TNPSC Thervupettagam

பொது சிவில் சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பயன் தரும்

August 13 , 2023 342 days 226 0
  • பொது சிவில் சட்டம் யாருக்கு பயன் என்றால், அனைத்து பெண்களுக்கும்; யாருக்கு நஷ்டம் என்றால் பிற்போக்குவாதிகளுக்கும் சுயநல அரசியல்வாதிகளுக்கும்தான் என்கிறார் எழுத்தாளர் பா.பிரபாகரன்.
  • பொது சிவில் சட்டம் குறித்த பேச்சு எழுந்த உடனேயே அரசியல் பேச்சு நடைபெறும் பொதுத் தளம் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. பாஜகவும் அதன் தோழமைக் கட்சிகளும் ஒருபுறமாகவும், எதிர்க்கட்சிகள் மற்றொரு புறமாகவும் நின்று வாதப்பிரதிவாதங்களை எடுத்து வைக்கிறார்கள். இந்த உரத்த சத்தத்தில் உண்மை அமிழ்து போகும் அபாயமும் உள்ளது. இந்துக்களுக்கும் ஏனைய மதப் பிரிவினருக்கும் இடையே ஒரு போர் நடப்பது போலவும், அந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும் என்பதற்காகவே பொது சிவில் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பது போலவும் ஒரு பார்வை இருக்கிறது.
  • அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்த தனிமனித சுதந்திரத்திலும் மத வழிபாட்டு உரிமைகளிலும் அரசு தலையிட முடியாது; தலையிட விடமாட்டோம் என்று மார்தட்டி அறைகூவல் விடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் தங்களது திருமணத்தின்போது இனி மோதிரம் மாற்றிக் கொள்ள முடியாது; தாலிதான் கட்ட வேண்டும் என்பதுபோலவும், அதேபோல இஸ்லாமியர்கள் நிக்காணாமா எழுத முடியாது; அதற்கு பதிலாக தாலிகட்ட வேண்டும் என்பது போலவும் பொய் பிரச்சாரங்கள் அவிழ்த்து விடப்படுகின்றன. திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பதில் ஏதோ அரசு தலையிடுவது போல பிரச்சாரம் செய்யப்படுகிறது.
  • மொத்தத்தில் இது முஸ்லிம்களை குறிவைத்து இயற்றப்பட்ட சட்டம் என்ற ஒரு கருத்து எல்லா தரப்பிலும் நிரூபூர்த்த நெருப்பு போல் கணன்று கொண்டிருக்கிறது. பொது சிவில் சட்டத்தைப் பற்றி யாரேனும் கருத்து கூற முன் வந்தால் அவர்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்டாலே போதும், தெளிவான முடிவுக்கு வந்து விடலாம்.
  • பொது சிவில் சட்டம் எதைப்பற்றியது
  • பொது சிவில் சட்டத்தினால் யாருக்கு பயன்
  • இந்தச் சட்டத்தினால் யாருக்கு நஷ்டம்
  • பொது சிவில் சட்டம் எதைப் பற்றியது: புது சிவில் சட்டம் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை எனும் இந்த மூன்று விஷயங்களில் மட்டுமே சம்பந்தப்பட்டது. மத வழிபாட்டு முறைகள் கலாச்சார சடங்குகள் இவற்றில் எல்லாம் இந்தச் சட்டம் தலையிட முடியாது. அதேபோல் திருமணம் என்று சொன்னவுடனேயே எப்படி திருமணம் செய்ய வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை பற்றி எல்லாம் இந்த சட்டம் எதுவும் கூற முடியாது. தாலி கட்ட வேண்டுமா, மோதிரம் மாற்றிக்கொள்ள வேண்டுமா, ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமா என்பதெல்லாம் அவரவரது தனிப்பட்ட பழக்கவழக்கங்களின் அடிப்படையில் செய்து கொள்ளலாம்.
  • திருமணத்தைப் பொறுத்தவரையில் இந்தச் சட்டம் ஒன்றே ஒன்றை பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறது. அதாவது பெண்களின் திருமண வயது. பிரசவத்தின்போது இறந்து போகும் தாய்மார்களின் எண்ணிக்கையில் 70% பெண்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. எனவே ஒரு பெண் வயதுக்கு வந்தால் மட்டும் போதாது, அவள் வளர்ச்சி அடைந்து தாயாகும் தகுதியை அடைவதற்கு மேலும் சில ஆண்டுகள் ஆகின்றன என்கிறது விஞ்ஞானம்.
  • இதன் அடிப்படையில் திருமண வயது முடிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக நமக்கு உபரியாக கிடைக்கும் ஒரு லாபம், அந்த பெண் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பையும் பெறுகிறாள். இதை உறுதி செய்வதற்காக ஒரு சட்டம் கொண்டு வந்தால் அதில் எந்த பெற்றோரும் குறை காண மாட்டார்கள் என்பது உறுதியான உண்மை.
  • அடுத்ததாக விவாகரத்து. ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு பெண், கணவனிடம் இருந்து பிரிந்து வருகிறாள். காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இரண்டு குழந்தைகள். இப்படிப்பட்ட பெண்ணுக்கு வரக்கூடிய கண்ணீர், சோகம், மனக்குமுறல், சமுதாயம் அவளை பார்க்கும் பார்வை இவையெல்லாம் உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பொதுவாகவே இருக்கின்றன. இதில் மதம், இனம், சாதி, நாடு, மொழி என்ற எந்த வேறுபாடும் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள ஒரு பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டாத ஒரு நாடோ சமுதாயமோ இருந்தென்ன போயென்ன? எனவேதான் இந்தச் சட்டத்தில் ஒரு பெண் எந்த மதத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் அவளுக்கு ஜீவனாம்சமும் மாதாந்திர உரிமை தொகையும் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. அதை ஏற்றுக் கொள்வதில் நமக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?
  • இதில் முக்கியமாக பேசப்படுவது சொத்துரிமை மற்றும் தத்தெடுக்கும் உரிமை. ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்; தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது; சிறந்த தாய் சிறந்த நாட்டை உருவாக்குகிறாள்; என்றெல்லாம் பேசக்கூடியவர்கள் சொத்து என்று வந்துவிட்டால் மட்டும் சமச்சீராகப் பார்க்காமல் போவது ஏன் என்பது மிக மிக வருத்தத்துக்குரியது. சொல்லப்போனால் உடைமைகளை பாதுகாப்பதில் ஆண்களை விட பெண்கள் தான் சிறந்தவர்கள்.
  • தவறான வாழ்க்கை வாழ்ந்தான் சொத்தை இழந்தான் என்று பல ஆண்களைப் பற்றி நாம் படித்திருக்கிறோம். எங்காவது அதுபோன்று பெண்களைப் பற்றி கேள்விப்பட்டது உண்டா. இப்படிப்பட்ட பொறுப்பும் கடமை உணர்வும் உடைய இந்திய பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தராத நிலையில் அதற்காக ஒரு சட்டம் வந்தால் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டாமா?

இந்த சட்டத்தினால் யாருக்கு பயன்?

  • அனைத்து பெண்களுக்கும் பயன். வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். யாருக்கு நஷ்டம் என்றால், பிற்போக்குவாதிகளுக்கும் மக்களின் இறை அச்சத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனி நபர்களுக்கும்; எத்தனை கோடி பெண்கள் துன்பப்பட்டாலும் பரவாயில்லை நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அரசியல் செய்பவர்களுக்கும்தான். அவர்களுக்கு எனது வேண்டுகோள். பெண்களை மட்டுமே உறுப்பினர்களாக உடைய ஒரு குழுவை அமையுங்கள். அக்குழுவிடம் உங்களது மதத்திற்கான சட்டங்களை வகுக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள். அதன் முடிவு பொது சிவில் சட்டமாகத்தான் இருக்கும்.

இப்பொழுது என்ன அவசியம்?

  • கேள்வியை மாற்றித் தான் கேட்டுப் பாருங்களேன். ஏன் தாமதிக்க வேண்டும்? 50 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய காங்கிரஸ் இதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அது இனி மேலும் முயற்சி எடுக்கும் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை. வாக்குறுதி கொடுத்த பாஜக இதனை செய்ய முன் வந்தால் இப்பொழுது ஏன் செய்கிறீர்கள் என்று கேட்பது நியாயமா? எப்போது செய்ய வேண்டும் என்று யார் முடிவு செய்வது. பிரதமர் மோடி இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கான உண்மையான காரணம் அவர், பிறரின் நோய் தன் நோய் போல் காண்பதனால் மட்டுமே என்பது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை.

நன்றி: தி இந்து (13 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories