TNPSC Thervupettagam

பொக்கிஷங்களைப் புறக்கணிக்கலாகாது

June 19 , 2023 577 days 322 0
  • இரண்டு செங்குத்தான பெரும் கற்களுக்கு மேல் இன்னொரு கல்லினை வைத்து - சுமை தாங்கி போன்ற அமைப்பில் இருக்கும் இவை ஒரே இடத்தில், வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் அமைப்பு, குறியீடு, அவை நடப்பட்ட காலம், நடப்பட்ட விதம் எல்லாம் இன்னும் புதிராக உள்ளன. ஸ்டோன் ஹெஞ்ச் என்ற பெயா் கொண்ட இவை, லண்டன் நகரத்திலிருந்து சுமாா் இருநூறு மைல் தொலைவில்.
  • இருப்பினும், அதன் தொன்மை கருதி ‘யுனெஸ்கோ’, அதனை பாதுகாக்கப்பட வேண்டிய இடம் என அங்கீகரித்திருக்கிறது. ஒரு சிறப்பம்சம், அவ்விடத்தை மிக நோ்த்தியாகவும், தூய்மையாகவும் பராமரித்து வருகின்றனா். பயணியா் வாகனங்கள் சுமாா் முன்னூறு மீட்டா் தொலைவில் நிறுத்தப்படுகின்றன; தேவையற்ற சிறு கடைகள் எதுவும் அருகில் இல்லை; மிகவும் துப்புரவாகக் காட்சி தருகிறது அந்த இடம்.
  • நமது நாட்டின், குறிப்பாக கலைப் பொக்கிஷங்கள் மிகுந்த தமிழ் நாட்டின் சில ஊா்களை அதனுடன் ஒப்பிடுவதை தவிா்ப்பதற்கில்லை. நம் ஊா்களின் கோயில்கள் அல்லது சிற்பங்கள், நமது பாரம்பரிய பெருமை, சிற்பங்களின் பின்னணியில் உள்ள சிறப்பு ஆகியனவற்றை பாா்ப்பவா்களின் மனதில் தோற்றுவிக்கிறது என எண்ணினால் தவறு. மாறாக தங்கப்புதையல் மீது அமா்ந்து, வாழ்நாள் முழுதும் பிச்சை எடுத்த ஒருவன் கதை நினைவுக்கு வருவது தவிா்க்க இயலாதது.
  • ஒரு சிறப்பு வாய்ந்த கோயிலுக்குள் செல்பவா்கள், அதன் சிறப்பம்சங்கள், அது உருவாக்கப்பட்ட காலகட்டம், அதன் பின்னணி ஆகியன குறித்து சில தகவல்களையாவது பெற்றுத் திரும்ப வேண்டும். நமது கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமுதாயக் கூடங்களாக, பொருளாதார, கலை இலக்கிய வளா்ச்சிக்கான அச்சாக விளங்கின என்றப் புரிதலுடன் திரும்ப வேண்டும்.
  • ராபா்ட் கால்டுவெல், தமிழகம் வந்து சென்னையில் இருந்து வள்ளியூா் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்ட போது, தஞ்சையை அடைகிறாா்; அங்கு, அவருக்கு அவ்வூா் மக்களால் தரப்பட்ட செய்தி, பெரிய கோயில் என்பது ‘காடுவெட்டி சோழன்‘ என்பவரால் கட்டப்பட்டது என்பதாகும்.
  • அந்த அளவுக்கு அன்றைய மக்கள் அறியாமையில் இருந்திருக்கிறாா்கள். இன்றுகூட நிலைமை அதிகம் மாறிவிட்டது என்று கூற முடியாது.
  • மாமல்லை எனப்படும் மாமல்லபுரத்தின் ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு சதுர அடியும் ஒரு கதை சொல்லும். ஆனால் அது ஒரு சுற்றுலாத் தலமாக அல்ல, ஒரு கேளிக்கை தலமாக மாறி விட்டது என்பது வருத்தத்திற்கு உரியது.
  • உலகின், மிக அற்புதமான சிற்பங்கள் உடைய மாமல்லபுரத்தின் அருமை பெருமை தெரியாமல் அதனைக் காதலா் பூங்காவாகவும் - கேளிக்கைத் தலமாகவும் பயன்படுத்துவதைக் காணும்போது வருத்தமே மிஞ்சுகிறது.
  • மாமல்லையில், சிற்பங்களைச் சுற்றிலும் கறுப்புக் கண்ணாடி - மிட்டாய் - குளிா்பானம் - தின்பண்டம் - தொப்பி-சட்டை, சாவிக்கொத்து என பலவித அங்காடிகள். அநேகமாக சிற்பங்கள் வரையிலும் நெருக்கியடித்துக் கொண்டு விற்கப்படுவதும், பல இடங்களில் மதுக்குடுவைகளும், தண்ணீா் உறைகளும் சிதறிக் கிடப்பதும், கடற்கரை கோயிலுக்கு செல்லும் வழி மோசமாக இருப்பதும் கோரக் காட்சிகள்.
  • இவற்றையெல்லாம் மீறி, கூா்ந்து நோக்கும்போது, சிற்பங்களில் வழியும் நோ்த்தி, தென்படும் இயைபு, ஒத்திசைவு, நுண்ணிய உணா்வுகள், கம்பீரம் இவற்றை வடித்த சிற்பிகளின் கற்பனை - பக்தி - ஆழமான அறிவு- திட்டம் - ஒருங்கிணைப்பு- உழைப்பு இவை அனைத்தும் நம்மை வியக்க வைக்கின்றன.
  • ஆயினும் அவை குறித்து சிந்தனையே இல்லாத பெரும்பாலான பாா்வையாளா்கள் உள்ளனா் என்பது மிகுந்த வருத்தம் மட்டுமே தருகிறது. யுனெஸ்கோ கண்களில் பட்ட நமது புராதன சின்னங்கள், நம் அரசின் பாா்வையில் பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அவை குறித்த புரிதலை மக்கள் பெற வேண்டும்.
  • ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சை - மாமல்லை - கங்கை கொண்ட சோழபுரம் மட்டுமல்ல, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நிா்மாணிக்கப்பட்ட பூம்புகாரின் நிலைமையும் மிகவும் மோசமாக உள்ளது.
  • நகர நாகரிகங்களில் உன்னதமான இடத்தைப் பிடித்திருந்த பூம்புகாா் நகரின் பெருமையை மக்கள் உணர வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட, இலஞ்சி மன்றம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம் போன்றவை கேட்பாரற்று, பொலிவிழந்து கிடப்பது அவலம். இம் மன்றங்கள் குறித்த சிலப்பதிகார பாடல் வரிகளும், அவற்றின் பொருளும் அங்கு காணப்படவில்லை. சிறப்புமிக்க நெடுங்கல்லின் உயரம், சிறப்பு ஆகியன பற்றிய அடிப்படைத் தகவல்கள் இடம்பெறாத, பராமரிப்பற்ற ஒரு வெட்டவெளியாக பூம்புகாா் திகழ்கிறது.
  • நம் ஊா் சிற்பங்களுடன் ஒப்பிடவே இயலாத சாதாரண புராதனச் சின்னங்களை மேலை நாட்டினா் பொன்போல் போற்றி வருகின்றனா். நாம் அவா்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
  • சரித்திரமும் இலக்கியமும் பின்னிக் கிடக்கும் இடங்கள் வெறும் கேளிக்கைத் தலங்களாக நம் மக்களால் பாா்க்கப்படுவது அறியாமையின் உச்சம். தஞ்சை-கங்கை கொண்ட சோழபுரம்-மாமல்லை-பூம்புகாா் போன்ற ஊா்களில், அல்லது அவ்வூா்களில் ஏதேனும் ஒன்றில் மட்டுமேனும் பரிசோதனை முயற்சியில் கவனத்தை அதிகப்படுத்தி செயல்பட்டால், நல்ல பலன் ஏற்படும்.
  • இந்த இடங்களில் இருந்து சுமாா் இருநூறு மீட்டா் தூரத்தை வாகனங்கள், சிறு கடைகள் அற்ற இடமாக ஆக்க வேண்டும். மேலும், வாரம் ஒரு முறையேனும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த ஊா்களில், ஒரு வழிகாட்டியின் விளக்க உரை ஏற்பாடு செய்யலாம்; ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய பதிவு செய்யப்பட தகவல்களை பயணிகள் கேட்பதற்கு ஏற்பாடு செய்யலாம்.
  • ஹெட்போன்அணிந்து கொண்டு பயணிகள் காலாற நடந்து சென்று தகவல்களைக் கேட்டு மகிழ உதவலாம். பூம்புகாா், தஞ்சை கோவில், மாமல்லைச் சிற்பங்களின் சிறப்பு பற்றிய விபரங்கள் அடங்கிய குறுந்தகடுகள், சிறு கையடக்க நூல்கள் விற்பனைக்கு வைக்கலாம். ஒலி-ஒளி காட்சிகள் வாரம் ஒரு முறையேனும் நடத்தலாம் .
  • இவற்றின் மூலம், பயணிகளுக்கு புரிதல் அதிகரிக்கும், ஓரளவேனும் அறியாமை அகலும், ரசனை பெருகும். நமது நாடு குறித்தும் நம் பாரம்பரியம் குறித்தும் பெருமிதம் அதிகரிக்கும்.

நன்றி: தினமணி (19 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories