TNPSC Thervupettagam

பொங்கல் வாழ்த்து வந்த கதை

January 14 , 2025 10 days 35 0

பொங்கல் வாழ்த்து வந்த கதை

  • எழுபது, எண்பதுகளில் பொங்கல் திருவிழா நாள்களில் வண்ணவண்ண வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி, நம் அன்பினை வெளிப்படுத்தியதும் பதிலுக்கு நன்றி வாழ்த்து மடல்களை எதிர்நோக்கிக் காத்திருந்ததும் சுகமான தருணங்கள். பொங்கல் வாழ்த்து வந்த கதை இன்னும் சுவாரசியமானது.
  • 1930களில் பெ.தூரனும் அவருடைய நண்பர்களும் இணைந்து விவாதித்தபோது, கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல்களைப் போல பொங்கல் விழாவுக்கு வாழ்த்து மடல்கள் அனுப்பும் பழக்கத்தினை நம்மிடையே உருவாக்கலாமே என்கிற எண்ணம் அவர்களுக்கு உருவானது.
  • அதற்கு ஆதரவாகப் பலரும், ‘அது அடிமை மனப்பான்மையின் அறிகுறி’ என்று சிலரும் விவாதிக்க... அரங்கு சூடாகிப் போனது. முடிவில், ‘தனிப்பட்ட விருப்பம் உடையவர்கள் பொங்கல் வாழ்த்து அனுப்பலாம்’ என்று பெ.தூரனும் மனமொத்த சிலரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.
  • குருத்துப் பனை ஓலைகளைக் கொணர்ந்த பெ.தூரன், அவற்றை அழகுற நறுக்கி, வண்ண மைகளைக் கொண்டு கலாபூர்வமாக வாழ்த்து வாசகங்கள் எழுதி திரு.வி.க. கல்கி, கா.நமச்சிவாயம் எனப் பலருக்கும் அனுப்பினார். இந்தப் புதுமையான வாழ்த்துமடலை அறிஞர்கள் வரவேற்றனர்.
  • தமிழ் மக்கள் அனைவரும் பொங்கல் வாழ்த்து அனுப்ப வேண்டும் என்று ‘நவசக்தி’ இதழில் திரு.வி.க. வேண்டுகோள் விடுத்தார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர்கள் மாநாட்டை நடத்தி, பொங்கல் விழா கொண்டாடத் தீர்மானம் கொண்டுவந்தவர் கா. நமச்சிவாயம்.
  • பலர் தங்கள் ஊர்களில் இருந்த ஓவியர்கள், ஒளிப்படக் கலைஞர்களை அணுகித் தங்களுக்கான தனிப்பட்ட பொங்கல் வாழ்த்துகளைத் தயாரித்து அனுப்ப ஆரம்பித்தனர். தமிழர்களிடையே பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் வேகமாகப் பரவிற்று. எனினும், வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களால் மட்டுமே பொங்கல் வாழ்த்து அனுப்ப முடியும் என்கிற நிலை இருந்தது.
  • ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் தமிழர் அனைவரும் அனுப்பிட வகைசெய்து, பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கத்தைப் பரவலாக்கியவர் மதுரை கீழ ஆவணி மூல வீதியில் இருக்கும் ‘கலைமகள்’ புத்தக நிறுவனர் ஆர்.எம்.நடராஜன்.
  • திராவிட இயக்கங்கள் எழுச்சிபெற்றிருந்த அந்த வேளையில் பத்திரிகைகள், சினிமா பேனர்களுக்குச் சித்திரங்கள் தீட்டி வந்தவர் ஓவிய மன்னர் கே.மாதவன். தமிழர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் சித்திரங்களை கே.மாதவனை வரையவைத்து பொங்கல் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு அறிமுகப்படுத்தினார் ஆர்.எம்.நடராஜன். மனதைக் கவரும் கவிதைகளுடன் வண்ணப் பொங்கல் வாழ்த்து அட்டைகள் தமிழகம் தாண்டி, அன்றைய பம்பாய், டெல்லி போன்ற நகரங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் வாழும் தமிழர்களிடையே பிரபலமாயின.
  • பொங்கல் வாழ்த்து அட்டை வடிவமைப்பில் புதுப்புது உத்திகளும் புகுத்தப்பட்டன. ‘டை - கட்டிங்’ வாழ்த்து மடல், பளபளக்கும் ஜிகினா வேலைப்பாடுகளுடன் கூடிய வாழ்த்து அட்டைகள், அன்றைய சினிமா கதாநாயகர்களின் உருவப் படங்கள் இடம்பெற்ற வாழ்த்து அட்டைகள் எனப் பல வகையான வாழ்த்து அட்டைகள் புழக்கத்துக்கு வந்தன. விற்பனையும் அமோகமாக இருந்தது. கணினி, இணையம், கைபேசி, சமூகவலைதளம் ஆகியவற்றின் வருகைக்குப் பின் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் எளிதில் வாழ்த்து மடல்களை உருவாக்கி, உடனடியாகப் பகிர்ந்துகொள்கிறோம்.
  • ஒரே மின் மடலைப் பலருக்கும் மொத்தமாகப் பகிர்ந்துவிடுகிறோம். எனினும், பொங்கல் வாழ்த்து அட்டை யுகத்தில் கிடைத்த பரவசம், காத்திருப்பு, மகிழ்ச்சி போன்றவற்றை இன்றைய இணைய உலகத்தில் முழுமையாக உணர முடிகிறதா என்பது சந்தேகம்தான். பொங்கல் வாழ்த்து அட்டைக் காலம் ஒரு பொற்காலம்தான்!

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories