TNPSC Thervupettagam

பொங்கல் காலப் பதங்கள் மனிதர்களுக்குப் பொங்கல் மாடுகளுக்குத் தழுகைச் சோறு

January 11 , 2024 381 days 539 0
  • எங்கள் ஊருக்கான அடையாளமே மாடுகள்தாம். சின்னக்காடு, பெரியக்காடு என இரண்டு காடுகள் உள்ளன. இரண்டும் மேய்ச்சல் தரிசுகள். ஊர்க்காட்டு மாடுகளே இங்கேதான் மேயும். பெரியக்காடு மாடுகள் மேய்ந்து வீடு திரும்புகையில் காட்டிலிருந்து ஊர் இருக்கும் இரண்டு கல் தூரமும் மந்தையாகத் தெரியும். இப்போது ஊரில் இப்படியாக மந்தையைப் பார்க்க முடிவதில்லை.
  • ஒரு காலத்தில் ஆடு, மாடு இல்லாத வீடு கிடையாது. இப்போது ஓரிரு வீடுகளில்தாம் மாடுகள் உள்ளன. எங்கள் வீட்டில்கூட மாடு இல்லை. மாடு இல்லாதது ஒரு குறையாகத் தெரிவதில்லை. ஆனால், பொங்கல் வந்துவிட்டால் மாடு இல்லாதது பெருங்குறையாகத் தெரியும். மாடு இருப்பவர்கள் வீட்டில் வைக்கும் பொங்கலைப் போன்று மாடு இல்லாதவர்கள் வீட்டுப் பொங்கல் பெரும்பொங்கலாக இருப்பதில்லை.
  • கிராமத்தில் பெரும்பொங்கல் என்றொரு வழக்கு உண்டு. பொங்கல் என்பது நான்கு நாள்கள் கொண்டாடப்படும் பண்டிகை. போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், மாடு விடுதல் என்று. இந்த மாடு விடுதல் பல ஊர்களில் சல்லிக்கட்டு, எருது விடுதல், கயிறு மாடு விடுதல், ஜல்லிக்கட்டு, மாட்டு வேடிக்கை, ஏறு தழுவல், மாடு திறப்பு, எருது விளையாட்டு, மந்தை என்று பல்வேறு விதங்களில் அழைக்கப்படுகிறது.
  • இந்த நான்கு நாள் பொங்கலையும் எந்தக் குடும்பம் சிறப்பாகக் கொண்டாடுகிறதோ அவர்களுக்கே அது பெரும் பொங்கல். சில ஊர்களில் பெரும்பொங்கல் என்பதை தை முதல் நாளன்று வைக்கும் பொங்கலாகவும் சில ஊர்களில் ஊரே ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வைக்கும் பொங்க லாகவும் பொருள் கொள்ளலாம். இது தவிர தலைப் பொங்கல், கடைப் பொங்கல், வருஷப் பொங்கல், பட்டத்துப் பொங்கல் எனப் பல சொல்லாடல்கள் உண்டு.
  • தலைப் பொங்கல் - திருமணம் செய்துகொண்ட புது தம்பதி வைக்கும் பொங்கல். கடைப் பொங்கல்கடைசி பொங்கல். மூதாட்டி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கையில், “நம்ம கிழவிக்கு இது கடைப் பொங்கல்என்று சொல்வர். அதற்கு அந்தக் கிழவி, “நான் இன்னும் பத்து வருஷப் பொங்கல் பார்த்திட்டுதான் போவேன்என்பார். வாழும் ஒருவருக்கான கடைசிப் பொங்கலே கடைப் பொங்கல்.
  • வருஷப் பொங்கல் - இறந்தவர்களுக்குப் பொங்கிப் படைக்கும் பொங்கல். பட்டத்துப் பொங்கல் - ஒருவர் தன் வயலில் நெல் விளைவித்து, அறுத்து, நெல்லை இடித்து அந்த அரிசியில் வைக்கும் பொங்கல். நெல்லின் அறுவடைக் காலம் பட்டம் தவறிவிட்டதால் இந்தப் பொங்கல் ஒரு சிலரால் மட்டுமே வைக்க முடிகிறது.
  • ஊர்ப் பொங்கல்ஊரே திரண்டு ஓரிடத்தில் வைப்பது. இந்தப் பொங்கல் சமத்துவப் பொங்கல். சாதி, மதம் பாராது அனைத்து மக்களும் ஒன்றுதிரண்டு வைக்கும் பொங்கல்.
  • மாடு இல்லாதவர்கள் மாட்டுப் பொங்கல் வைப்பதில்லை. சிலர் மாடு இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் வீட்டுக்கு ஒரு மாடு வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு பொங்கல் வைப்பதுண்டு. “அடுத்த வருஷம் நம்ம வீட்டுக்கு மாடு வரணும்எனச் சொல்கிறார்கள் என்றால், அடுத்த வருடம் அந்த வீட்டுப் பையனுக்குத் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று பொருள். திருமணம் செய்தால் தலைப் பொங்கலுக்குப் பெண் வீட்டார்கள் சீதனமாகப் பசுமாடு கொடுப்பர்.
  • சிலர் மாடு இருக்கிற வீட்டில் அரிசி, காய்கறி, பருப்பு, தேங்காய், வாழைப்பழம், இலை களைக் கொடுத்து அரிசியோடு அரிசியாகப் பொங்கச் சொல்லி கொண்டாடுவதும் உண்டு. பொங்கல் அன்று மாட்டுக்கு வைக்கும் பருப்புக் குழம்பு சிறப்பானது. ஊரில் விளையும் காய்கறிகளைக் கொண்டு இந்தக் குழம்பை வைப்பர்.
  • இதற்கு தழுகைக் குழம்பு என்று பெயர். சில ஊர்களில் தழுகைப் பதம் என்பர். இங்கு பதம் என்பது குழம்பு. தழுகை என்பதற்கு இலைப் படையல் என்று பொருள். பொங்கல் வைத்துப் பதமாக இறக்குங்கள் என்றும் சொல்வர். இங்கு பதம் என்பதற்கு பக்குவம் என்று பொருள். மேலும் பதம் என்பதற்கு உணவு என்றொரு பொருளுண்டு. “பொங்கப்பதம் சாப்பிட்டு பசியெடுக்கலை.”
  • பலா இலைகளைப் பறித்து, காட்டுச் சீவாங்குச்சியை நெருப்பில் பதமாகக் காட்டி அதை இரண்டாக வகுந்து, இலைகளைப் பெரிதாகத் தைத்துப் படையல் போடுவர். தழுகைச் சோற்றை வாங்கித் தின்றால் மாடு பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. தழுகையில் இலை முழுக்கச் சோற்றைக் குவித்து, அதன் மையத்தில் குழி பறித்து, அதில் பால், வெல்லம், உரித்த வாழைப் பழங்களை அடுக்கி அதில் பருப்புக் குழம்பை ஊற்றி எல்லாவற்றையும் பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொடுப்பர். இதற்குத்தழுகைச் சோறுஎன்று பெயர்.
  • பெருந்தழுகை, தனித் தழுகை என இரண்டு தழுகை கள் உண்டு. பங்காளிகள் ஒன்றுதிரண்டு பொங்கல் வைத்துப் படைக்கும் தழுகை பெருந்தழுகை. ஒரு குடும்பத்தின் படையல் தனி தழுகை. தழுகையைப் பிரிப்பதற்கு முன்பு, ‘பொங்கலோ பொலி, பொங்கலோ பொலி…’ என மாடுகளுக்குச் சோறு ஊட்டி, சுற்றிவருவார்கள்.
  • மாட்டுப் பொங்கலைச் சில ஊர்களில் பெருமாள் பொங்கலாகக் கொண்டாடுகிறார்கள். பொலி என்றால் பொலிக என்று பொருள். அதாவது பெருக. செல்வம் கொழிக்க எனப் பொருள்கொள்ளலாம்.
  • வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊர் திரும்பும் நாளாகப் பொங்கல் இருப்பதுண்டு. அப்படியாகப் பொங்கல் அன்று ஊருக்கு வந்தவர் அவர் வேலை பார்த்த முதலாளியின் வசதி வாய்ப்பைப் பற்றிச் சொல்லுகையில், அவரது பாட்டி கேட்டிருக்கிறார், “உங்க முதலாளிகிட்ட எவ்ளோ மாடுக இருக்கும்?” என்று. வெளிநாட்டுக் கதையைச் சொன்னவர் அதிர்ந்துவிட்டார். கிராமத்தினர் பார்வைக்கு அதிக ஆடு, மாடுகள் வைத்திருப்பவர்களே செல்வம் படைத்தவர்கள்.
  • கிராமத்தார்கள் மாடுகளை மாடு என்றே இன்னும் சொல்லி வருகிறார்கள். கோமாதா, எருது, காளை, கிடாரி, காளைக்கன்று போன்ற சொற்களைத் தேவையானபோது மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மாடு என்கிற சொல்லின் பொருள் செல்வம் என்பதால், “அவன் வீட்டில் ஒரு மாடு கன்னு இல்லஎனச் சொல்வதுண்டு.
  • எங்கள் ஊரில் ஒரு குடும்பம் ஏழ்மையில் தவித்தது. ஒரு நாள் அடைமழை. வழி தவறிய ஒரு பசுமாடு அவரது வீட்டில் ஒதுங்கியது. அந்த மாட்டை அந்த வீட்டுக்காரர் கட்டி வைத்தார். யாரும் அந்த மாட்டைத் தேடி வருவதாக இல்லை. அந்த வீட்டுக்காரர் அந்த ஒரு மாட்டைத் தினமும் மேய்த்துவந்தார். மாடு கன்று போட்டது.
  • கிடாரிக் கன்று. இந்த இரண்டு மாடுகளும் சேர்ந்து பத்து வருடங்களில் ஒரு பெருந்தொழுவத்தை உருவாக்கிவிட்டன. இந்த மாடுகளைக் கொண்டே அந்தக் குடும்பம் செழித்தது. பால்காரக் குடும்பமானது. எரு, குப்பைக்குச் சம்சாரிகள் அவ்வீட்டைத் தேடிவந்தார்கள். அந்த மாடுகளைக் கொண்டே அவ்வீடு பசியாறியது. மகள்கள் திருமணம் முடிக்கப்பட்டார்கள். இன்றும் அவர் வீட்டில் மந்தையாக மாடுகள் நிற்கின்றன. அத்தனையும் நாட்டு மாடுகள்.
  • நாட்டு மாடுகள் ஒன்று போலிருந்தாலும் அத்தக்கருப்பன், கருங்கூழை, காற்சிலம்பன், ஏரிச்சுழியன், நெட்டைக்காலன் உள்பட பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
  • தமிழுக்கும் எழுத்துக்கும் சொல் இலக்கணம் இருப்பதைப் போன்று மாட்டுக்கும் இலக்கணம் உண்டு. மாட்டின் இலக்கணம் என்பது சுழி. நெற்றிச் சுழியைப் பார்த்தே இன்றைக்கும் மாடு பிடிக்கிறார்கள்.
  • பொங்கல் என்பது மூன்று, நான்கு நாள்கள் கொண்டாடும் விழா என்றாலும் பொங்கலுக்கான ஏற்பாடுகள் பதினைந்து நாள்களுக்கு முன்பே தொடங்கிவிடுகின்றன. பொங்கல் என்றால் கரும்பு, மஞ்சள்கொத்து, தேங்காய், வாழைத்தார், கண்ணுப் பூழை, மாட்டுக்கு மாலை, புதுக்கயிறு என்பதோடு நின்றுவிடுவதில்லை. கரும்பு வாங்குவதற்கு முன்பாக மாடு வளர்ப்பவர்கள், கயிறு திரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
  • ஊரே வீட்டுக்கு வீடு பொங்கல் வைக்கையில் ஒரு குடும்பம் பொங்கலன்று இழந்த மகனுக்காக ஒவ்வோர் ஆண்டும்மூடுபொங்கல்வைக்கிறது. துக்க வீட்டில் பொங்கும்படியாகப் பொங்கல் வைக்க மாட்டார்கள். ஆகவேதான் இதற்கு மூடு பொங்கல் என்று பெயர். பொங்காமல் அரிசியை வேகவைத்து இறக்கி வைப்பர். இப்போதெல்லாம் எங்கள் ஊரில் ஆடு, மாடுகள் இன்றியே பொங்கல் கொண்டாடப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories