TNPSC Thervupettagam

பொதுப் பாடத் திட்டம்

August 10 , 2023 477 days 450 0
  • தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள எல்லாக் கல்லூரிகளும் மாநில உயர் கல்வி மன்றம் (TANSCHE) வகுத்துள்ள பொதுப் பாடத்திட்டத்தைப் பின்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரியின் பாடத்திட்டத்தில் 75% ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். 25% மாற்றிக் கொள்ளலாம் என்று அரசாணை கூறுகிறது.
  • அதேவேளையில், மொழிப் பாடம் 100% ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது கவனிக்கத் தக்கது. இந்த ஆண்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். அரசின் இந்நடவடிக்கை விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
  • பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி பெற்ற ஓர் அமைப்பு. பல்கலைக்கழகமே தனியாக ஆட்சிமன்றக் குழு, பாடத்திட்டக் குழுக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தன்மையுடன் தமக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துக் கொள்கிறது.
  • ஒவ்வொரு துறையின் தலைவர் தலைமையில் பேராசிரியர்கள் குழு பாடத்திட்டத்தை உருவாக்கும். அதைப் பல்கலைக்கழகக் கல்விக் குழு ஆராய்ந்து உறுதிப்படுத்தும். இந்த விஷயத்தில் பாடத்திட்டக் குழு இறுதி முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் பெற்றது.
  • இதனால் கிடைக்கும் பன்மைத்துவம் கல்வியின் வளத்தைப் பெருக்கக்கூடியது. அதில் பிராந்திய முக்கியத்துவம் இருக்கும். இந்நிலையில் அரசின், புதிய பாடத்திட்டத்தால் பல்கலைக் கழகங்களின் தன்னாட்சி கேள்விக்கு உள்ளாகும் என்பது கல்வியாளர்கள் பலரும் முன்வைக்கும் விமர்சனம். ஒரே பாடத்திட்டம் என்கிற அறிவிப்பு, பன்மைத்துவத்தையும் இல்லாமல் ஆக்கும்.
  • பொதுவாக, அரசிடமிருந்து நிதியைப் பெறுவது தவிர்த்து வளாகத்தின் எல்லா அதிகாரமும் பல்கலைக் கழகத்திடம் இருக்கும். இந்தப் பொதுப் பாடத்திட்டத்தால், உயர் கல்வி மன்றத்தின் அதிகாரத்துக்குள் பல்கலைக்கழகங்கள் வந்துவிடும் நிலை உருவாகும்.
  • தவிர, பொதுப் பாடத்திட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஒத்தது இது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல்கலைக் கழகங்களில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் உயர் கல்வி மன்றத்தின் பணி. ஆனால், அரசின் நடவடிக்கை இதில் பாரதூரமான மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.
  • அதிகரித்துவரும் பட்டப்படிப்புகளுக்கு இணைத்தன்மை கோரி பல மனுக்கள் தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் பட்டப் படிப்புகளைத் தவிர, இணைத்தன்மை படிப்புகள் பல கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன. அரசு வேலைவாய்ப்பில் இந்த இணைத்தன்மை கேள்விக்கு உள்ளாகும் சூழல் உருவாகிறது.
  • தமிழ்நாட்டில் பெறப்பட்ட பட்டங்கள் சில இணைத்தன்மை அற்றவை எனக் கண்டறியப் பட்டுள்ளன. இதைத் தவிர்க்கும் பொருட்டே இந்தப் பொதுப் பாடத்திட்டம் முன்மொழியப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
  • துறை நிபுணர்களான 922 பேராசிரியர்களைக் கலந்தாலோசித்த பிறகே உயர் கல்வி மன்றம் பொதுப் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. பல பல்கலைக்கழகங்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், பொதுவெளியில் இதற்கு எதிர்ப்பு இருக்கிறது. பொதுப்பாடத்தில் 25% மாற்றிக் கொள்ளலாம் என்றாலும், அதற்கு உயர் கல்வி மன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்.
  • இது பல்கலைக் கழகங்களின் தேவையை கேள்விக்குள்ளாகும். உயர் கல்வியில் அரசியல் தலையீடு அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அரசு, பல்கலைக் கழகங்களின் சுயாட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories