- கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிக் கொன்றவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்து அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
- சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை 2022 அக்டோபர் மாதம் சதீஷ் என்பவர் புறநகர் ரயில் முன் தள்ளிக் கொலைசெய்தார். அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தன்னைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். கைது உத்தரவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெவ்வேறு தேதிகள் இருந்ததற்குக் காவல் துறை உரிய விளக்கம் அளிக்காத நிலையில், நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு, சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்து உத்தரவிட்டது.
- 2021 செப்டம்பரில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்வேதாவை, ராமச்சந்திரன் என்கிற இளைஞர் தாம்பரம் ரயில் நிலையத்தில் கத்தியால் குத்திக் கொன்றார். சமீபத்தில், பணி முடிந்து ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரீத்தி என்கிற இளம்பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் கைபேசியைப் பறிக்க முயன்றபோது, ரயிலில் இருந்து அப்பெண் தவறி விழுந்தார். தலையில் பலத்த காயங்களோடு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மருத்துவ மனையில் அவர் உயிரிழந்தார். பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதை அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.
- பணியிடங்களிலும் கல்வி நிலையங்களிலும் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்குப் பொது இடங்களிலும் பயணங்களின்போதும் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் அரசுதான் பொறுப்பு.
- அந்த அடிப்படையில்தான் பெண்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை செயல்படுத்தப்படுவதில் உள்ள உறுதியையும் நெகிழ்வுத்தன்மையையும் பொறுத்துதான் பெண்களின் பாதுகாப்பு அமைகிறது என்பது சட்டத்தின் மீதான சாமானிய மக்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கக்கூடும்.
- பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையும் இரண்டு மாதங்களுக்குள் வழக்கும் முடிக்கப்பட வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், தற்போதுவரை நிலுவையில் இருக்கும் வழக்குகளே சட்டம் எப்படிச் செயல்வடிவம் பெறுகிறது என்பதற்கான சான்றுகளாக உள்ளன. சட்ட நெறிமுறைகளை வரையறுப்பதில் காட்டப்படும் தீவிரத்தன்மை, அவை செயல்படுத்தப்படுவதிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அரசுகள் அதை உறுதிப்படுத்த வேண்டும்.
- பொது இடங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெண்கள் மீதான குற்றங்கள் வெவ்வேறு வடிவங்களில் பல்கிப் பெருகியபடி உள்ளன. அதற்கேற்பச் சட்டங்களை உருவாக்குவதும் அமலில் உள்ளவற்றில் ஆக்கபூர்வமான திருத்தங்களைச் செய்ய வேண்டியதும் அவசியம். இரவு நேரத்தில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காகத் தமிழ்நாடு காவல் துறை ‘பெண்கள் பாதுகாப்புத் திட்ட’த்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல் ஒவ்வொரு நிலையிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்பட்சத்தில்தான் பொதுவெளி அனைவருக்குமான இடமாக இருக்கும். அரசு, காவல் துறை, நீதிமன்றங்கள் ஆகிய மூன்று அமைப்புகளின் ஒருங்கிணைந்த உறுதியான செயல்பாடே இதைச் சாத்தியப்படுத்தும்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 07 – 2023)