பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரூ.2000… ரூ.1000… ரூ.0
- பிறக்கவுள்ள புத்தாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு ஏறக்குறைய 2.21 கோடி பேருக்கு வழங்கப்படுவதாகவும், அதற்கு அரசுக்கு ரூ.249 கோடி வரை செலவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கத்தொகை எங்கே என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.2,000 வழங்கப்பட்டது.
- திமுக ஆட்சியில் ரூ.3,000 கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ரூ.1,000 மட்டுமே வழங்கியது. இதனால், 60 சதவீதம் பேருக்கு மட்டுமே பணம் கிடைத்தது. இந்த ஆண்டும் அதேபோல ரூ.1,000 கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் திமுக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த ஆண்டும் ரூ.2,000 தர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளது மக்களின் எதிர்பார்ப்பை உறுதி செய்கிறது.
- பொங்கல் தொகுப்புடன் பணம் கொடுத்து பழக்கிவிட்டதால், மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அதேசமயம், இதுபோன்ற இலவச திட்டங்களையும் மக்களுக்கு பணம்கொடுப்பதையும் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இலவச திட்டங்கள் மூலம் மாநில கட்சிகள் மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றன’’ என்று விமர்சித்தார்.
- இலவச திட்டங்கள் இன்று நேற்றல்ல, சுதந்திர இந்தியாவில் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. உணவு, டிவி, லேப்டாப், சைக்கிள், மருத்துவக் காப்பீடு, பணம், இலவச மின்சாரம் என பல வடிவங்களில் இலவசங்கள் வழங்கப்படுகின்றன. பாஜக-வின் வீடு, கழிப்பறை, சிலிண்டர் திட்டங்களும் இதில் கொண்டு வரப்படுகின்றன.
- இலவசம் அல்லது மானியம் என்ற பெயரில் இவை மக்களுக்கு சென்றடைந்தாலும், உண்மையில் இவை இலவசங்கள் இல்லை. அதற்கு விலை உண்டு. அந்த விலையை யாரோ ஒருவர் அதாவது, நாட்டின் வரி செலுத்துவோர் அதை ஏற்கின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு.
- மக்கள் பணத்தை இதுபோன்ற இலவசம், மானியம் என்ற பெயரில் தருவதை கடுமையாக விமர்சிப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், இவை இலவசங்கள் அல்ல, மக்களின் மேம்பாட்டுக்கு பலனளிக்கும் நலத்திட்டங்கள் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இதுபோன்ற நலத்திட்டங்கள் மற்றும் ரொக்கப் பணம், இருப்பவர் மற்றும் இல்லாதவர் இடையேயான இடைவெளியைக் குறைக்கிறது.
- இன்னும் சொல்லப் போனால், இதைச் செய்வதுதான் ஒரு மக்கள் நலன்காக்கும் அரசின் கடமை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. பல நேரங்களில் தொழிலதிபர்களுக்கு கோடிகளில் வரிச்சலுகை வழங்கப்படுகிறது. வங்கிக் கடன்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதுபோல ஏழைகளுக்கும் அரசின் பணம் சிறிதளவு தருவதில் தவறில்லை என்றும் வாதிடப்படுகிறது.
- ரிசர்வ் வங்கி, நீதிமன்றங்கள்கூட இதுதொடர்பான வழக்கு, விவாதங்களை சந்தித்து முடிவெடுக்க முடியாத நிலையில், கிடைக்கும் இலவசங்களைப் பெற்று எப்படி முன்னேறலாம் என்று மட்டுமே மக்கள் சிந்திக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 12 – 2024)