- சுதந்திரம் பெற்ற காலத்தில், இந்தியா உலகின் மிகப் பெரும் ஏழை நாடாக இருந்தது. மிக வேகமாகத் தொழில்மயமாவதே ஏழ்மையிலிருந்து வெளியேறும் வழி என அனைவரும் நம்பினர். ஆனால், தொழில் வளர்ச்சியை வேகமாக முன்னெடுக்கத் தேவையான தொழில்நுட்பமும் மூலதனமும் அன்று தனியார் துறையிடம் இருக்கவில்லை.
- எனவே, கனரகத் தொழில்களிலும் அடிப்படைக் கட்டமைப்புகளிலும் அரசே முதலீடுசெய்ய வேண்டும் எனத் தனியார் துறை, பொருளியல் அறிஞர்கள், அரசு என அனைவருமே ஒருமித்த கருத்துகள் கொண்டிருந்தனர். பொதுத் துறை நிறுவனங்கள் இந்தப் பின்னணியில்தான் உருவாகின. அந்தக் காலகட்டத்தில் உலகெங்கும் அரசுகள், தொழில் துறையில் முதலீடுகள் செய்தன.
- அரசு நிறுவனங்கள் என்றாலே ஊழல் மிகுந்தவை, செயல் திறனற்றவை எனும் கருத்துகள் நமது பொதுப்புத்தியில் உள்ளன. எனவே, ஊழல் மலிந்த, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் எனச் சில பொருளியல் விமர்சகர்களும் அறிஞர்களும் கூறும்போது, அவை மாற்றுக்கருத்தில்லாமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 1991 தாராளமயக் கொள்கைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு மக்கள் மனதையும் விட்டு வெகுவாக விலகிவிட்டது.
ஆனால், உண்மை அதுவல்ல!
- 2017-18ம் ஆண்டு, பொதுத் துறை நிறுவனங்களின் வருவாய் ரூ.21.55 லட்சம் கோடிகள். இதில் 184 நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன. அவை ஈட்டிய லாபம் ரூ.1.59 லட்சம் கோடிகள். 71 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன.
- அவற்றின் மொத்த நட்டம் ரூ.31 ஆயிரம் கோடிகள். மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் ஈட்டிய நிகர லாபம் ரூ.1.28 லட்சம் கோடிகள். இது அவற்றின் வருவாயில் 5.9%. சென்ற ஆண்டு பொதுத் துறை நிறுவனங்கள், ரூ.76ஆயிரம் கோடியை அரசுக்கு ஈவுத்தொகையாகக் கொடுத்துள்ளன. எனவே, பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாமே நட்டத்தில் இயங்குகின்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.
- பல பொதுத் துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றனவே எனக் கேள்வி எழலாம். இந்தியாவின் புகழ்பெற்ற டாடா குழுமத்தில், 28 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இயங்கும் நிறுவனங்கள். கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பங்குச் சந்தையில் இல்லாமல் இயங்குகின்றன.
- அவற்றின் சென்ற ஆண்டு வருவாய் ரூ.7.13 லட்சம் கோடிகள். அதில், 80%-க்கும் அதிகமான லாபம் குழுமத்தின் மூன்று நிறுவனங்களிலிருந்து மட்டுமே வருகின்றன. 90-க்கும் அதிகமான நிறுவனங்கள், மிகக் குறைவான லாபத்திலோ அல்லது நட்டத்திலோதான் இயங்கிவருகின்றன. ஒப்பீட்டில், அதிகமான அளவு பொதுத் துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன.
- மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புத் துறைகளில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுத் துறை வங்கிகள், வேளாண்மை மற்றும் சிறு தொழில்களுக்கான நிதித் தேவையைப் பூர்த்திசெய்கின்றன. தேசிய அனல் மின் நிறுவனம், தேசிய புனல் மின் நிறுவனம் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள், இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பெருமளவில் பூர்த்திசெய்கின்றன. அதிக செயல்திறனோடு செயல்படும் அவை, மக்கள் நலனையும் மனதில்கொண்டு இயங்குகின்றன.
- இதில் பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன. அவற்றின் பங்குகள் பங்குச்சந்தையில் உள்ளன.
நாட்டின் பாதுகாப்பு போன்ற பல துறைகளில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் மிக முக்கியமானவை. இந்திய விண்வெளிக்கழகம், நாட்டின் பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, வானிலை போன்ற தேவைகளுக்காக செயற்கைக்கோள்களை அனுப்பி, உலகின் வெற்றிகரமான நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
- 2007-08ல், எரிபொருள் விலை உலகச் சந்தையில் உயர்ந்தபோதும், தன் கட்டணங்களை உயர்த்தாமல், அதேசமயத்தில் லாபத்தோடும் செயல்பட்டது ரயில்வே துறை. பெட்ரோலிய நிறுவனங்களால், அதைச் செய்ய முடியாதபோது, அரசு, அந்த விலை உயர்வைத் தான் ஏற்றுக்கொண்டு, அந்நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்களை வழங்கியது.
- இதனால், பெரும் விலை உயர்வு தவிர்க்கப்பட்டு, ஏழை நுகர்வோரைச் சிரமத்துக்குள்ளாக்காமல் பாதுகாக்க முடிந்தது. பொதுத் துறை நிறுவனங்கள் என்னும் வரையறைக்குள் வராதெனினும், கூட்டுறவுப் பால் துறை நிறுவனங்கள் (அமுல், ஆவின், நந்தினி போன்றவை), லாப நோக்கில்லாமல் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பயன் தரும் வகையில் இயங்கிவருகின்றன.
- இந்திய உணவுக் கழகம், உற்பத்தியாகும் கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருள் உற்பத்தியில் 40% கொள்முதல் செய்கின்றன. அது, பின்னர், பொது விநியோகத்துக்கு அளிக்கப்படுகிறது. 40% கொள்முதல் என்பது, வேளாண் பொருள் வணிகத்தில் ஒரு முக்கிய சக்தி. அது விலக்கிக்கொள்ளப்படுமானால், பெரும் விலை வீழ்ச்சி ஏற்படும். உற்பத்திக்கும் நுகர்வுக்குமான குறைந்த விலை தொடர்புச் சங்கிலி அறும்போது, அது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் உழவர்களையும் ஏழைகளையும் பெருமளவில் பாதிக்கும்.
- 70-80 கோடி ஏழைகள் வாழும் நாட்டில், இது போன்ற சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம் விமான சேவை போன்ற சில துறைகளில் பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. அவை ஏழைகளின் வாழ்வாதாரத்தை எந்த விதத்திலும் பாதிக்காதவை. அதுபோன்ற, ஏழை மக்கள் நலனுக்குத் தொடர்பில்லாத, நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களிலிருந்து அரசு விலகுதல் சரியே.
மக்கள் நலனிலிருந்து சிந்தியுங்கள்
- பொதுத் துறை நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், அவற்றுக்குச் செயல் சுதந்திரம் அளிக்கவும், 1984-ல் அர்ஜுன் சென்குப்தா கமிட்டி அமைக்கப்பட்டது. முதல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 1987-ல் நிறுவனங்களின் உரிமையாளரான அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் கையெழுத்தாகின. 1991-க்குப் பிறகு, அவை மேலும் மேம்படுத்தப்பட்டு, பொதுத் துறை நிறுவனங்கள், அவற்றின் வியாபார அளவைப் பொறுத்து மகாரத்னா, நவரத்னா, மினி ரத்னா என வகைப்படுத்தப்பட்டு, அவற்றுக்குப் பெருமளவும் செயல் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளன.
- பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் பங்குச் சந்தையில் உள்ளன. லாபகரமாகச் செயல்பட்டுவருகின்றன. இந்தியப் பொதுத் துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துவருகின்றன. இவற்றில் பேணப்படும் சமூகநீதி மிக முக்கியமானது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான குறைந்தபட்சச் சமூகப் பாதுகாப்பை வேலைவாய்ப்பு மூலம் பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கிவருகின்றன.
- குறிப்பாக, இன்னும் சமூக, பொருளாதார அலகுகளில் மிகப் பின்தங்கியிருக்கும் தலித் மக்களின் ஒரே புகலிடம் பொதுத் துறை நிறுவனங்கள்தான். லாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும் முடிவுகள், சாமானிய மக்களைப் பெருமளவில் பாதிக்கும்.
- மக்கள் நலன் என்னும் புள்ளியிலிருந்து, இந்த முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26-11-2019)