TNPSC Thervupettagam

பொதுப்பெயர் மருந்துகளைப் பரிந்துரைப்பதில் என்ன பிரச்சினை?

August 29 , 2023 501 days 313 0
  • நாட்டில் எல்லா மருத்துவர்களும் பொதுப்பெயர் மருந்துகளையே (Generic medicines) இனி பரிந்துரைக்க வேண்டும்; தவறினால், அபராதம் விதிப்பதுடன் அவர்களுக்கான உரிமம் (License) நீக்கப்படும்என்று தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் எச்சரித்துள்ளது. இது மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு, கடுமையான விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.
  • தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக எடுத்துள்ள இந்தப் புதிய முடிவைத் திரும்பப் பெற வேண்டும்என்று இந்திய மருத்துவக் கழகம் (IMA) மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. என்றாலும், இவ்விஷயத்தில் அரசின் அடிப்படை நோக்கம் குறித்துப் பேசியாக வேண்டியிருக்கிறது.
  • இன்றைய சூழலில் உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 10 கோடிப் பேர் தங்கள் மருந்துச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல், வறுமைக் கோட்டுக்கும் கீழே தள்ளப்படுகிறார்கள்என்கிறது உலக சுகாதார நிறுவனம். மருந்துகளுக்கான செலவு குறையும்போது, நோயாளிகள் தொடர்ச்சியாகச் சிகிச்சையை மேற்கொண்டு விரைவில் குணமடைவார்கள் என்பது நிதர்சனம். இதன்படி, சாமானியர்களின் மருந்துச் செலவைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் பொதுப்பெயர் மருந்துகளைக் கட்டாயம் பரிந்துரைக்கும் நடைமுறை.

பொதுப்பெயர் மருந்துகள் என்றால் என்ன? 

  • ஒரு மருந்தை, அது தயாரிக்கப்பட்ட மூலப்பொருள்களின் வேதியியல் பெயரால் அழைப்பது பொதுப்பெயர் மருந்து’ (Generic medicine) எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம், ஒரு மருந்தை முதன்முதலில் கண்டுபிடித்தால், 20 ஆண்டுகள்வரை அந்த மருந்தைத் தன்னுடைய நிறுவனம் இட்ட பெயரிலும், அது நிர்ணயித்த விலையிலும் விற்க முடியும். இது நிறுவன மருந்து’ (Branded Medicine) எனப்படுகிறது. வழக்கத்தில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் இந்த வகையைச் சார்ந்தவை.
  • 20 ஆண்டுகள் காப்புரிமை காலம் முடிந்த பிறகு, அந்த மருந்தை எந்த நிறுவனமும் தயாரித்து விற்பனை செய்ய முடியும். அந்த மருந்துதான் பொதுப்பெயர் மருந்துஎன்று அழைக்கப்படுகிறது. (பாராசிட்டமால்என்பது பொதுப்பெயர் மருந்து. டோலோ’ (Dolo) என்பது நிறுவன மருந்து). தில்கூட நிறுவனப் பொதுப்பெயர் மருந்துகள்’ (Branded Generics), ‘நிறுவனம் இல்லாப் பொதுப்பெயர் மருந்துகள்’ (Non-Branded Generics) என இரண்டு வகை உண்டு.
  • பெரிய மருந்து நிறுவனங்கள் தயாரித்து, பெரிய மருத்துவ மனைகளில் மருத்துவரின் பரிந்துரைப்படி விற்பனை செய்ய ஏற்பாடு செய்வது முதல் வகை. சிறிய மருந்து நிறுவனங்கள் தயாரித்து, மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல்கூட விற்பனை செய்ய ஏற்பாடு செய்வது இரண்டாம் வகை.
  • அரசு மருத்துவமனைகளிலும் அரசு சார்ந்த பொது சுகாதாரத் திட்டங்களிலும் மக்கள் மருந்தகங்களிலும் நிறுவனம் இல்லாத பொதுப்பெயர் மருந்துகள்தான் விற்கப்படுகின்றன. மருந்துகளின் கண்டுபிடிப்புக்குத் தேவையான ஆராய்ச்சிச் செலவு, விற்பதற்கான விளம்பரச் செலவு, விற்பனைப் பிரதிகள் நியமனச் செலவு ஆகியவற்றை இவை கடந்துவிட்டவை என்பதால், நிறுவன மருந்துகளைவிட 30 முதல் 80% வரை குறைந்த விலையில் இவை கிடைக்கின்றன.

விலையா, தரமா?  

  • பொதுப்பெயர் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அவற்றின் மலிவான விலையை மட்டுமல்ல; அவற்றின் தரம், செயல்திறன் உள்ளிட்ட தன்மைகளையும் கணக்கில்கொள்ள வேண்டும்என்பது மருத்துவர்களின் வாதம். ழக்கத்தில், நோயாளிகளுக்குத் தரமான மருந்து கொடுக்க வேண்டும் என்றுதான் அறம் சார்ந்த மருத்துவர்கள் கருதுவார்கள். நிறுவன மருந்துகளின் தரத்துக்கு அந்தந்த றுவனங்களே உறுதிதருகின்றன.
  • அதேவேளையில், நாட்டில் பொதுப்பெயர் மருந்துகளின் தரம் நிச்சயமற்றதாகவே இருக்கிறது என்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் அந்த மருந்துகளைப் பரிந்துரைக்கத் தயங்கு கின்றனர். பரிந்துரைக்கப்படும் பொதுப்பெயர் மருந்துகளைப் பயனாளிகள் மருந்துக் கடைகளில் வாங்கும் போது, அவற்றுக்கு இணையான மற்றொரு நிறுவனத்தின் மருந்துகளைக் கடைக்காரர் தரவும் வாய்ப்புள்ளது. லாப நோக்கில் சிலர் தரம் குறைந்த மருந்து வகைகளைக் கொடுத்துவிடலாம்.
  • இதுகுறித்த விழிப்புணர்வு இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் குறைவு என்பதால்,மாற்றிக் கொடுக்கப்படும் மருந்துகளால் நோய் குணமடைவதில் பின்னடைவு ஏற்படக்கூடும். இதனால் பாதிக்கப்படுவது நோயாளி மட்டுமல்ல; மருத்துவரின் மீதான நம்பிக்கையும்தான். மேலும், எல்லா மருந்துகளுக்கும் பொதுப்பெயர் மருந்துகள் கிடைப்பதில்லை. வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட பல கலப்பு மருந்துகளுக்கு மூலக்கூறுகள் எண்ணிக்கை 30ஐத் தாண்டும். அத்தனையையும் தனித்தனியாக எழுதுவது மருத்துவர்களுக்குக் கடினம்.
  • மூலக்கூறுகளைச் சரிபார்த்து மருந்தைக் கொடுப்பது கடைக்காரருக்கும் கடினம். சில மருந்துகளுக்கு அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்தைப் பொறுத்து, அதில் கலக்கப்படும் பொடி, இணைப் பொருள்கள் வித்தியாசப்படும். இது மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும்; மருந்துக் கடைக்காரருக்குத் தெரியாது.
  • இந்தப் பொடியும் இணைப் பொருள்களும் மாறினால், அந்த மருந்து குடலில் கிரகிக்கப்படும் தன்மை மாறுபடும். அப்போது அதன் செயல்பாடும் மாறும். மருத்துவர் எதிர்பார்க்கும் மருந்தின் செயல்திறன் குறையும். குறை தைராய்டு மாத்திரைகள், வலிப்புநோய் மாத்திரைகள், ரத்த உறைவைத் தடுக்கும் மாரடைப்புக்கான மாத்திரைகள் போன்றவை இதற்கு உதாரணங்கள்.
  • மருந்துத் தரக்கட்டுப்பாடு: அடுத்ததாக, அயல்நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் பொதுப்பெயர் மருந்துகளின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுமுறையில் போதாமைகள் உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற நாடுகளில் விற்கப் படும் பொதுப்பெயர் மருந்துகளின் தரம் எந்த விதத்திலும் குறைவதில்லை. அங்கு பயோஈக்குவலென்ஸ்’ (Bioequivalence) எனும் மருந்துத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுமுறை இருக்கிறது.
  • குறிப்பிட்ட ஒரு நிறுவன மருந்தின் மூலக்கூறும், அதன் பொதுப்பெயர் மருந்தின் மூலக்கூறும் அளவு, தரம், வீரியம், செயல்திறன், பாதுகாப்பு, பக்கவிளைவு போன்றவற்றில் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா என்று பரிசோதிக்கும் துல்லியமான ஆய்வுமுறை இது. அங்கு எல்லா மருந்துகளும் இந்தப் பரிசோதனைக்கு உட்பட்ட பிறகே சந்தைக்கு வருகின்றன.
  • இந்தியாவிலும் இந்த ஆய்வுமுறை நடைமுறையில் உள்ளது. என்றாலும், இங்கு தயாராகும் மருந்துகளில் 1% தான் ஆய்வுக்கு உட்படுகின்றன. எல்லா மருந்துகளின் தரத்தையும் தொடர்ந்து கண்காணிக்கப் போதிய ஆய்வுக்கூட வசதிகள் இங்கு இல்லை. மருந்துக் கடைகளைக் கண்காணிக்கப் போதிய ஆய்வாளர்களும் இங்கு இல்லை.
  • அதனால், மருந்து களின் தரத்துக்கு இங்கு உத்தரவாதம் இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் சில இருமல் மருந்துகள் தரமில்லாதவை என்று உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்ததை இங்கு நினைவுகூரலாம். மேலும், சிறிய, பெரிய, பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் என எல்லாத் தரப்பு நிறுவனங்களும் சில சமயங்களில் தரம் குறைந்த மருந்துகளை விற்பனை செய்ததை வரலாறு பதிவுசெய்துள்ளது.

அரசு என்ன செய்யலாம்? 

  • நாட்டில் ஆயிரக்கணக்கான நிறுவனப் பெயர் மருந்துகளுக்கு உரிமம் கொடுத்துவிட்டு, அவற்றை மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது என்று அரசு கட்டாயப்படுத்துவது நகைமுரண். மருந்துச் செலவைக் குறைப்பதற்காக மருத்துவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை விட, மருந்து நிறுவனங்களுக்கான தயாரிப்பு-விற்பனை நெறிமுறைகளைச் சரிப்படுத்துவதுதான் அரசின் முதற் கடமையாக இருக்க வேண்டும். முதலில், நிறுவன மருந்து களுக்கு உரிமம் கொடுப்பதை அரசு கைவிட வேண்டும். ஒரே மருந்து, ஒரே நிறுவனத்தால் பல பெயர்களில், வெவ்வேறான விலைகளில் விற்பதை அரசு அனுமதிக்கக் கூடாது.
  • விற்கப்படும் எல்லா மருந்துகளும் தரமானவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மருந்துத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுமுறையை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். இன்னும் பல அத்தியாவசிய மருந்துகளின் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். மருந்து நிறுவனங்களுக்கு மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்தல், தயாரிப்புக் கருவிகள் வாங்குதல் போன்றவற்றில் வரிவிலக்கு அளித்து, மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசே மருந்துகளைத் தயாரித்து விற்க முன்வந்தால், எல்லா மருந்துகளையும் மலிவு விலையில் கொடுக்கலாம். அப்போதுதான் அரசின் நோக்கம் நல்லவிதமாக நிறைவேறும்.

நன்றி : இந்து தமிழ் திசை (29– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories