பொன் விழா கண்ட இந்திய தென் கொரிய வர்த்தகக் கூட்டுறவு
- கடந்த 1973-ம் ஆண்டு இந்தியா, தென்கொரியா இடையே அதிகாரப்பூர்வமான வர்த்தக தொடர்பு தொடங்கியது. பொன் விழா (50 ஆண்டுகள்) கண்ட இந்த கூட்டுறவு அபரிமிதமான வளர்ச்சியை எட்டி உள்ளது. தொடக்கத்தில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மதிப்பு வெறும் ரூ.121 கோடியாக இருந்தது. இது 2023-ம் ஆண்டில் ரூ.2.4 லட்சம் கோடியைத் தாண்டி, 1,940 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பின் வலிமையையும் பரஸ்பர நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. தென்கொரியாவின் வெளிநாட்டு முதலீடுகளில் இந்தியா 13-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் கொரியாவின் முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், முன்னணி முதலீட்டாளர்களுடன் ஒப்பிடும்போது இன்னும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. இந்த நிலையை மேம்படுத்த இரு நாடுகளும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. கொரியாவின் முதலீடுகள் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
- இந்தியாவில் தென்கொரிய முதலீடுகள் தென்கொரியா இந்தியாவில் இதுவரை ரூ.69 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளது ஹூண்டாய், சாம்சங், எல்ஜி, கியா, லோட்டே, BGMI போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையில் முக்கியமான இடங்களைப் பிடித்திருக்கின்றன. குறிப்பாக சாம்சங் தனது நொய்டா உற்பத்தி ஆலையில் உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையத்தை அமைத்திருக்கிறது. ஹூண்டாய், கியா போன்ற வாகன உற்பத்தியாளர்கள், இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் போக்கையே மாற்றி அமைத்தது மட்டுமல்லாமல், அவர்களது சென்னை மற்றும் ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகள் நாட்டின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரிப்பதற்கும் தென்கொரிய உற்பத்தியாளர்களே இங்கு தொழிற்சாலைகளை அமைத்திருக்கின்றனர். டாடா டேவூ போன்ற கொரிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த பல இந்திய நிறுவனங்களும் உள்ளன.
- வணிக ஒத்துழைப்பின் விரிவாக்கம்: 1980-களில் தென்கொரிய நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழையத் தொடங்கின. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இதன் பின்னணியில், மின்னணு சாதனங்கள், வாகன உற்பத்தி, மற்றும் உணவு பொருட்கள் ஆகிய துறைகளில் தென்கொரிய நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலூன்றத் தொடங்கின. இப்போது நாம் பயன்படுத்
- தும் கார், ரெஃப்ரிஜிரேட்டர், ஏர்கண்டிஷனர், வாஷிங் மெஷின், மொபைல் போன், சாக்லேட்டிலிருந்து நூடுல்ஸ் வரை எத்தனை பொருட்கள் கொரிய கூட்டுறவில் தயாரானது என்பது தெரியாத அளவுக்கு நம்முடைய வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது தென்கொரியா.
- கலாச்சார பரிமாற்றத்தின் முக்கியத்துவம்: பொருளாதார ஒத்துழைப்புக்கு அப்பால், கலாச்சார பரிமாற்றமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்கொரியாவின் K-Pop இசை, தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் இந்திய இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் ஒத்துழைப்பு 'இந்தியாவில் தயாரிப்போம்' மற்றும் ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற திட்டங்கள் இரு நாடுகளையும் தொழில்நுட்ப மேம்பாட்டில் இணைத்துள்ளது. நுண்ணறிவு தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, மற்றும் பசுமை தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தென்கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு துறைகளில் தங்கள் இருப்பை விரிவுபடுத்தி வருகின்றன. நிதி, பாதுகாப்பு, பதப்படுத்தப்பட்ட உணவு, ஆடை, விநியோகச் சங்கிலிகள், உள்கட்டமைப்பு விரிவாக்கம், விண்வெளித் தொழில் போன்றவை இதில் அடங்கும். மேலும், பல தென்கொரிய நிறுவனங்கள் சமீபத்தில் இந்தியாவில் செயல்பாட்டுத் தளங்களை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன. இது இந்தியாவில் தென்கொரியாவின் நீண்டகால முதலீடுகள் தொடர்ந்து வளரும் என்பதைக் குறிக்கிறது.
- எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள்: பருவநிலை மாற்றம் என்னும் உலகளாவிய சவாலை எதிர்கொள்ள இந்தியாவும் கொரியாவும் இணைந்து செயல்படும் புதிய திட்டங்களை உருவாக்கி,சோலார் ஆற்றல், காற்றாலை ஆற்றல்போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை மேம்படுத்துவதிலும், எரிசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் இரு நாடுகளும் கைகோக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை தொழில்நுட்பங்களை உருவாக்கி பயன்படுத்துவதில் இரு நாடுகளும் தங்கள் அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும். இந்த கூட்டு முயற்சி வரும் காலங்களில் பசுமையான, தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க வழிவகுக்கும். தொழில்நுட்ப புதுமைகள், வணிக சில்லறை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் அதிக ஒத்துழைப்பை மேற்கொள்ளும் திறன் உள்ளது. இந்தியாவின் திறமையான இளம் மக்கள் தொகை, விரிவான சந்தை, இயற்கை வளங்கள் தென்கொரிய முதலீட்டாளர்களை மேலும் ஈர்க்கின்றன.
- வளர்ச்சியின் புதிய உச்சங்களை நோக்கி பயணிக்கும் இந்தியாவுடன் கொரியா தனது பொருளாதார பந்தத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. உலகின் மிகப்பெரும் மக்கள்தொகையைக் கொண்ட நாடாகவும், ஐந்தாவது பெரிய பொருளாதார வல்லரசாகவும் திகழும் இந்தியா, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது. அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவும் தென்கொரியாவும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பன்முகப்படுத்தி, இரு நாடுகளும் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளன. இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வணிகபரிமாற்றங்கள், முதலீடுகள் என அனைத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது. கலாச்சார பரிமாற்றங்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. பொருளாதாரம், தொழில்நுட்பம், வர்த்தகம் என பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் கைகோக்கும் வாய்ப்புகள் ஏராளம். இந்த வளமான கூட்டுறவு இரு நாடுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2025)