TNPSC Thervupettagam

பொது உரையாடலுக்குள் அறிவியல் வர வேண்டியதன் அவசியம் என்ன?

May 5 , 2020 1719 days 1315 0
  • கரோனா பல மர்மங்களைக் கொண்டிருக்கிறது. அந்த மர்மங்களை நாம் கேள்விகளாகச் சுமக்கிறோம். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கொஞ்சம் ஊடகங்களில் கிடைக்கின்றன, கொஞ்சம் இணையதளங்களில் கிடைக்கின்றன, கொஞ்சம் வாட்ஸ்அப்பில், கொஞ்சம் ஃபேஸ்புக்கில், கொஞ்சம் வாய்வழியாக.
  • அறிவியல்பூர்வமான தகவல்கள் இல்லாதபோது, அந்த இடத்தில் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் புகுந்துவிடுகின்றன. இந்தக் கதைகளின் விளைவாக மக்கள் தேவையில்லாமல் பீதியடைய நேர்கிறது, அவசியமானதை அலட்சியப்படுத்த நேர்கிறது, நோய்த்தொற்றைப் பரவலாக்க ஏதோ ஒருவகையில் காரணமாகவும் நேர்கிறது.
  • அறிவியல் உரையாடல்கள் பொதுத் தளத்துக்கு வர வேண்டும் என்று சொல்வது, மக்களுக்கு விழிப்புணர்வூட்ட மட்டுமல்ல. அது நமது அரசியல் வியூகத்துக்கும் உதவக்கூடியது.
  • அரசின் நடவடிக்கைகள் எதன் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன என்பது வெளிப்படையாக இல்லாத சூழல் நம்முடையது. அதனால்தான், நடவடிக்கைகளில் ஏதேனும் பிசகல்கள் நேரும்போது, மக்களிடையே குழப்பங்கள் மட்டுமே எஞ்சுகின்றன.

ஒரு தென் கொரிய அனுபவம்

  • தென் கொரியாவில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிய பிறகும் மீண்டும் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது பெரும் பீதியைக் கிளப்பியது; தென் கொரியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவும்.
  • அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன. ஒன்று, அவர் மீண்டும் வேறொருவரிடமிருந்து நோய்த்தொற்றைப் பெற்றிருக்கலாம் என்பது. இந்தக் கோணம் வேறொரு சிக்கலைக் கொண்டுவந்தது; ஒருவருக்கு கரோனா தொற்று வந்தால் அவருக்கு நோயெதிர்ப்பு சக்தி வந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருப்பதை இது பொய்யாக்கியது.
  • இரண்டாவது, அவர் முழுமையாகக் குணமடையாமல் வீடு திரும்பியிருக்கலாம் என்பது. இது இன்னொரு கேள்வியை எழுப்பியது; எப்படி சோதனை முடிவில் அவருக்குத் தொற்று இல்லை என்று வந்தது?
  • குணமாகி வந்தவருடன் சகஜமாகப் பழகியவர்களையெல்லாம் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கவும் தனிமைப்படுத்தவும் வேண்டிய கட்டாயம் தென் கொரியாவுக்கு நேர்ந்தது. மக்கள் பீதியடைந்த இந்தச் சமயத்தில்தான் இதைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் தென் கொரிய அறிவியலாளர்கள் முனைப்புக் காட்டினர்.
  • அதைத் தொடர்ந்து, கரோனா நிபுணர் கிம் வூ-ஜூ அளித்த பேட்டியானது, கரோனா சோதனையில் இருக்கும் ஒரு போதாமையை வெளிக்கொண்டு வந்தது.
  • கரோனா நோயாளியின் உடலில் 3,500 எண்ணிக்கைக்குக் குறைவாக வைரஸ் இருந்ததென்றால், கரோனா தொற்று இருப்பதை ‘பிசிஆர்’ சோதனையால் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் அது. கிம் வூ ஜூ கரோனா குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு நிதானமாக, விரிவாக, அறிவியல்பூர்வமாகப் பதிலளித்தார். அவர் கொரியர்களின் தாய்மொழியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனாவும் நகரங்களும்

  • தமிழ்நாட்டில் சென்னை, மஹாராஷ்டிரத்தில் மும்பை தொடங்கி அமெரிக்காவின் நியூயார்க் வரை உலகம் முழுவதும் நகரங்கள் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்கின்றன.
  • ஜனநெரிசல், சர்வதேசப் போக்குவரத்துக்கான மையமாக நகரங்கள் இருப்பது, நகரங்களில் அதிக அளவில் நடக்கும் சோதனைகள் போன்றவை அரசுத் தரப்பிலிருந்து காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இதை மறுப்பதற்கில்லை. ஆனால், அறிவியல் வேறொரு விஷயத்தையும் சொல்கிறது.
  • வங்கத்திலுள்ள ‘என்ஐபிஎம்ஜி’யைச் சேர்ந்த அறிவியலாளர்கள், கரோனா வைரஸின் பத்து வகைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதில் ‘ஏ2ஏ’ (A2a) வகையானது முதன்மையானதாகவும் வலுமிக்கதாகவும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
  • இது சீனாவின் வூஹானிலிருந்து தொடங்கிய ‘ஓ’ (O) வகையை வேகமாகப் பதிலீடு செய்துவருகிறது என்கிறார்கள். இந்த ‘ஏ2ஏ’ வகையானது நியூயார்க், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஐஸ்லாந்து, பிரேசில், காங்கோ உள்ளிட்ட நாடுகளில் பிரதானமாக இருக்கிறது; இந்தியாவிலும் இதுதான் பிரதானம்.
  • கரோனாவைப் பொறுத்தமட்டில், அறிவியலையும் அரசியலையும் மக்களின் அன்றாடங்களையும் பிரித்துப் பார்ப்பதற்கில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் ஒன்றைச் சார்ந்து இன்னொன்று செயல்படுவதும் அதில் அடங்கியிருக்கிறது.
  • ஆக, கரோனாவுக்கான சிகிச்சையில் நாம் பயன்படுத்தும் மருந்துகள் எப்படி வேலைசெய்கின்றன, தென் கொரிய அறிவியலாளர் சுட்டிக்காட்டும் சோதனைப் போதாமையை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், ‘ஏ2ஏ’ வகை வைரஸ்தான் தமிழ்நாடு முழுக்கவும் இருக்கிறதா? இப்படியான உரையாடல்கள் பொதுத் தளத்திலும் நடைபெறத் தொடங்க வேண்டும். அப்போதுதான் நாம் புதிய சாத்தியங்கள் குறித்து யோசிக்க முடியும்.
  • உதாரணமாக, வீரியம் மிக்க ‘ஏ2ஏ’ வகை வைரஸ் சென்னையில் மட்டும்தான் இருக்கிறது என்றும், வீரியம் குன்றிய வகை வைரஸ்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இருக்கின்றன என்றால், அதற்கேற்ற புதிய உத்தியை நாம் வகுத்துக்கொள்ள முடியும், இல்லையா?
  • ஊரடங்கின்றி இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்வீடனில் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால், அதற்கேற்ற வியூகத்தை அவர்கள் செயல்படுத்தினார்கள். கரோனா தொற்று இல்லாத மாவட்டங்களை இயங்க அனுமதிக்கிறோம்; ஆனால், அந்த மாவட்டம் கரோனா தொற்றுள்ள மாவட்டங்களைச் சார்ந்துதான் இயங்க முடியும் என்றால் என்ன செய்வது?

கரோனா வினோதங்கள்

  • கரோனா பல வினோதங்களைக் கொண்டிருக்கிறது. அறிகுறி இல்லாமலும் கரோனா தொற்றிக்கொள்ளும் என்பதிலிருந்தே அந்த வினோதம் தொடங்கிவிடுகிறது.
  • எவ்விதப் பயணமும் மேற்கொள்ளாத, எவ்விதத் தொற்றாளரையும் சார்ந்திராத ஒருவருக்குத் தொற்று வரும்போது, மருத்துவ உலகம் குழம்பிவிடுகிறது.
  • மிகச் சிறந்த மருத்துவக் கட்டுமானங்கள் இருந்தும் சில நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாவதற்கு என்ன காரணம்? இப்படியான ஏகப்பட்ட குழப்பங்களுக்கு நாம் முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
  • ஆனால், கரோனாவை உலகம் முழுக்கவும் எதிர்கொள்கிறது. உலகம் முழுக்கவும் உள்ள அறிவியலாளர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
  • உலகம் முழுக்கவும் உள்ள அனுபவங்கள் நமக்குப் பாடமாக இருக்கின்றன. அவற்றையெல்லாம் அறிவியல் தளத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களின் கவனத்துக்கும் கொண்டுவருவதை இங்கே நடைமுறையாக்க வேண்டும். மக்களின் மொழியில் அறிவியலாளர்களும் ஆய்வாளர்களும் ஊடகங்களில் பேச வேண்டும். அது அரசு இயந்திரம் செயல்படுவதற்கே உதவும் என்பதுதான் அடிப்படையான விஷயம்.

நன்றி: தி இந்து (05-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories