TNPSC Thervupettagam

பொது சிவில் சட்டத்துக்கு நாடு இன்னும் தயாராகவில்லை

August 10 , 2023 477 days 344 0
  • பொது சிவில் சட்டம் ஒரு நாட்டுக்கு தேவைதான் என்றாலும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுவிடவில்லை என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன்.
  • “பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பேசுவதற்கு முன், அதற்கான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுவிட்டதா என்பதை கவனிப்பது மிகவும் முக்கியம். இந்தியா மிகப் பெரிய நாடு. இங்கே 140 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசக்கூடிய, 340க்கும் மேற்பட்ட இனப்பிரிவுகளைக் கொண்ட நாடு இது. ஏராளமான பிரிவுகளும், பிரிவுகளுக்குள் உட்பிரிவுகளும் இங்கே இருக்கிறது. கோயிலுக்குள் தலித் மக்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. இன்னமும் தீண்டாமை இருக்கிறது.
  • காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் மலபார் முஸ்லிம்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அதேபோல், மேற்கு வங்க பிராமணர்களுக்கும் தமிழ்நாட்டு பிராமணர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரே மதத்தில் ஒரே சாதியில் உள்ள இந்துக்களுக்கு இடையேயும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதேபோல், முஸ்லிம்களுக்குள்ளும்; கிறிஸ்தவர்களுக்குள்ளும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கேரளாவில் தாய்வழி சமுதாய முறையும், தமிழ்நாட்டில் தந்தைவழி சமுதாய முறையும் இருக்கிறது. தமிழ்நாட்டில் அத்தைப் பெண்ணையும், அக்கா மகளையும் திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் முடியாது. எத்தனை விதமான பழங்குடி மக்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான திருமண முறைகள் அமலில் இருக்கின்றன. மலைவாழ் மக்கள் ஒரே மலையில் பல்வேறு மொழிகளைப் பேசிக்கொண்டும், பல்வேறு விதமான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஒவ்வொன்றும் தன்னளவில் அப்படி உருவாகி வந்திருக்கிறது.
  • பாலியல் சமத்துவம் இன்னமும் இந்த நாட்டில் ஏற்பட்டுவிடவில்லை. பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் இன்னமும் பார்க்கப்படுகிறார்கள். ஆண்-பெண் சமத்துவம் இல்லாத சமுதாயம் என்பது இந்தியாவில் தொடர்கிறது. ஆண்-பெண் சமத்துவத்துக்கே போக முடியாத ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்னமும் 25-30 சதவீத படிப்பறிவின்மை இருக்கிறது. 32-40 சதவீதம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.
  • அரசியல் சட்டத்தின் பிரிவு 13-ல் இருந்து 21 வரை குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் இந்த உரிமைகள் உண்டு என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அடிப்படை உரிமைகள் இன்னும் அனைவருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. படித்த தலித்துக்குக்கூட ஐஐடியில் பேராசிரியர் வேலை கிடைப்பதில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் நான் பேசி இருக்கிறேன். ஏனெனில், ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் இட ஒதுக்கீடு கிடையாது. தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கிடையாது. தனியார் கல்லூரிகள்தான் இனிமேல் ஆதிக்கம் செலுத்தப்போகின்றன. கடந்த 75 ஆண்டுகளாக மட்டுமல்ல நரேந்திர மோடி பிரதமரான கடந்த 9 ஆண்டுகளாகவும் இவை அமலாகவில்லை. அதுமாத்திரமல்ல, அடிப்படை உரிமைகள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
  • பொது சிவில் சட்டம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு என்னவென்றே தெரியாது. இந்த சட்டத்தை ஒப்புக்கொள்வதால் மக்களுக்கு என்ன கிடைத்துவிடும்? சாதி ஒழிந்துவிடுமா? மத வேற்றுமை மறைந்துவிடுமா? புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுமா? முதலீடுகள் வந்து வளர்ச்சி வருமா? இவை எதுவும் நடக்காது எனும்போது பொது சிவில் சட்டத்தைப் பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன? பொது சிவில் சட்டம் இல்லை என்பதால் தேசம் பற்றி எரிகிறதா?
  • இது முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பும் முயற்சி. நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது, மணிப்பூரில் கடந்த 6 மாதங்களாக வன்முறை வெறியாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அம்மாநிலத்தில் இதுவரை 200 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். 165 தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைகளைப் பற்றி பேசாமல், ஏன் பொது சிவில் சட்டம் குறித்து பேச வேண்டும்? ஏனெனில், பிரதமர் மோடி, தனது மைதானத்துக்கு மற்றவர்களை இழுக்கப் பார்க்கிறார். அவர் பேச விரும்புவதை மற்றவர்களும் பேச வேண்டும் என்பதற்கு ஏற்ப காய்களை நகர்த்துகிறார். தேர்தலை மனதில் கொண்டு அவர் இவ்வாறு திட்டமிடுகிறார். நாட்டில் தற்போது முஸ்லிம் எதிர்ப்பு, கிறிஸ்தவ எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்து மதவெறி அதிகரித்திருக்கிறது. ஓட்டுக்களை ஒன்று திரட்டுவதற்காக இந்த மதவெறி உதவும்.
  • பொது சிவில் சட்டத்தின் பிரதான நோக்கமே சிறுபான்மையினரைத் தாக்குவதுதான். இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது இன்று உலகம் அறிந்த விஷயமாக மாறி இருக்கிறது. முஸ்லிம்கள் அதிக திருமணங்களை செய்து கொள்கிறார்கள் என்பது உண்மையல்ல. அதேபோல், அவர்கள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதும் உண்மையல்ல. உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் தான் அதிக அளவில் வாசக்டமி (கருத்தடை சிகிச்சை) பண்ணி இருக்கிறார்கள்.
  • பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால், சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள் என்பதைத் தாண்டி, இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள்; பழங்குடி மக்களும் பாதிக்கப்படுவார்கள். வருமான வரி காரணமாக இந்து கூட்டுக் குடும்பங்கள் பாதிக்கப்படும். இதன் காரணமாகவே, வட இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதேபோல், வட கிழக்கு மாநில மக்களையும் பொது சிவில் சட்டம் பாதிக்கும். சிறுபான்மையினரை விட்டுவிடுவோம். இந்துக்களிடையே ஏற்றத்தாழ்வை போக்க முடியாத நிலையில், தீண்டாமையை ஒழிக்க முடியாத நிலையில், திருமணத்துக்கும், விவாகரத்துக்கும்தான் பொது சிவில் சட்டம் எனப் பேசுவதில் என்ன லாபம்?
  • பொது சிவில் சட்டம் ஒரு நாட்டுக்கு தேவைதான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை ஆதரிக்கின்றன. ஆனால், அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது ஆபத்தானது. பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பக்குவம் நாட்டுக்கு இன்னமும் ஏற்பட்டுவிடவில்லை. ஒரேமாதிரியான எண்ணமும் மனோபாவமும் மக்களிடம் வராதபோது, பொது சிவில் சட்டம் குறித்துப் பேசுவதில் என்ன லாபம்? இந்தியா போன்ற ஒரு நாட்டில் அது தானாக எழ வேண்டும். இத்தனை பெரிய ஒரு நாட்டில் அவ்வாறு எழுவதற்கு 75 ஆண்டுகள் எல்லாம் போதாது. இன்னும் 100 ஆண்டுகள்கூட ஆகலாம்.
  • பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்டமேதை அம்பேத்கர் பேசியதை பலரும் தவறாகக் கூறுகிறார்கள். இந்து மதத்துக்குள் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார். அரசியல் சாசன சபையை முடிக்கும்போது, 'ஒரு மனிதனுக்கு ஒரு ஒட்டு என்பதை உறுதிப்படுத்திவிட்டோம். அதேநேரத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே மதிப்பு இருக்க வேண்டும். ஆனால், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமுதாயமாக இது இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே மதிப்பு என்பதை உருவாக்காவிட்டால், நாம் உருவாக்கி இருக்கும் இந்த அரசியல் கட்டமைப்பு வெடித்துவிடும்' என்று கூறியவர் அம்பேத்கர். நாட்டில் சாதிக்கு சாதி வித்தியாசம் இருக்கிறது.  மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசம் இருக்கிறது.
  • கடந்த 75 ஆண்டுகளில், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே மதிப்பு என்ற நிலையை ஏற்படுத்த முடியவில்லை என்பது மட்டுமல்ல, ஏற்றத்தாழ்வுகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய ஒரு சூழலில் பொது சிவில் சட்டம் என்று பேச ஆரம்பித்தால், அம்பேத்கர் கூறியது போல் வெடிப்பு நிகழ்ந்துவிடும்.”

நன்றி: இந்து தமிழ் திசை (10  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories