தந்து ஆராய்கிறார்கள். இயற்கைப் பேரிடர்கள் எப்படி அவர்களுடைய வாழ்க்கையை மாற்றியது, எந்தவித முன்னேற்பாடுகளை அவர்கள் செய்திருந்தார்கள், சுற்றுச்சூழல் மாற்றங்களால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்றெல்லாம் ஆராய்கிறார்கள். இசை. இலக்கியம், கலை, கட்டிடக் கலை, உலோகவியல் உள்ளிட்ட அறிவியல் ஆகியவற்றில் பழங்கால மக்கள் கடைப்பிடித்த உத்திகளையும் அடைந்த வெற்றிகளையும் ஆவணப்படுத்துகிறார்கள். அன்றைய மக்கள் பொழுதுபோக என்னென்ன விளையாட்டுகளை விளையாடினார்கள் என்பதற்காக வீடுகளில் இருந்த சொக்கட்டான் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் ஆராயப்படுகின்றன. இன்றைய இந்தியர்கள் திரைப்படங்களிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கிக் கிடப்பதைப் போல, அக்கால இந்திய மக்களும் கேளிக்கைகளை நாடியுள்ளனர்.
முடிவில்லா ஆய்வு…
- வரலாற்று ஆய்வாளர்கள் இப்படி பிரித்துப் பிரித்து ஆராயும் துறைகள் ஊக்கம் தருகின்றன, அவை முடிந்துவிடவில்லை. இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் புறக்கணிக்கும் இந்த அம்சங்கள், மனித வாழ்க்கை அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களை நிச்சயம் தெரிவிக்கும். கடந்த காலத்திலிருந்து உண்மைகளையும் பாடங்களையும் அறிய இன்றைய படித்த இந்தியர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
- அரசியல் சார்பற்ற, ஆய்வில் சிறந்த வரலாற்று ஆசிரியர்கள் இந்த அம்சங்கள் குறித்து நிறைய எழுதிவருகிறார்கள். ‘இந்திய பொருளாதாரம், சமூக வரலாற்று மீள்பார்வை’ (ஐஇஎஸ்எச்ஆர்) என்ற ஆய்வேட்டில் இந்தக் கட்டுரைகள் பிரசுரமாகின்றன. கடந்த முப்பதாண்டுகளாக இதற்கு ஆசிரியராக இருக்கும் பேராசிரியை தர்மா குமார், இடது – வலது சித்தாந்தங்களை ஏற்காதவர். (மார்க்ஸியர்களுக்கு அவரைப் பிடிக்காது).
- வரலாற்று ஆய்வுகளைப் பல தளங்களில் மேற்கொள்ள வேண்டும், சமூக – கலாச்சார அம்சங்களுடன் பொருளாதார – அரசியல் வரலாறும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். இளம் ஆய்வர்களை ஊக்கப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார். இந்த ஆய்வேடு தவிர வரலாற்று ஆய்வுகளில் சிறந்து விளங்குகிறவர்களுக்கும் வெறும் ஆர்வலர்களுக்கும்கூட தகவல்களைத் தெரிவிக்க அறிஞர்களால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் இப்போதும் அச்சில் இருக்கின்றன.
- மனித வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து அனுபவங்களையும் அதன் முழுப் பரிமாணங்களுடன் இப்போது ஆராய்கிறார்கள்: கடந்த கால வீடுகள் எவற்றையெல்லாம் கொண்டு - எப்படிக் கட்டப்பட்டன, எந்தெந்த தானியங்களைப் பயிர் செய்தனர், எவற்றையெல்லாம் உண்டார்கள், எப்படிப்பட்ட துணிகளை ஆடைகளாக அணிந்தார்கள், எந்தெந்தப் பாடல்களைப் பாடினார்கள், சமூகப் படிநிலைகள் எப்படியிருந்தன, சமூக மோதல்கள் எப்படித் தோன்றின, வாழ்க்கைக்குத் தேவைப்பட்டவை என்று அடையாளம் கண்டு எந்தெந்த புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டார்கள், எந்தப் பழைய நுட்பத்தையும் கருவிகளையும் கைவிட்டார்கள், எந்தவிதமான அரசியல் அமைப்பு உருவாகியது, சட்டம் – பொது நிர்வாகத்துக்கு எந்தக் கட்டமைப்புகள் உதவின, அவர்களுடைய பொருளாதார – கலாச்சார வாழ்க்கையில் வனங்கள், தண்ணீர், பருவநிலை ஆகியவற்றின் பங்களிப்பு எப்படிப்பட்டவை என்பதையெல்லாம் ஆராய்கிறார்கள்.
தொடரும் திரிபு முயற்சிகள்
- வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரையிலான அனைத்தையும் ஆராய நவீன நூலகங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய வரலாற்று அறிஞர்களுடன் வெளிநாட்டு அறிஞர்களும் இவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரலாற்றுக்கூறுகள் மற்றவர்களுக்கு முடிவில்லாத ஆவலைத் தூண்டுகின்றன.
- ஆனால், இந்துத்துவ வரலாற்றை எழுத நினைப்பவர்களுக்கோ, அதையே பின்பற்ற நினைப்பவர்களுக்கோ இவையெல்லாம் பொருட்டே இல்லை. இந்துக் கதாநாயகர்களின் பெருமைகளை மட்டுமே பேச வேண்டும், இந்துக்களின் நாகரிகத்தை மட்டுமே புகழ வேண்டும் – அதேவேளையில் முஸ்லிம்களை இழிவுபடுத்த வேண்டும் (எப்போதாவது கிறிஸ்தவர்களையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்) என்ற செயல்திட்டத்தோடு செயல்படுகின்றனர்.
- “வரலாறு என்பது முடிவே இல்லாத விவாதம்” என்றார் டச்சு அறிஞர் பீட்டர் ஜெல். வெவ்வேறு கட்டமைப்புகள், வழிமுறைகள், கதை உத்திகள் கொண்டவர்களுக்கு இந்தியாவின் கடந்த காலத்தை ஆராய வாய்ப்பு தருவதன் மூலம்தான் செறிவான, பன்மைத்தன்மையுள்ள இந்திய வரலாற்றைத் தெளிவாக அறிய முடியும்.
- குதிரைக்கு சேணம் கட்டிய மாதிரி – பார்வையைக் குறுக்கிக்கொண்டுவிட்ட ஆராய்ச்சியாளர்களால் நல்ல வரலாற்று நூலை எழுதிவிட முடியாது, அதிலும் - எதைப் பெரிதாக்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்று - அரசியல் தலைமை கட்டளையிடுவதை ஏற்றுச் செயல்பட்டால் அது வரலாற்று நூலாக இருக்காது. வரலாற்றை திரித்து எழுதச் சொன்ன (சோவியத் ஒன்றிய) ஸ்டாலின் பாணியைப் பற்றி அறிஞர்கள் ஒருகாலத்தில் பேசினார்கள். அப்படிப்பட்ட பிரச்சினை இப்போது இல்லை. பேரினவாதிகளின் செயல்திட்டத்துக்கு ஏற்ப வரலாற்றைத் திரித்து எழுத முற்படும் இந்துத்துவ திரிபு முயற்சியை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.
நன்றி: அருஞ்சொல் (24 – 05 – 2023)