- பொது சிவில் சட்டத்தை இயற்றுவதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதால், இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கிறது என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், இந்து முன்னணி மாநில துணைத் தலைவருமான ஜி. கார்த்திகேயன்.
- தற்போது மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொருள் - பொது சிவில் சட்டம். இந்த சட்டத்தை எதிர்க்கக் கூடிய பலரும் இது ஏதோ பாஜக அரசால், சிறுபான்மையினர் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கொண்டுவரப்பட உள்ள சட்டம் என்ற அளவில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால், இந்திய அரசியல் சாசனத்தின் நான்காம் பகுதியில் வரும் நெறிமுறை கோட்பாடுகள் என்ற தலைப்பின் கீழ் 44-ஆவது ஷரத்தின்படி பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
- அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசை சாடியுள்ளது. 1985-ஆம் வருடம் நடைபெற்ற ஷாபானு பேகம் வழக்கு, 1995-ஆம் வருடம் நடைபெற்ற சர்லா முட்கல் வழக்கு, 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஷையாரா பானு வழக்கு ஆகிய வழக்குகளில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் தனது கருத்தை முன்வைத்துள்ளது. குறிப்பாக, 1995-ஆம் வருடத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதிகள், "1954-ஆம் வருடம் பொதுவான இந்து சட்டம் உருவாக்கப்பட்டபோது பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு இப்போது நான் தயாரில்லை என்றார். இன்றுவரை அந்தச் சூழ்நிலை நீடிக்கிறது" என தங்களது மன வருத்தத்தை தெரிவித்தனர்.
- ஷரத்து 51(A) என்பது இந்த நாட்டின் குடிமகன்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படை கடமைகள் பற்றியதாகும். அதில் ஷரத்து 51 (A)(a), இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்திய அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட வேண்டும்; அதன் லட்சியங்களை மதிக்க வேண்டும் என்பதை தெளிவாக வலியுறுத்தியுள்ளது. ஆக அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்பதும் அதன் லட்சியங்களை மதிக்க வேண்டும் என்பதும் இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையென தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
- ஷரத்து 44-இல் கூறியுள்ளபடி, இந்திய நாட்டு மக்களுக்கு பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டுமென அரசுக்கு நெறிமுறை கோட்பாடு விதித்துள்ளதால், அதனை அமல்படுத்த வேண்டிய அடிப்படை கடமை இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அவ்வாறு இருக்கையில், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை எதிர்க்கும் அனைவரும் அரசியல் சாசனத்தால் தங்களுக்கு விதிக்கப்பட்ட அடிப்படை கடமைகளை செய்ய மறுப்பதாகவே கருதப்பட வேண்டும்.
- நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு பல்வேறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் பழக்க வழக்கங்களும் அவர்களது தனிச் சட்டமாக இருந்தது. அவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு பொதுவான இந்து சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்தனர். தங்களது தனித்தன்மை பாதிக்கப்பட்டதாக யாரும் கூக்குரல் இடவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலமாக இஸ்லாமிய பெண்கள் அனுபவித்து வரும் பல கொடுமைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும். அதுபோலவே, விவாகரத்து சட்டங்கள் பொதுவாக ஆகிவிட்டால் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பெண்களுக்கு விடிவு காலம் வந்துவிட்டதாகவே கருதலாம்.
- இந்த சமயத்தில் கோவா மாநிலத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். நமது நாட்டிலேயே பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரே மாநிலம் கோவா மட்டுமே. 1961-ஆம் வருடம் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து விடுதலை பெற்றவுடன் பொதுவான கோவா சிவில் சட்டம் உருவாகி இன்றுவரை நடைமுறையில் உள்ளது. கோவாவில் மட்டும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் என அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
- குறிப்பாக, இந்தியா மதச்சார்பற்ற நாடு என இந்திய அரசியல் சாசனத்தில் இடைச்செருகல் ஏற்பட்டபின், மத ரீதியிலான அனைத்து சலுகைகளும், உரிமைகளும் நிரந்தரமாக நீக்கப்படுவதே முறையாக இருக்கும். ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவரானாலும், கடவுளை எந்த பெயரில், எந்த வகையில் வழிபட்டாலும், அனைவருக்கும் சட்டம் என்பது பொதுவானதாகவே இருக்க முடியும்; இருக்க வேண்டும்.
- அவ்வாறு நடக்கும்போது மதரீதியாக சிலருக்கு சலுகைகள் கொடுத்து அவர்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி வரும் அரசியல் கட்சிகளுக்கு கேடு நேர்ந்தாலும், மதச் சிறுபான்மை பெரும்பான்மை என்றில்லாமல் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் யாருக்கும் எந்தவித விசேஷ சலுகைகளும் உரிமைகளும் இல்லாமல், அனைவரும் சமமான குடிமக்களாகக் கருதப்படுவதால், மத ரீதியான பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்.
நன்றி: தி இந்து (02 – 08 – 2023)